பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 38

நேரிசையாசிரியப்பா

 
   
5
  கோடிய கோலினன் செருமுகம் போலக்
கனைகதிர் திருகிக் கல்சேர்ந்து முறைபுகப்
பதினெண் கிளவி யூர்துஞ் சியபோற்
புட்குலம் பொய்கை வாய்தழக் கொள்ள
வேள்சரத் துடைகுநர் கோல நோக்கி
10
  யிருண்மகள் கொண்ட குறுநகை போல
முல்லையு மௌவலு முருகுயிர்த் தவிழத்
தணந்தோ ருளத்திற் காமத் தீப்புக
மணந்தோர் நெஞ்சத் தமுத நீர்விட
வன்றில்புற் சேக்கை புக்கலகு பெடையணைய
15
  வந்தண ரருமறை யருங்கிடை யடங்க
முதிர்கனி மூல முனிக்கண மறுப்பக்
கவலையும் பூவுந் தோண்முடி கமழ
விரிவலை நுளையர் நெய்த லேந்தித்
துத்தங் கைக்கிளை யளவையின் விளைப்ப
20
  நீரர மகளிர் செவ்வாய் காட்டிப்
பசுந்தாட் சேக்கொ ளாம்பன் மலரத்
தோளு மிசையுங் கூறிடுங் கலையு
மருட்டிரு வெழுத்தும் பொருட்டிரு மறையும்
விரும்பிய குணமு மருந்திரு வுருவு
25
  முதலெண் கிளவியும்விதமுட னிரையே
யெட்டு மேழுஞ் சொற்றன வாறு
மைந்து நான்கு மணிதரு மூன்றுந்
துஞ்சலி லிரண்டுஞ் சொல்லரு மொன்று
மாருயிர் வாழ வருள்வர நிறுத்திய
30
  பேரருட் கூடற் பெரும்பதி நிறைந்த
முக்கட் கடவுண் முதல்வனை வணங்கார்
தொக்கதீப் பெருவினை சூழ்ந்தன போலவுந்
துறவா லறனாற் பெரலின் மாந்தர்
விள்ளா வறிவி னுள்ளமு மென்னவுஞ்
  செக்கர்த் தீயொடு புக்கநன் மாலை
யென்னுயிர் வளைந்த தோற்றம் போல
நாற்படை வேந்தன் பாசறை
யோர்க்கு முளையோ மனத்திற னேதுவாகவே.

(உரை)
கைகோள்: கற்பு. தலைவிகூற்று

துறை: பொழுதுகண்டு மயங்கல்.

     (இ-ம்.) இதனை, “அவனறிவாற்ற வறியுமாகலின்” (தொல். கற்பி,6) எனவரும் நூற்பாவின்கண் ‘இன்பமும் இடும்பையுமாகிய விடத்தும்’ என்புழி “இடும்பை ஆகியவிடத்தும்” என்னும் விதிகொள்க. இனி அகத்திணையியலின்கண் “எஞ்சி யோர்க்கு மெஞ்சுதல் இலவே” (தொல்-42) எனவரும் நூற்பாவினால் அமைப்பினுமாம்.

1-2: கோடிய................................புக

     (இ-ள்) கோடிய கோலினன் செருமுகம் போல-வளைந்த கோலையுடைய அரசன் போர்க்களத்தே தோற்றுவீழுமாறு போலே; கனைகதிர்-நெருங்கிய கதிர்களையுடைய ஞாயிற்று மண்டிலம்; திருகிக்கல்சேர்ந்து முறைபுக-மாறுபட்டு மறைமலையினைஎய்தி முறையே கடலின்கண் வீழாநிற்பவும் என்க.

     (வி-ம்.) கோடியகோல்-கொடுங்கோல். கொடுங்கோல் மன்னன் பகைப்புறத்தே தோற்றுவீழல் ஒருதலையாகலின் ஒளி மழுங்கிக் கடலில் விழும் ஞாயிற்றுக்கு உவமை எடுத்தார். செரு முகம்-போர்க்களம். போர்க்களத்தில் வீழுமாறுபோலே என்க. கனைகதிர்: அன்மொழித்தொகை. திருகுதல்-மாறுபடுதல். கல்-மலை என்றது கதிரவன் மறையும் மலையினை.

3-4: பதினெண்...............................கொள்ள

     (இ-ள்) புள்குளம்-பறவைக்கூட்டங்கள்; பதினெண் கிளவி ஊர்துஞ்சிய போல்-பதினெட்டுவகை மொழிகளும் பேசப்படும் பேரூரின்கண்ணே அம்மொழிகள் அவிந்து மாந்தர் உறங்கினாற்போல; பொய்கைவாய் தாழ்க்கொள்ள-தாழ்வாழும் நீர்நிலையிடத்தே ஆரவாரமடங்கித் தங்குதலைச் செய்யா நிற்பவும் என்க.

     (வி-ம்.) ஊரின்கண் பேசப்படும் பதினெண் கிளவியும் அவிந்தனபோல என்றாரேனும் பதினெண் கிளவி பேசும் மாந்தரும் வாயடங்கி உஅங்கினாற்போல என்பது கருத்தாகக் கொள்க. பல்வேறுவகைப் பறவைகளின் ஆரவாரத்திற்குப் பதினெண்வகை மொழியும் பேசும் மாந்தர்கள் செய்யும் ஆரவாரம் உவமை. பதினெண்கிளவி ஊர் என்றதனால் தலைநகரம் போன்ற பேரூர் என்பது பெற்றாம். பல்வேறு மொழிகள் பேசும் மாந்தர்கள் ஓரிடத்திலிருந்து செய்யும் ஆரவாரத்ர்தைப் பல்வேறு வகைப்பட்ட பறவைகளும் ஓரிடத்தே கூடிச்செய்யும் ஆர்வாரத்திற்கு உவமை கூறுதலை,

“ஆரிய முதலிய பதினெண் பாடையிற்
 பூரிய ரொருவழி புகுந்த போன்றன
 ஓர்கில கிளவிக ளொன்றொ டொப்பில்
 சோவில விளம்புபுட் டுவன்றுகின்றது”          (கம்ப. பம்பா. 14)

எனவரும் இராமாவதாரத்தினும் காண்க. தாழ்க்கொள்ளுதல்-தங்குதல்; தாட்கொள்ள என்றும் பாடம்.

5-7: வேள்..............................அவிழ

     (இ-ள்) முல்லையும் மௌவலும்-முல்லையரும்பும் காட்டுமல்லிகையரும்பும்; இருள்மகள் வேள்சரத்து உடைகுநர் கோலம் நோக்கி-இருளாகிய பெண் உலகின்கண் காமவேளின் கணைகளுக்கு ஆற்றாது வருந்தா நின்ற மகளிர்களின் மெலிந்தகோலத்தைக் கண்டு; கொண்ட குறுநகைபோல்-மேற்கொண்ட புன்முறுவல் போலத்தோன்றும்படி; முருகு உயிர்த்து அவிழ-நறுமணம் பரப்பி மலரா நிற்பவும் என்க.

     (வி-ம்.) முல்லையும் மௌவலும் இருள்மகள் குறுநகைபோல அவிழ என்க, வேள்-காமவேள். வேள்சரத்துடைகுநர் என்றது தலைவரைப் பிரிந்து தனித்துறையும் முல்லை சான்ற கற்புடைய மகளிரை. இருள்மகள்-இருளாகிய மகள். முல்லையும் மௌவலும் இருள் முகப்பிலே, அதாவது மாலையிலே மலர்தலின் இருள் மகள் குறுநகை என்றாள். நகைத்ததற்கு ஏதுக் கூறுவாள் வேள்சரத்து உடைகுநர் கோலம் நோக்கி என்றாள். இது தன் பண்பினை உலகின் மேல் வைத்துக் கூறியபடியாம். மௌவல்-காட்டுமல்லிகை. முருகு-மணம்; தேனுமாம். அவிழ்தல்-மலர்தல்.

8-10: தணந்தோர்.................................அணைய

     (இ-ள்) தணந்தோர் உளத்தில் காமத்தீ புக-தங் கணவரைப் பிரிந்த மங்கையர் நெஞ்சத்தில் காமமாகிய நெருப்பு நுழையா நிற்பவும்; மணந்தோர் நெஞ்சத்து அமுத நீர்விட-தங் கேள்வரைக் கூடிய மாதருடைய நெஞ்சத்தின்கண் அமிழ்தம் போன்ற இனிய இன்பப்பண்பு சுரவாநிற்பவும்; அன்றில்-அன்றில் பறவைகள்; புல்சேக்கை புக்கு-பனையின்கண் அமைந்த தம் கூட்டிற் புகுந்து; அலகுபெடை அணைய-அழகிய அலகினையுடைய தம் பெடைகளைத் தழுவா நிற்பவும் என்க.

     (வி-ம்.) தணத்தல்-பிரிதல். மணத்தல்-கூடுதல். அமுத நீர்-அமுதத் தன்மை; என்றது இன்பத்தை. அன்றில்-துணைபிரிந்து வாழாத இயல்புடைய ஒருவகைப் பறவை. புல்-ஈண்டுப் பனை. அன்றில் அலகால் சிறப்புடையன ஆதலால் அலகுபெடை என்றாள். பெடை-பெண்அன்றில்.

11-12: அந்தணர்.........................மறுப்ப

     (இ-ள்) அந்தணர் அருமறை அருங்கிடை அடங்க-அந்தணர்க்குரிய உணர்தற்கரிய வேதங்கள் பிறர்புகுதற்கரிய கிடையிடத்தே ஒலியவிந்து அடங்கவும்; முதிர்கனிமூலம் முனிக்கணம் மறுப்ப-முதிர்ந்த பழங்களையும் கிழங்குகளையும் துறவோர் கூட்டங்கள் உண்ணாது மறுப்பவும் என்க.

     (வி-ம்.) அந்தணர்-பார்ப்பனர். உணர்தற்கரிய மறை என்க. கிடை-வேதமொதும் பள்ளி. இனி வேதியர் குழாமுமாம். துறவோர் இரவின்கண் உண்ணா நோன்பினையுடையோராகலின் உணவினை மறுப்ப என்க. மூலம்-கிழங்கு. முனிக்கணம்-துறவோர் கூட்டம்.

13-15: கலவை.....................விளைப்ப

     (இ-ள்) கலவையும் பூவும் தோள்முடி கமழ-சந்தனக் குழம்பும் மலர் மாலைகளும் தம்முடைய தோளிலும் முடியிலும் கமழா நிற்ப; விரிவலை நுளையர்-விரிகின்ற வலையினையுடைய பரதவர்; நெய்தல் ஏந்தி-நெய்தல் யாழினைக் கையில் ஏந்தி; துத்தம் கைக்கிளை அளவையின் விளைப்ப-துத்தமென்னும்பண்ணையும் கைக்கிளை என்னும் பண்ணையும் இசைநூல் இலக்கணத்திற்கிணங்கத் தோற்றுவியாநிற்பவும் என்க.

     (வி-ம்.) கலவை-நறுமணப்பொருள் கலந்த சந்தனக் குழம்பு. தோளில் கலவையும் முடியில் பூவும் கமழ என நிரனிறையாகக் கொள்க. விரிவலை: வினைத்தொகை. நுளையர்-நெய்தனில மாக்கள். நெய்தல்: ஆகுபெயர். நெய்தலியாழ் என்க. துத்தம் கைக்கிளை என்பன இசைவகைகள்.

16-17: நீர்......................மலர

     (இ-ள்) பசுந்தாள் சேகொள் ஆம்பல்-பசிய தண்டினையும் சிவந்த நிறத்தையுமுடைய அரக்காம்ப லரும்புகள்; நீர் அரமகளிர் செவ்வாய் காட்டி மலர-நீரர மகளிர் என்னும் தெய்வ மகளிரின் சிவந்த வாய்போலக் ஆட்டி மலராநிற்பவும் என்க.

     (வி-ம்.) ஆம்பல் வாய்போல் மலர என்க. நீரரமகளிர்-நீரில் வாழும் ஒருவகைத் தெய்வமகளிர். சே-செந்நிறம். செவ்வாய் காட்டிப் பசுந்தாட்சேக்கொள் ஆம்பல் மலர என்புழிச் செய்யுளின்ப முணர்க. ஆம்பல்-அல்லி.

18-28: தோளும்..........................போலவும்

     (இ-ள்) தோளும் இசையும் கூறிடுங் கலையும் அருள் திரு எழுத்தும் பொருள்திரு மறையும்-தோள்களும், இசைகளும், சொல்லப்படுகின்ற கலைகளும், அருள் பெறுதற்குக் காரணமான அழகிய எழுத்துக்களும், மெய்ப்பொருளை யுணர்த்தும் சிறப்புடைய வேதங்களும்; விரும்பிய குணமும் அருந்திரு உருவும் முதல் எண்கிளவியும்-யாவரும் விரும்பிய குணங்களும், காண்டற்கரிய திருஉருவும், இவற்றின் முதலும் ஆகிய இவ்வெண்வகைப் பொருளும்; விதமுடன் நிரையே-வ்கையோடே நிரலே; எட்டும் ஏழும் சொற்றன ஆறும் ஐந்தும் நான்கும்-எட்டும், ஏழும், சொல்லப்பட்டனவாகிய ஆறும், ஐந்தும் நான்கும்; அணிதரும் மூன்றும் துஞ்சல்இல் இரண்டும் சொல்அரும் ஒன்றும்-அழகு தருகின்ற மூன்றும், அழிவில்லாத இரண்டும், சொல்லற்கரிய ஒன்றும் ஆக; ஆர்உயிர் வாழ அருள்வர நிறுத்திய-அரிய உயிரினங்கள் வாழ்தற் பொருட்டுத் திருவுள்ளத்தே அருள் தோன்றுகையாலே உலகத்தே நிறுத்திவைத்த; பேர் அருள் கூடல் பெரும்பதி நிறைந்த முக்கண் கடவுள் முதல்வனை-மிக்க அருளைப் பெறுதற்கிடனான நான்மாடக்கூடல் என்னும் மதுரையாகிய பெரிய நகரத்தின்கண் நிறைந்துள்ள மூன்று கண்களையுடைய சோமசுந்தரக்கடவுளாகிய முதற் கடவுளை; வணங்கார் தொக்க தீப்பெருவினை சூழ்ந்தன போலவும்-தொழாதவரைக்கூடிய கொடிய பெரிய வினைகள் சூழ்ந்துகொண்டாற் போலவும் என்க.

     (வி-ம்.) தோள், இசை, கலை, எழுத்து, மறை, குணம், உருவம், முதல் என்னும் இவ்வெண்கிளவியும் என்க. முதலும் எனல்வேண்டிய எண்ணும்மை தொக்கது. இவற்றை ஆருயிர் வாழும் பொருட்டும் அவர்க்கு அருள்வரும் பொருட்டும் இறைவன் தன்னையே எட்டுத் தோளுடையனாகவும், ஏழு இசைகளாகவும், ஆறு கலைகளாகவும், ஐந்து எழுத்துக்களாகவும், நான்கு மாறைகளாகவும், மூன்று குணங்களாகவும், இரண்டு உருவங்களாகவும், ஒரு முதலாகவும் மதுரையில் நிறுத்திவைத்தான் என்பது கருத்து. இவையெல்லாம் இறைவன் கொண்டுள்ள திருவருட்கோலங்கள் என்க. இசை ஏழாவன: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. ‘ஏழிசையும் இசைப்பயனும் ஆனான் கண்டாய்’ எனப் பெரியாரும் பணித்தருள்தல் காண்க. கலை-அறுவகைச் சாத்திரங்கள். அவை: சிக்கை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோபிசிதம், சோதிடம் என்பன. ஐந்தெழுத்தாவன: ந, ம, சி, வ, ய, என்பன. நான்மறையாவன: இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்பன. மூன்று குணமாவன: ராசதம், சாத்வீகம், தாமதம் என்பன. இனி சத்து, சித்து, ஆனந்தம் என்பனவுமாம். இரண்டுருவமாவன: அம்மையும், அப்பனும் என்க. முதல் என்றது சிவலிங்கத் திருவுருவத்தை.

29-30: துறவால்..................................என்னவும்

     (இ-ள்) துறவால் அறனால் பெரல்இல் மாந்தர்-துறவறத்தாலாதல் இல்லரத்தினாலாதல் பிறவிப்பயனைப் பெறுதலில்லாத மாக்களினது; விள்ளா அறிவின் உள்ளமுமென்னவும்-விரிதலில்லாத அறிவினையுடைய நெஞ்சம் போலவும் என்க.

     (வி-ம்.) இருவகை அறநெறிகளில் நின்று ஒழுகிப் பிறவிப் பயனைப் பெறாத மாக்களினுடைய உள்ளம் அறியாமையால் பெரிதும் இருண்டு கிடத்தலின் உவமையாக்கினார். விள்ளல்-புடைபெயர்தல். எனவே விரிதல் என்றாயிற்று. துறவறமும் இல்லறமும் இரண்டும் அறமேயாயினும் சிறப்பு நோக்கிப் பொருள்களைத் துரத்தல் கருதித் துறவறத்தைத் துறவு என்றும் பொருள்களை வழங்குதல் கருதி இல்லறத்தை அறம் என்றும் கூறினார். என்னை" ஈதல் அறம் என்பவாகலின் என்க.

31-34: செக்கர்த்..............................ஓதுகவே

     (இ-ள்) செக்கர்த் தீயொடு புக்க நன்மாலை-செவ்வானமாகிய சுடு நெருப்போடே வந்த மிக்க மாலைக்காலமே!; என் உயிர் வளைந்த தோற்றம்போல-நீ இப்பொழுது என் உயிரைச் சூழ்ந்துகொண்டுள்ள காட்சியைப்போல; நால்படை வேந்தன் பாசறையோர்க்கும் உளையோ-நால்வகைப் படைகளையுமுடைய வேந்தனுடைய பாசறையின்கண்ணராகிய எம்பெருமானையும் இங்ஙனம் சூழ்ந்து கொண்டுள்ளனையோ" இலையோ; மனத்திறன் ஒதுக-உன் நெஞ்சத்திலுள்ள கருத்தினை எனக்குக் கூறுவாயாக என்க.

     (வி-ம்.) என் உயிரைச் சுட்டெரித்தற்கு நெருப்புங் கொணர்ந்துள்ளாய் என்பாள், செக்கர்த் தீயொடு புக்க நன்மாலை என்றாள். நன்மாலை என்றது ஈண்டு அதன் பண்பு மிகுதியை உணர்த்தி நின்றது. நல்ல பாம்பு என்றாற்போல என்க. இனி நன்மாலை என்றது இகழ்ச்சி எனினுமாம். மாலை: அண்மைவிளி. என் உயிரைப் போக்குதலே நின் கருத்தென்பாள் என் உயிர் வளைந்த தோற்றம்போல என்றாள்.

“மாலையோ வல்லை மணந்தா ருயிருண்ணும்
 வேலைநீ வாழிபொழுது”
(குறள். 1221)

எனவும்,

“பொருண்மாலை யாளரை யுள்ளி மருண் மாலை
 மாயுமென் மாயா வுயிர்”

(குறள். 1230)

எனவும்,

“காதல ரில்வழி மால கொலைகளத்
 தேதிலர் போல வரும்.”
(குறள். 1224)

எனவும் வரும் திருக்குறள்களையும் நோக்குக.

     இனி இச்செய்யுளோடு,

“பறவைபாட் டடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே
 நிறைநிலா நோய்கூர நெடுங்கணீ ருகுத்தனவே
 துறுமல ரவிழ்குழலாய் துறந்தார் நாட் டுளதாங்கொல்
 மறவையா யென்னுயிர்மேல் வந்தவிம் மருண்மாலை”
                                       (சிலப். கானல். 42)

எனவும்,

“பிரிந்தார் பரிந்துரைத்த பேரருளி னீழல்
 இருந்தேங்கி வாழ்வா ருயிர்ப்புறத்தாய் மாலை
 உயிர்புறத்தாய் நீயாகி லுள்ளாற்றா வேந்தன்
 எயிற்புறத்து வேந்தனோ டென்னாதி மாலை”
(சிலப். கானல். 49)

எனவும்வரும் சிலப்பதிகாரச் செய்யுள்களையும் ஒப்புக் காண்க. பாசறையிடத்தே என்னைப் பிரிந்து உறைகின்ற எம்பெருமானையும் நீ இங்ஙனம் சூழ்ந்திருப்பின் அவன் என்னை நினைந்து ஒருதலையாக மீள்வன். அவ்வழி நீ பெண்ணாகிய என்னை இறத்தலினின்றும் உய்யக் கொண்டதொரு நல்லறமும் உடையை ஆகுவை நீ அங்ஙனம் செய்யாது இப்பொழுது இவள் எளியள் அளியள் தமியள் பெண்ணென்றிரங்காது ஒரு பெண் கொலையே செய்யத் துணிந்தனை போலும். நீ மிகவும் பொல்லாய் என்றிகழ்வது குறிப்பென்க.

     இனி இடனை ‘மாலையே! நீ புகவும் தாழ்க்கொள்ளவும், அவிழவும், புகவும், விடவும், அணையவும், அடங்கவும், மறுப்பவும், விளைப்பவும், மலரவும் தீஒடு புக்கு என் உயிர் வளைந்த தோற்றம்போல வேந்தனுடைய பாசறையோரையும் வளைந்துள்ளனையோ அல்லையோ" ஓதுக! என வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.