|
|
செய்யுள்
94
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
அளிகள்
பாட்டெடுப்பப் புறவுபாட் டொடுங்கக்
காந்தலங் கடுக்கை கனறன மலரக்
கோட லீன்று கொழுமுனை கூம்பப்
பிடவமுங் களவு மொடுநிறை பூப்ப
வான்புறம் பூத்த மீன்பூ மறையக் |
10
|
|
கோப
மூர்தர மணிநிரை கிடப்பத்
தென்கா றிகைப்ப வடகால் வளரப்
பொறிவிழிப் பாந்தள் புற்றிளை வதிய
வரியுட லீயல் வாய்தொறு மெதிர்ப்ப
விடிக்குர லானேற் றினமெதிர் செறுப்பப் |
15
|
|
பொறிகுறி
மடமான் சுழித்தலைக் கவிழ
முடையுடை லண்டர் படலிடம் புகுதக்
கோவிய ரளையுடன் குலனொடு குளிர்ப்பக்
காயாக் கண்கொள முல்லையெயி றுறழ
முசுக்கலை பிணவுடன் முழையுறை யடங்கக் |
20
|
|
கணமயி
னடனெழக் காளிகூத் தொடுங்கச்
சாதக முரல்குரல் வாய்மடை திறப்ப
மாக்குயின் மாழ்கிக் கூக்குர லடைப்பப்
பனிக்கதி ருண்ணச் சகோரம் பசிப்ப
வுடைநற வுண்டு வருடை வெறுப்ப |
25
|
|
வகில்சுடு
பெருமபுன முழுபதன் காட்ட
வெறிவிழிச் சவரர் மாவடி யொற்ற
மணந்துடன் போகுநர்க் குயங்குவழி மறுப்பப்
புலிக்குர லெயிற்றியர் பூவினிற் பரப்பக்
குழவியங் கதிர்பெறத் திருமல ரணங்க |
30
|
|
வினைத்தொடு
கயிரவ மெதிரெதிர் மலரக்
குமரியர் காமமுங் கூவலும் வெதுப்புற
நிலமக ளுடலமுந் திங்களுங் குளிர
வொலிகட லிப்பி தரளஞ் சூற்கொள
விவைமுதன் மணக்க வெழுந்தகார் கண்டை |
35
|
|
வறுநீர்
மலரென மாழ்கலை விடுமதி
மறையடி வழுத்திய மறைவனத் தொருநாண் மணிச்சுடர்
நறுநெய் கவர்மதிக் கருப்பைக்
கிருவகை யேழெனுந் திருவுல கனைத்துங்
கொடுத்தவன் கூடல் வழுத்தினர் போல |
40
|
|
விருபுறம்
போற்ற வொருதேர் வரத்தினர்க்
கொன்னலர் முற்றி யொருங்குபு படராப்
பாசறை சென்ற நாணிலங் குழிய
வெண்ணிவிரற் றேய்ந்த செங்கரங் கூப்புக
கொய்தளி ரன்ன மேனி |
|
|
மொய்யிழை
பூத்த கவின்மலர்க் கொடியே. |
(உரை)
கைகோள்: கற்பு. தோழி கூற்று
துறை: பருவங்
காட்டி வற்புறுத்தல்.
(இ-ம்.) இதனை, பெறற்கரும்
பெரும் பொருள் (தொல். கற்பி. 9) எனவரும் நூற்பாவின்கண் பிற என்பதன்கண் அமைத்துக்
கொள்க.
30
- 31: கொய்..........................கொடியே
(இ-ள்)
கொய் தளிர் அன்ன மேனி-கொய்த மாந்தளிரைப் போன்ற வாடிய மேனியினிடத்து; மொய்
இழை பூத்த கவின் மலர்க் கொடியே-அழகுமிக்க அணிகலன்கள் ஆகிய மலர்கள் மலர்ந்துள்ள
அழகிய பூங்கொடி போல்வோய்! கேள், என்க.
(வி-ம்.)
தலைவனது பிரிவாற்றாமையால் திருமேனி ஒளி மழுங்கி இருத்தலின் கொய்தளிர் மேனி என்றார்.
அணிகலன்களாகிய மலர்களை மலர்ந்துள்ள பூங்கொடி என்க. மொய்யிழை-மிக்க அணிகலன்.
கவின்-அழகு. மலர்க்கொடி: அன்மொழித் தொகை.
1
- 8: அளிகள்..............................வதிய
(இ-ள்)
அளிகள் பாட்டு எடுப்ப-வண்டுகள் இசை பாடத்தொடங்காநிற்பவும்; புறவு பாட்டு ஒடுங்க-புறாக்களின்
குரலோசை அடங்காநிற்பவும்; காந்தள் அம் கடுக்கை கனல் தனம் மலர-செங்காந்தளும்
அழகிய கொன்றையும் நெருப்புப் போலவும் பொன்போலவும் மலராநிற்பவும்; கோடல் ஈன்று
கொழுமுனை கூம்ப-வெண்காந்தள் அரும்பிக் கலப்பைக் கொழுமுனை போல் கூம்பாநிற்பவும்;
பிடவும் களவும் நிறை பூப்ப-பிடவஞ்செடியும் களாவும் நிறைய மலரவும்; வான்புறம் பூத்த
மீன்பூ மறைய- வானத்தின்கண் தோன்றிய விண்மீன்களாகிய மலர்கள் மறையவும்; கோபம்
ஊர்தர-இந்திர கோபங்கள் யாண்டும் தவழாநிற்பவும்; மணிநிரை கிடப்ப-மணித்திரள்கள்
அசைவின்றிக் கிடப்பவும்; தென்கால் திகைப்ப-தென்றல் அடங்கவும்; வடகால் வளர-வாடை
மிகாநிற்பவும்; பொறிவிழி பாந்தள் புற்று அளைவதிய-தீப்பொறி சிதறுகின்ற கண்ணையுடைய
பாம்புகள் புற்றின்கண் வளையில் ஒடுங்காநிற்பவும் என்க.
(வி-ம்.)
அளிப்பாட்டெடுத்தல் முதலியன கார்ப்பருவத்தொடக்கத்தில் நிகழும் என்க. அளிகள்-வண்டுகள்.
புறாக்கள் கார்ப்பருவத்தில் ஆரவாரமின்றி அடங்கி இருத்தல் இயல்பு. செங்காந்தண்
மலருக்குக் கனலும் கடுக்கை மலருக்குத் தனமும் உவமைகள். இது முறை நிரனிறை உவமை. கடுக்கை-
கொன்றை. தனம்-பொன். கோடல்-வெண்காந்தள். இதன் அரும்பிற்குக் கொழுமுனை உவமை.
களவு-களாச் செடி. களவும் ஒடு என்புழி ஒடு, இசைநிறை. மீன்-விண்மீங் கோபம்-இந்திர
கோபம். தென்கால்-தென்றல். வடகால்-வாடை. பாந்தள்-பாம்பு. அளை-வளை.
9
- 15: வரி.....................................அடங்க
(இ-ள்)
வரி உடல் ஈயல் வாய் தொறும் எதிர்ப்ப- வரிகளையுடைய ஈயல் இடந்தொறும் எதிர்ப்படவும்;
இடிகுரல் ஆன் ஏறு இனம் எதிர் செறுப்ப-இடியோசையுடனே எருதுக் கூட்டங்கள் எதிர் முழங்கவும்;
பொறிக்குறி மடமான் சுழிதலை கவிழ- புள்ளிகளாகிய குறிகளையுடைய இளமான்கள் சுழியுடைய
தம் தலையைக் கவிழ்த்துக் கொள்ளவும்; முடை உடல் அண்டர் படல் இடம் புகுத-முடை நாற்றமுடைய
உடலையுடைய இடையர்கள் படல் அமைந்த தம் சிறு குடிலில் புகா நிற்பவும்; கோவியர் குலனொடு
அளையுடன் குளிர்ப்ப-இடைச்சியர் தங்கூட்டத்தோடும் தயிரோடும் குளிரடையாநிற்பவும்;
காயாக் கண்கொள-காயாஞ் செடிகள் கண்போல மலரா நிற்பவும்; முல்லை எயிறு உறழ- முல்லைக்கொடிகள்
மகளிர் பற்கள் போன்று அரும்பவும்; முசுக்கலை பிணவுடன் முழை உறை அடங்க-ஆண் குரங்க்கள்
தத்தம் பென் குரங்குகளுடனே மலைமுழையாகிய தம்மிருப்பிடத்தே அடங்காநிற்பவும் என்க.
(வி-ம்.)
ஈயல்-இறகு பெற்றுப் பறக்கும் சிதல். இச்சிதலின் உடலில் வரிகள் உண்மையின் வரியுடல்
ஈயல் எனப்பட்டது. கார்ப்பருவம் மழை பெயத் தொடங்கும் முன்னர் இவைகள் புற்றினின்றும்
வெலிப்பட்டுப் பறந்து வீழ்ந்து மடியும் இயல்புடையன. இடிமுழங்க அவற்றிற் கெதிராக ஆனேறுகளும்
முழங்க என்பது கருத்து. பொறி-புள்ளி. முடை-ஒருவகை நாற்றம். அண்டர்-இடையர். படலிடம்-படலாலாய
குடிசையுமாம். கோவியர்-இடைச்சியர். தயிர் குளிர் காலத்தே
தோயாதிருத்தலின் தயிரொடு என்றார். இடைமகளிர் தம் தயிர்ப் பானையோடு குளிரால்
நடுங்கி இருண்டனர் என்பது கருத்து. முசு-குரங்கு. பிணவு-பெண். முழையுறை: பண்புத்தொகை.
16
- 22: கணமயில்.......................................ஒற்ற
(இ-ள்)
மயில் கணம் நடன் எழ-மயிலினங்கள் கூத்தாடாநிற்பவும்; காளிகூத்து ஒடுங்க-காளி கூத்தாடல்
ஒழியவும்; சாதகம் முரல் குரல் மடைவாய் திறப்ப-வானம்பாடிப் பறவைகள் பாடுங்குரலெடுத்து
மூடிய வாயைத் திறந்து பாடாநிற்பவும்; மாகுயில் மாழ்கி கூக்குரல் அடைப்ப-மாமரத்தின்கண்
குயில்கள் மயங்கிக் கூவும் தங்குரலோசையை அடக்கவும்; பனிக்கதிர் உண்ண சகோரம்
பசிப்ப-குளிர்ந்த திங்களின் நிலாவை உண்ணுதற்குச் சகோரப்பறவைகள் பசித்திருக்கவும்;
உடை நறவு உண்டு வருடை வெறுப்ப-தேனடை உடைந்து ஒழுகும் தேனைப் பருகி மலையாடுகள் அவற்றை
வெறுப்பவும்; அகில் சுடு பெரும் புனம் உழுபதன் காட்ட-அகின் மரங்களைச் சுட்ட பெரிய
கொல்லைகள் உழுவதற்குரிய பருவத்தைக் காட்டா நிற்பவும்; வெறி விழிச் சவரர் மாஅடி
ஒற்ற-வெறித்த கண்களையுடைய வேடர்கள் விலங்குகளின் அடிச்சுவடுகளை ஆராயா நிற்பவும்
என்க.
(வி-ம்.)
கணம்-கூடடம். நடன்-நடம்: போலி. கூத்து. காளி-பாலைநிலத்தெய்வம். பாலைத்தன்மை
கெடலின் அவள் கூத்தொடுங்குவதாயிற்றென்க. சாதகம்-வானம்பாடிப்பறவைகள். இவை மழைத்துளியை
உண்டு வாழ்வன. ஆதலின் இவை முகிலை கண்டுழி வாய் திரந்து பாடலாயின என்றவாறு. குயில்
வேனிற் காலத்தில் கூவிக் கார்ப்பருவத்தில் குரலவிந்து இருக்கும் இயல்புடையன என்க.
சகோரம்- நிலவொளியை உண்டுவாழும் ஒருவகைப் பறவை. கார்ப்பருவத்தில் இவற்றிற்கு
நிலவொளி கிடைத்தலின்மையின் பசித்திருந்தன என்பது கருத்து. பனிக்கதிர் என்றது
நிலாவை. நறவு-தேன். வருடை-மலையாடு. புனம்-கொல்லை. பதன்-செவ்வி. வெறிவிழி-வினைத்தொகை.
சவரர்-வேடர். மா-விலங்கு. அடி ஒற்ற என்றது அவற்றை வேட்டையாடுதற் பொருட்டு அடிச்சுவடுகளை
ஆராயாநிற்ப என்றவாறு.
23
- 30: மணந்து.......................................மணக்க
(இ-ள்)
மணந்து உடன் போகுநர்க்கு-களவினால் மணந்து பாலை நிலத்தே செல்லும் காதலர்களுக்கு;
உயங்குவழி மறுப்ப-அவர்கள் வெப்பத்தால் வருந்துதற்குக் காரணமான பாலைநில வழியைத்
தடுத்தற்கு; புலிக்குரல் எயிற்றியர் பூவினில் பரப்ப-புலிநகம் அணிந்த கழுத்தையுடைய
பாலைநிலமகளிர் அந்நிலத்திலே இயங்காநிற்பவும்; குழவி அம் கதிர் பெற திருமலர்
அணங்க-இளஞாயிற்றின் ஒளியைப் பெறுதற்கு இயலாமல்
தாமரை மலர்கள் வாடாநிற்பவும்; கயிவரம் இனத்தொடு எதிர் மலர-ஆம்பல்கள் தம்மினத்தோடே
எதிர்ப்படும் இடந்தோறும் மலராநிற்பவும்; குமரியர் காமமும் கூவலும் வெதுப்புற-கன்னி
மகளிரின் காமமும் கிணற்று நீரும் உள்ளே சுடாநிற்பவும்; நிலமகள் உடலமும் திங்களும்
குளிர-நிலமகளின் உடம்பும் திங்கள் மண்டிலமும் குளிராநிற்பவும்; ஒலி கடல் இப்பி-
முழங்காநின்ற கடலினிடத்துள்ள இப்பிகள்; தரலம் சூல்கொள- முத்துக்களைக் கருக்கொள்ளவும்;
இவை முதல் மணக்க-இன்னோரன்ன குறிகள் தோன்றும்படி என்க.
(வி-ம்.)
இச்செய்யுளில் கார்ப்பருவ நிகழ்ச்சிகள் பெரிதும் அழகாக வருணிக்கப்பட்டிருத்தல்
உணர்க. மணந்துடன் போகுநர் என்றது இயற்கைப் புணர்ச்சி எய்திய தலைவன் தலைவியர்களை.
பாலை வழியில் தலைவன் தலைவியர் உடன்போக்கிற்கு எயிற்றியர் இயக்கம் தடையாயிருந்தது
என்பது கருத்து. புலி-ஆகுபெயர். புலி போன்ற குரலையுடைய எயிற்றியர் எனினுமாம். எயிற்றியர்-
பாலைநில மகளிர். பூ-நிலம். குழவியம் கதிர்-இளஞாயிறு. முகில்கள் மறைத்தலின் தாமரை
மலர்கல் ஞாயிற்று ஒளி பெறாமல் வருந்தின என்பது கருத்து. திருமலர் திருமகள் இருக்கையாகிய
மலர். எனவே தாமரைமலர் ஆயிற்று. கயிரவம்-ஆம்பல். இனம் என்றது நெய்தல். குவளை
முதலியவற்றை. குமரியர்-கன்னிமகளிர். கார்ப்பருவத்தில் நீர் உள்ளே வெதுவெதுப்பாக
இருத்தல் இயல்பு. கூவல்-கிணறு. தரளம்-முத்து. இப்பிகள் மழை பெய்யுங்கால் செதிளைத்திரந்து
மழைத்துளியை ஏற்றுக்கொள்ளுதலால் அத்துளி முத்தாகும் என்பது நம் முன்னோர் கருத்து.
ஆதலின் இப்பி தரளம் சூல்கொள என்றார். மணத்தல்-தோன்றுதல்.
30
- 31: எழுந்த...............................விடுமதி
(இ-ள்)
எழுந்த கார் கண்டை-வந்த கார் காலத்தை நீ கண்டாய் அல்லையோ ஆகலின்; வறுநீர்
மலர் என மாழ்கலை விடுமதி-வற்றிய நீரிலுள்ள மலர்கள் வாடுதல் போன்று நெஞ்சம் வாடுதலை
இனி ஒழிவாயாக என்க.
(வி-ம்.)
நம்பெருமான் கார்ப்பருவத் தொடக்கத்தே மீண்டு வருவேன் எனக் கூறிப் போயினராதலின்
அவர் கூறிய கார்வந்தது. இனி அவர் தேர் வருதல் ஒருதலை. ஆதலின் வருந்தற்க என்றவாறு.
கார்: ஆகுபெயர். கண்டை: வினைத்திரி சொல். மாழ்கல்-வாடுதல். மாழ்கலை என்பதை
முன்னிலை யொருமை வினைமுற்றாகக் கொள்ளினுமாம். மதி: முன்னிலையசை.
32
- 39: மறை..........................கூப்புக
(இ-ள்)
மறை அடி வழுத்திய மறை வனத்து ஒருநாள்-வேதங்கள் திருவடிகளை வழிபட்ட திருமறைக்காட்டில்
முன்னொரு காலத்தே; மணிசுடர் நறுநெய் கவர்மதி கருப்பைக்கு- அழகிய திருவிளக்கின்
நெய்யைப் பருகுதற்கு நினைவுற்ற காரெலிக்கு; இருவகை ஏழ் எனும் திரு உலகு அனைத்தும் கொடுத்தவன்-கீழேழுலகம்
மேலேழுலகம் என்னும் இருவகைப்பட்ட செல்வமிக்க உலகம் முழுவதையும் வழங்கிய சிவபெருமானுடைய;
கூடல் வழுத்தினர் போல-மதுரைத் திருப்பதியை வழிபட்ட மெய்யடியார் போல; ஒன்னலர்
முற்றி-பகைவரையெல்லாம் வென்று; ஒருதேர் வரத்தினர்க்கு- ஒப்பற்ற தேர்மேல் வருதலையுடைய
நம்பெருமானுக்கு; இருபுறம் போற்ற ஒருங்குபு படர பாசறை சென்ற நாள்-தம்மிரு பக்கத்தினும்
வாழ்த்தெடுக்கும்படி படைகள் நெருங்கிச் சூழும்படி முன்னர்ப் பாசறைக்குப் போன நாள்களை;
நிலம் குழிய எண்ணி-நிலம் குழிந்துபோம்படி ஒற்றி எண்ணிய கையால்; விரல் தேய்ந்த-விரல்
தேய்ந்துள்ள; செங்கரம் கூப்புக-நின் சிவந்த கைகளைக் கூப்பி வணங்குவாயாக என்க.
(வி-ம்.)
மறை-வேதம். இறைவனுடைய திருவடிகளை மறைகள் வழிபட்டமையால் திருமறைக்காடு என்னும் பெயர்
பெற்ற திருப்பதியின்கன் என்றவாறு. அஃது இக்காலத்தே வேதாரணியம் என்று வழங்கப்படுகின்றது.
வழுத்துதல்-வாழ்த்தி வழிபடுதல். மணி-அழகு. கவர்மதி: வினைத்தொகை. கருப்பை-கரிய
எலி. கீழேழுலகம் மேலேழுலகம் என்பவாகலின் இருவகை ஏழெனும் உலகு என்றார். இறைவன்
திரு முன்னர் ஏற்றப்பட்ட நெய்யைப் பருக எண்ணி ஒரு காரொலி அவ்விளக்கில் முகத்தை
இட்டதாக அவ்வழி அதன் கண்ணதாகிய திரி தூண்டப்பட்டு விளக்கு நன்கு எரிதலின் அச்செயல்
இறைவனால் சிவபுண்ணியச் செயலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மகிழ்ந்து அவ்வெலியை மறுமையில்
அரசனாக்கி உலகாளச் செய்தனன் என்பது வரலாறு. ஒன்னலர்- பகைவர். இறைவன் அடியார்
உட்பகை புறப்பகைகளைத் துவரக்களைதல் போல நம்பெருமானும் தம் பகைவர்களை யெல்லாம்
வென்று வாகை சூடி வருவார் என்பாள் கூடல் வழுத்தினர் போல ஒன்னலர் முற்றி ஒரு தேர்
வரத்தினர் என்றாள். வரத்தினர்-வருதலையுடையர். குழிய-குழிந்த, தேய்ந்த. தலைவன்
சென்ற நாள்களை விரலால் தரையிற் கீறி நாள்தொறும் அவற்றை விரலால் ஒற்றி ஒற்றி
எண்ணுதலின் அவள் விரல் தேய்ப்புண்டிருந்தது என்க. இதனோடு,
வாளற்றுப்
புற்கென்ற கண்ணு மவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல் |
(குறள்.
1261) |
என்னும் திருக்குறளையும்
ஈண்டு நினைக. நம்பெருமான் வாய்மை பிறழார். ஆதலின் அவர் கூறிச்சென்ற காலத்தே
மீண்டு வருதல் ஒருதலை. அவர் குறித்துச் சென்ற கார்ப்பருவம் இதோ வந்துற்றது. ஆதலால்
இனி அவர் தே வருதலும் ஒருதலை; எனவே நீ வருந்தற்க! என்றவாறு.
இதனை,
கார் வந்தது கண்டனை, இனி மாழ்குதலை விடுக, கூடல் வழுத்தினர் போல ஒன்னலரை முற்றித்
தேர் வரத்தினர்க்கு, கரங் கூப்புக வென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனுமவை.
|