பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 98

நேரிசையாசிரியப்பா

 
   
5
  கதிர்நிரை பரப்பு மணிமுடித் தேவர்கள்
கனவிலுங் காணாப் புனைவருந் திருவடி
மாநிலந் தோய்ந்தோர் வணிக னாகி
யெழுகதிர் விரிக்குந் திருமணி யெடுத்து
வரையாக் கற்புட னான்கெனப் பெயர்பெற்
10
  றாங்காங் காயிர கோடி சாகைகண்
மிடலொடு விரித்துச் சருக்கம் பாழி
வீயா விந்தம் பதநிரை நாத
மறைப்புப் புள்ளி மந்திர கொடுக்கமென்
றினையவை விரித்துப் பலபொருள் கூறும்
15
  வேத முளைத்த வேதமில் வாக்காற்
குடுமிச் சேகரச் சமனொளி சூழ்ந்த
நிறைதரு நான்கி னிகழ்ந்தன குறியுங்
குருவிந் தஞ்சௌ கந்திகோ வாங்கு
சாதுரங் கமெனுஞ் சாதிக ணான்குந்
20
  தேய்க்கி னொருப்பிற் சேர்க்கினங் கையிற்
றூக்கினற் றகட்டிக் சுடர்வாய் வெயிலிற்
குச்சையின் மத்தகக் குறியினோ ரத்தி
னெய்த்துப் பார்வையி னேர்ந்து சிவந்தாங்
கொத்த நற்குண முடையபன் னிரண்டுங்
25
  கருகிநொய் தாதல் காற்று வெகுளி
திருகன் முரணே செம்ம ணிறுகன்
மத்தகக் குழிவு காசமி லைச்சுமி
வெச்சம் பொரிவு புகைதல் புடாயுஞ்
சந்தைநெய்ப் பிலியெனத் தகுபதி னாறு
30
  முந்திய நூலின் மொழிந்தன குற்றமுஞ்
சாதகப் புட்கண் டாமரை கழுநீர்
கோப மின்மினி கொடுங்கதிர் விளக்கு
வன்னி மாதுளம் பூவிதை யென்னப்
பன்னுசா துரங்க வொளிக்குணம் பத்துஞ்
35
  செம்பஞ் சரத்தந் திலகமு லோத்திர
முயலின் சோரி சிந்துரங் குன்றி
கவிரல ரென்னக் கவர்நிர மெட்டுங்
குருவிந் தத்திர் குறித்தன நிறமு
மசோகப் பல்லவ மலரிசெம் பஞ்சு
40
  கோகிலக் கண்ணீ ளிலவலர் செம்பெனத்
தருசௌ கந்தி தன்னிற மாறுஞ்
செங்கல் குராமலர் மஞ்சள் கோவை
குங்கும மஞ்சிற் கோவாங்கு நிறமுந்
திட்டை யேறு சிவந்த விதாய
45
  மொக்கல் புற்றாங் குருதி தொழுதினை
மணிகோ கனகங் கற்பம் பாடி
மாங்கிச கந்தி வளர்காஞ் சுண்டையென்
றாங்கொரு பதின்மூன் றடைந்த குற்றமு
மிவையெனக் கூறிய நிறையருட் கடவுள்
50
  கூடல் கூடாக் குணத்தினர் போல
முன்னைய ளல்லண் முன்னைய ளல்ல
ளமுதவாய்க் கடுவிழிக் குறுந்தொடி நெடுங்குழற்
பெருந்தோட் சிறுநகை முன்னைய ளல்ல
ளுலகியன் மறந்த கதியினர் போல
55
  வைம்புலக் கேளிரு மொருவாய்ப் புக்கன
வதிருவார்க் கொக்கின் களவுயிர் குடித்த
அரிலை நெடுவே லறுமுகக் குளவன்
    றகரங் கமழு நெடுவரைக் காட்சி
யுற்றன ளாதல் வேண்டுஞ்
சிற்றிடைப் பெருந்தோட் டேமொழி தானே.

(உரை)
கைகோள்: களவு. செவிலி கூற்று

துறை: மெலிவு கண்டு செவிலி கூறல்.

     (இ-ம்.) “களவலர் ஆயினும் காமமெய்ப் படுப்பினும், அளவு மிகத் தோன்றினும் தலைப்பெய்து காணினும்” எனவரும் (தொல்-களவி- 24) நூற்பாவின்கண் “தலைப்பெய்து காணினும்” என வரும் விதி கொள்க.

48 - 49: அமுதவாய்...................அல்லள்

     (இ-ள்) அமுதவாய் கடுவிழி குறுந்தொடிநெடுங் குழல்-அமிழ்தம் போன்ற இன்னொழி யியம்பும் வாயினையும், நஞ்சு போன்று காண்போரை நலிகின்ற கண்களையும் குறிய வளையல்களையும் நெடிய கூந்தலையும்; பெருந்தோள் சிறுநகை-பெரிய தோள்கலையும் புன்முறுவலையும் உடைய என் மகள்; முன்னையள் அல்லள்-இற்றைநாள் பண்டிருதாற்போல இருந்திலள்; பெரிதும் வேறுபட்டிருக்கின்றாள் என்க.

     (வி-ம்.) முன்னையள்-பண்டு இருந்தவள். அமுதம் போன்ற இன்மொழியையுடைய வாய் என்றவாறு. கடு-நஞ்சு. கண்டார் நெஞ்சு கலக்குதலின் கடுவிழி என்றாள். அமுதவாய்க் அடு விழி என்புழியும், குறுந்தொடி நெடுங்குழல் என்புழியும், பெருந்தோள் சிறுநகை என்புழியும் முரணணி தோன்றிச் செய்யுளின்ப மிகுதலை உணர்க.

50 - 53: உலகியல்.........................புக்கன

     (இ-ள்) உலகு இயல் மறந்த கதியினர்போல - இப்பொய்யாய உலகவொழுக்கத்தைத் துறந்து மறந்துவிட்ட துறவுநெறிச் செலவினையுடைய பெரியோர் தஞ் சுற்றத்தாரை நோக்கும் நோக்கம்போல; நம்முள் பார்வையும் வேறுவேறு ஆயின-இவள் நம்மை நோக்கும் நோக்கங்களும் வேறு வேறு குறிப்புடையன ஆயின; பகழி செய் கம்மியர் உள்ளம்போல-கணை வடிக்கும் கம்மாளர் உள்ளம் பிறவற்றை நினையாமல் அக்கணையொன்றனையே நினைக்குமாறுபோலே, ஐம்புலக் கேளிரும் ஒருவாய்ப் புக்கன-கேளிர்போன்ற இவளுடைய அஒம்பொறிகளும் தத்தமக்குரிய புலன்களிற் செல்லாமல் ஒருவழியே செல்வனவாயின என்க.

     (வி-ம்.) உலகியல் மறந்த கதியினர் என்றது துரவரத் துறந்த மேலோரை; அவர் எவ்வுயிரையும் பொதுவானோக்குதலன்றி இவர் உறவினர் இவர் நண்பர் இவர் நொதுமலர் எனக் குறித்து நோக்காமைபோல இவளும் உறவினேமாகிய எம்மையும் பற்றின்றிப் பொதுவின் நோக்குகின்றாள் என்பது கருத்து. பகழி-கணை. இவள் எல்லாவற்றையும் விடுத்து யாதோ ஒன்றனை மட்டுமே நினைக்கின்றாள் என்பாள் பகழி செய் கம்மியர் உள்ளம்போல ஐம்புலக் கேளிரும் ஒருவாய்ப் புக்கன என்றாள். கேளிர் ஐம்புலமும் எனப் பயனிலைக்கேற்ப மாறுக. புலம் என்றது ஈண்டுப் பொறிகளை. இவள் பொறிகள் ஒருவாய்ப்புக்கன என்றது இவள் பண்டுபோல நோக்கின்றிலள் கேட்கின்றிலள் உண்கிலள் பயின்றிலள் துயின்றிலள் உற்றிலள் உயிர்த்திலள் அனைத்தினும் வேறுபட்டிருக்கின்றனள் என்றவாறு.

1 - 4: கதிர்...............................எடுத்து

     (இ-ள்) கதிர் நிரை பரப்பும் மணிமுடித் தேவர்-ஒளியை நிரலாகப் பரப்புகின்ற மணிகளையுடைய முடியணிகலனையுடைய அமரர்தாமும்; கனவிலும் காணாப் புனைவு அருந் திரு அடி-கனவிலும்காணுதற்கியலாத புனைந்து கூறுதலும் அரியவாகிய தன் அழகிய அடிகள்; மா நிலந் தோய்ந்து-பெரிய நிலத்திலே தொயும்படியும்; ஓர் வணிகன் ஆகி-ஒரு மணி வணிகனாகத் திருவுருவங்கொண்டருளி; எழுகதிர் விரிக்கும் திருமணி எடுத்து-தம்மகத்தினின்றும் எழாநின்ற ஒளியைப் பரப்புமியல்புடைய மாணிக்க மணியைச் சுமந்துவந்து என்க.

     (வி-ம்.) கதிர்-ஒளி. கனவிலும் என்புழி, உம்மை இழிவு சிறப்பு. புனைதல்-கற்பனை செய்து கூறுதல். தோய்ந்து-தோய என்க. எழுகதிர்: வினைத்தொகை. திருமணி-மாணிக்கமணி. இஃது ஒன்பான் மணிகளுள் ஒன்று.

5 - 11: வரையா...............................வாக்கால்

     (இ-ள்) வரையாக் கற்புடன்-எழுதி ஓதாமல் கேல்விமாத்திரையானே கற்கும் கற்றலோடே; நான்கு எனப் பெயர் பெற்று-இருக்கு யசுர் அதர்வணம் சாமம் என்னும் நான்கு பெயர் பெற்று; ஆங்கு ஆங்கு ஆயிரம் கோடி சாகைகள் மிடலொடு விரித்து-ஏற்புடைய இடந்தோறும் இடந்தோறும் எண்ணிறந்த கிளைகளை ஆற்றல்டே விரித்து, சருக்கம் வீயாவிந்தம் பதநிரை நாதம் மறைப்பு புள்ளி மந்திரம் ஒடுக்கம் என்று-சருக்கமும் கெடாத விந்தமும்சொற்றொடரும் ஒலியும் மறைப்பும் புள்ளியும் மந்திரமும் ஒடுக்கமும் என்று கூறப்படுகின்ற; இனையவை விரிந்து இவ்வுள்ளுறுப்பக்களாலே மிகவும் விரித்து; பல பொருள் கூறும்-அறமுதலிய பல பொருள்களையும் கூறாநின்ற; வேதம் முளைத்த-வேதங்கள் தோன்றுதற்கிடனான; ஏதம் இல் வாக்கால்-குற்றமற்ற மொழிகளாலே; என்க.

     (வி-ம்.) வரையாக் கற்பு-எழுதிப் பயிலாமல் கேள்விமாத்திரையானே கேட்டுப் பயிலும் பயிற்சி. கற்பு-கற்றல். நான்கு-இருக்கு முதலியன. ஆயிரங் கோடி சாகைகள் என்றது எண்ணிறந்த சாகைகள் என்றவாறு. சாகை-கிளை. மிடல்-ஈண்டுச் சொல்லாற்றலும் பொருளாற்றலுமாம். ஆங்காங்கு என்றது, அதிகாரப்பட்ட இடந்தொறும் இடந்தொறும் என்றவாறு. சருக்கம் முதலியன உள்ளுறுப்புக்கள். வீயா-கெடாத. மறைப்பு-கரந்துறை. பல பொருள் என்றது அறம் பொருள் இன்பம் வீடு என்பனவும் பிறவும் என்றவாறு. முளைத்த வாக்கு-முளைத்தற்கிடனான மொழி.

12 - 13: குடுமி.....................குறியும்

     (இ-ள்) சமன் ஒளி சூழ்ந்த குடுமிச் சேகரம் நிறைதரும் நான்கின்-ஞாயிற்றின் ஒளி ஏற்றிழைவின்றிச் சமனாகச் சூழ்ந்துள்ள மலைக் குவடுகளாகிய கொடுமுடிகல் நிறைந்த மக்கம் காளபுரம் தும்புரம் சிங்களம் என்னும் இந்த நான்கிடங்களிலே கிருதயுகமும் திரேதாயுகம் துவாபரயுகம் கலியுகம் என்னும் இந்த நான்கு காலங்களிலும்; நிகழ்ந்தன குறியும்-உருவாகிய அம் மாணிக்கங்களின் அடையாளங்களும் என்க.

     (வி-ம்.) சமனொளி சூழ்ந்த குடுமிச்சேகரம் என மாறுக. மாணிக்கங்கள் உருவாதற்குக் குறைவற்ற கதிரொளி காரணம் என்பார் சமனொளி சுழ்ந்த என்றார்; எனவே மிகையான வெப்பமும் மிகையான தட்பமு முடைய நாடுகளிலே மாணிக்கங்கள் தோன்றா என்பது பெற்றாம். நான்கின் என இடமென்றதால் காலமென்றாதல் கூறாமையால் நான்கிடங்களில் நான்கு காலங்களில் என விரித்தோதுக; என்னை"

“வாளவிரு மாணிக்கம் கிரேதமுதலுக நான்கும் வழியே மக்கம்
 காளபுரம் தும்பரம் சிங்கள மிந்நாள் கிடைப்படும்”
                            (பரஞ்-திருவி-மாணிக்- 37)

எனப் பிற சான்றோரும் ஓதுதல் உணர்க.

     குடுமிச்சேகரம்: இருபெயரொட்டு. குடுமிச்சேகரத்து எனவே மாணிக்கம் குறிஞ்சி நிலத்திலே தோன்றும் என்பது பெற்றாம்.

     நிகழ்தல்-உருவாடல். குறி-அடையாளம்; இலக்கணம்.

14 - 15: குருவிந்தம்...........................நான்கும்

     (இ-ள்) குருவிந்தம் சௌகந்தி கோவாங்கு சாதுரங்கம் எனும்-குருவிந்தமும் சௌகந்தியும் கோவாங்கும் சாதுரங்கமும் என்று கூறப்படும்; சாதிகள் நான்கும்-அம்மாணிக்கங்களின் நான்கு சாதிகளும்; என்க.

     (வி-ம்.) இவற்றுள் குருவிந்தம், விந்தம் என்றும் இரத்டவிந்து என்றும் கூறப்படும்; சௌகந்தி, நீலம் என்றும் நீலகந்தி என்றும் கூறப்படும்; கோவாங்கு, படிதம் என்றும் கூறப்படும்; சாதுரங்கம் பதுமம் என்றும், பதுமராகம் என்றும் கூறப்படும். இதனை,

“பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும்
 விதிமுறை பிழையா விளங்கிய சாதியும்”    (சிலப்- 14. 186 - 7)

என இளங்கோவடிகளார் கூறுமாற்றானும் இதற்கு அடியார்க்கு நல்லார் கூறும் நல்லுரையானும் “வன்னியிற் கிடக்கும் வருணநாற் பெயரும் உன்னிய சாதுரங்க மொளிர் குருவிந்தம் சௌகந்தி கோவாங்கு தானாகும்மே” என அவர் தரும் மேற்கோளானும் உணர்க.

15 - 20.: தேய்க்கின்...............................பன்னிரண்டும்

     (இ-ள்) தேய்க்கின் நெருப்பில் சோக்கின் அங்கையில் தூக்கின்-இனி அம்மணிகளை ஆராய்வோர் அவற்றைத் தேய்க்குமிடத்தும் தீயின்கன் சேர்க்குமிடத்தும் உள்ளங்கையிலிட்டு நோக்குமிடத்தும் துலாக்கோல் கொண்டு நிறுக்குமிடத்தும்; நல் தகட்டில் சேர்க்கின்-பொற்றகட்டிலே பதித்துப் பார்க்குமிடத்தும்; சுடர்வாய்ச் சேர்க்கின்-ஞாயிற்றின் எதிரே சேர்க்குமிடத்தும்; வெயிலில் சேர்க்கின்-வெயிலிற் காட்டுமிடத்தும்; குச்சையின்-குச்சை வாங்குமிடத்தும்; மத்தகக் குறியின்-மாணிக்கத்திற்குரிய உச்சியிலக்கணத்தினும்; ஓரத்தின்-கோடி மழுங்காமையும் கோடியுடைமையுமாகிய விளிம்புக் குறிகளினும்; நெய்த்து- நெய்ப்புடைமையினும்; பார்வையின்-கூர்ந்து நோக்குழி; நேர்ந்தும் சிவந்தும்-கட்கினிதாய் நுண்ணொளியுடைத்தாய்ச் சிவந்தும்; உடைய ஒத்த நற்குணம் பன்னிரண்டும்-இலக்கணத்திற்குப் பொருந்திய அவற்றினுடைய நற்குணம் பன்னிரண்டும் என்க.

     (வி-ம்.) இப்பகுதியில் பண்டைக் காலத்தே மணிகளை ஆராயும் வகைகள் விரிக்கப்படுகின்றன. தேய்த்தல்-அராவுதல். சேர்க்கின் என்பதனை ஏற்ற பெற்றி கூட்டிக்கொள்க. தூக்குதல்-நிறுத்தௌப் பார்த்தல். குச்சை-குச்சை வாங்குதல். அஃதாவது மணிகளை இறுதியாக ஒப்பஞ் செய்தல். இதனை இக்காலத்தார் குச்சுவாங்குதல் என்பர். (கதிரைவேற் பிள்ளை தமிழகராதியிற் காண்க.. பக்கம் - 467;) மத்தகம்-மணியின் உச்சி. குறி-இலக்கணம். ஓரம்-கோடி விளிம்பு. கோடிகளுடைமையும் கோடிகள் மழுங்காமையும் முறியாமையும் கோடிகளின் நல்லிலக்கணமாம். நெய்தல்-நெய்ப்புடைத்தாதல். இதனை இக்காலத்தார் நீரோட்டம் என்பர். நேர்தல்-தெளிந்த நுணுகிய ஒளியுடைத்தாதல். சிவத்தல்-மாணிக்கத்தின் சிறப்பு.

     இனி நற்குணம் பன்னிரண்டும் என்பதற்குச் சரைமலம் கீற்று, சப்படி, பிளத்தல், துலை, கரி, விந்து, காகபாதம், இருத்து, கோடி இல்லன், கோடி முறிந்தன, தாரை, மழுங்கல் என்னும் இப்பன்னிரண்டு குற்றங்களும் இல்லாமையே பன்னிரண்டு குணங்கள் எனக் கோடலுமாம்.

21 - 24: கருகி......................குற்றமும்

     (இ-ள்) கருகி நொய்து ஆதல்-கருகியிருத்தலும் நொய்யதாயிருத்தலும்; காற்று வெகுளி-காற்றேறும், மழுங்கியிருத்தலும்; திருகல் முரண்-திருகல் முறுகலுடைத் தாதலும் மறுபட்ட இருவேறு நிறங்களை யுடைத்தாதலும்; செம்மண்-செம்மண் ஒட்டியது போற்றோன்றுதலும்; இறுகலும்- இறுகுதலும்; மத்தகக் குழிவு-முடி குழித்திருத்தலும்; காசம் இலைச்சு உமி-காசமும், இலேசும், உமியும்; எச்சம்-எச்சமும்; பொரிவு-பொரிந்திருத்தலும்; புகைதல்-புகை படிந்திருப்பதுபோலத் தோன்றுதலும்; புடாயம்-புடாயமும்; சந்தை-சந்தையும்; நெய்ப்பிலி- நெய்ப்பிலதாதலும்; எனத்தகும் முந்திய நூலின் மொழிந்தன பதினாறு குற்றமும்-எனப்படும் முந்திய நூல்களிலே கூறப்பட்டுள்ள அம்மாணிக்கத்தின் பதினாறுவகைக் குற்றங்கலும் என்க.

     (வி-ம்.) கருகல், நொய்தல், காற்றேறு, வெகுளி, திருகல், முரண், மண்ணேறு, இறுகல், மத்தகக் குழிவு, காசம், இலேசு, உமி, எச்சம், பொரிவு, புகைதல், புடாயம், சந்தை, நெய்ப்பிலி என்னும் பதினாறும் மாணிக்கங்களுக்கு முற்காலத்தே கூறப்பட்ட குற்றங்களாகும் என்றவாறு. எனவே பிற்காலத்து நூல்களிற் கூறப்பட்ட குற்றமும் உள என்றாராயிற்று. அவை பின்னர்க் கூறப்படும்.

27 - 30: சாதகப்புள்......................பத்தும்

     (இ-ள்) சாதகப்புள் கண் தாமரை கழுநீர்-சாதகப்புள்ளின் கண்போன்ற நிறமும், தாமரை மலர் நிறமும், செங்கழு நீர் மலர் நிறமும்; கோபம் மின்மினி-இந்திர கோபப் புழுவின் நிறமும், மின்மினியின் நிறமும், கொடுங்கதிர் விளக்கு-ஞாயிற்றின் நிறமும், விளக்கின் நிறமும்,; வன்னி-வன்னிப்பூ நிறமும்; மாதுளம்பூ விதை-மாதுலம்பூவின் நிறமும், மாதுளை விதையின் நிறமும்; என்னப் பன்னும்-என்று கூறப்படுகின்ற இந்த நிறங்களை ஒத்த; சாதுரங்க ஒளிக்குணம் பத்தும்-சாதுரங்கம் என்னும் சாதிமாணிக்கங்கட்குரிய ஒளிக்குணங்கள் பத்தும் என்க.

     (வி-ம்.) சாதுரங்க மாணிக்கத்தின் ஒளி நிறம், சாதகப்புள்ளின் கண்ணும் செண்டாமரைப்பூவும் செங்கழுநீர் மலரும் இந்திரகோபமும் மிம்மினியும் ஞாயிறும் விளக்கும் வன்னிமலரும் மாதுலம்பூவும் விதையும் என்னும் இவற்றின் நிறங்கள் போன்று பத்துவகைப்படும் என்றவாறு.

31 - 34: செம்பஞ்சு.................................நிறமும்

     (இ-ள்) செம்பஞ்சு அரத்தம் திலகம் உலோத்திரம்- செம்பஞ்சும் செவ்வரத்த மலரும் திலகமலரும் வெள்ளோத்திர மலரும்; முயலின் சோரி சிந்தூரம் குன்றி கவிர் அலர் என்ன- முயலின் குருதியும் சிந்தூரமும் குன்றிமணியும் முண் முருக்க மலரும் என்னும் இவற்றினுடைய; கவர்நிறம் எட்டும்-கண்டோர் கண்ணைக் கவரும் நிறங்கள் எட்டனையும் ஒக்கும் என்று; குருவிந்தத்திற் குறித்தன நிறமும்-குருவிந்தமென்னும் சாதி மாணிக்கங்கட்குக் குறிக்கப்பட்டனவாகிய நிறங்களும், என்க.

     (வி-ம்.) குருவிந்தமாணிக்கம் செம்பஞ்சு முதலியவற்றின் நிறம் போன்ற எண்வகை நிறமுடையன என்க. இவற்றை,

“திலகம் உலோத்திரம் செம்பருத்திப்பூக்
 கவிரலர் குன்றி முயலுதி ரம்மே
 சிந்துரங் குக்கிற் கண்ணென வெட்டும்
 எண்ணிய குருவிந்த மன்னிய நிறமே”

என வரும் பழம் பாடலினுங் காண்க. அரத்தம்-செவ்வரத்த மலர். திலகம்-குங்குமப்பூ. உலோத்திரம்-வெள்ளுலோத்திர மலர்.

     சோரி-குருதி. கவிரலர்-முண்முருக்கமலர். குன்றி-குன்றிமணி.

35 - 37: அசோக......................ஆறும்

     (இ-ள்) அசோகப் பல்லவம் அலரி செம்பஞ்சு கோகிலக்கண் நீள் இலவு அலர் செம்பு எனத் தரும்-அசோகந் தளிர் நிறமும் அலரிமலர் நிறமும் செம்பஞ்சு நிறமும் குயிற்கண் நிறமும் நீண்ட இலவினது மலர் நிறமும் செம்பின் நிறமும் என்னும் இவற்றை ஒக்கும் என்று கூறப்படுகின்ற; சௌகந்திதன் நிறம் ஆறும்- சௌகந்தி என்னும் சாதிமாணிக்கத்தின் அறுவகைப்பட்ட நிறங்களும் என்க.

     (வி-ம்.) பல்லவம்-தளிர். அலரி-ஒருவகைச் செடி. இதனை அரளி என்றும் கூறுவர். கோகிலம்-குயில். செம்பு-தாமிரம்.

“கோகிலக்கண் செம்பஞ்சு கொய்ம்மலர்ப் பலாசம்
 அசோகப் பல்லவம் அணிமலர்க் குவளை
 இலவத் தலர்களென் றாறு குணமும்
 சௌகந் திக்குச் சாற்றிய நிறனே”

என்பது பழம்பாடல்.

38 - 39: செங்கல்............................ நிறமும்

     (இ-ள்) செங்கல் குராமலர் மஞ்சள் கோவை-செங்கல்லும் குரவமலரும் மஞ்சளும் கொவ்வைக்கனியும்; குங்குமம் அஞ்சில்- குங்குமமும் ஆகிய இவற்றின் நிறங்களாகிய ஐந்தனையும் தனித்தனியே பெற்றுள்ள; கோவாங்கு நிறமும்-கோவாங்கு என்னும் சாதிமாணிக்கங்களின்- நிறமும் என்க.

     (வி-ம்.) செங்கல்-காவிக்கல். குரா-குரவமரம். கோவை- கொவ்வைக்கனி. கோவாங்கிற்குத் திருவிளையாடற் புராணத்தில் ‘கோவாங்க ஒளி குரவு குசும்பைமலர் செங்கல் கொவ்வைக்கனி என்று ஒரு நான்கு’ என நான்கு நிறங்களே கூறப்பட்டன.

40 - 44: திட்டை...............................குற்றமும்

     (இ-ள்) திட்டை ஏறு சிவந்த விதாயம் மொக்கல்-திட்டையும் ஏறும் சிவந்த விதாயமும் மொக்கலும்; புற்று குருதி தொழு தினைமணி கோகனகம்-புற்றும் குருதியும் தொழுவும் தினைமணியும் கோகனகமும்; கற்பம் பாடி மாங்கிசகந்தி வளர் காஞ்சுண்டை என்று-கற்பமும் பாடியும் மாங்கிசகந்தியும் மிகாநின்ற காஞ்சுண்டையும் என்று கூறப்படுகின்ற; ஆங்கு அடைந்த ஒருபதின்மூன்று குற்றமும்-அவற்றை எய்திய பதின்மூன்று குற்றங்களும் என்க.

     (வி-ம்.) முற்கூறப்பட்ட கருகி நொய்தாதல் முதலிய முந்தைய நூலில் கூறப்பட்ட பதினாறு வகைக் குற்றங்களேயன்றித் திட்டை முதலாகக் காஞ்சுண்டை ஈறாகப் பிற்காலத்து நூல்களிலே கூறப்படுகின்ற பதின்மூன்று குற்றங்களும் உள என்பது கருத்து. முந்திய நூலின் மொழிந்தன குற்றமும் என முற்கூறியபடியால் இக்குற்றங்கள் பிந்து நூலிற் கூறப்பட்டவை என்பது பெற்றாம்; எனவே கல்லாடர் காலத்திலே புதிய மணிநூல்கள் தோன்றியிருந்தன என்பதும், தமிழகத்தில் மிகப் பழைய காலத்திலேயும் மணிநூல்கள் இருந்தன என்பதும் உணரற்பாலன.

45 - 47: இவை............................அல்லள்

     (இ-ள்) இவை எனக் கூறிய நிறை அருள் கடவுள்-இவை இவை என்று அமைச்சர் முதலியோர்க்குக் கூறியருளிய நிறைந்த அருளையுடைய சிவபெருமானுடைய; கூடல் கூடாக் குணத்தினர்போல-மதுரையம்பதியை எய்தாத தீக்குணமுடையோர் (மாறுபட்டிருத்தல்) போல மாறுபட்டிருக்கின்றாள்; முன்னையள் அல்லள் முன்னையள் அல்லள்-என் மகள் பண்டுபோன்றிருந்திலள்! பண்டுபோன்றிருந்திலள், பெரிதும் வேறுபட்டிருக்கின்றாள்; என்க.

     (வி-ம்.) இவை என்று அமைச்சர் முதலியோர்க்குக் கூறிய கடவுளுடைய கூடல் என்க. 1-முதல் - 45 வரையில் அடிதோய்ந்து வணிகன் ஆகி எடுத்து வாக்கால் குறியும் பன்னிரண்டும் குற்றமும் குணம்பத்தும் நிறமெட்டும் நிறமாறும் நிறமும் குற்றமும் இவை எனக் கூறிய கடவுள் என இயைபு காண்க.

58: சிற்றிடை..........................தானே

     (இ-ள்) சிற்றிடை பெருந்தோள் தேம் மொழி-சிறிய இடையையும் பெரிய தோள்களையும் இனிய மொழிகளையும் உடைய என் மகள் இங்ஙனம் மாறுபட்டிருத்தலாலே; என்க.

     (வி-ம்.) சிற்றிடை பெருந்தோள் என்புழிச் செய்யுளின்ப முணர்க.

54 - 57: அதிர்....................................வேண்டும்

     (இ-ள்) அதிர் உவர் கொக்கின் கள்வு உயிர் குடித்த- முழங்காநின்ற கடலினிடையே மாமரமாய் நின்ற சூரபதுமனுடைய வஞ்சகமுடைய உயிரைப் பருகிய; புகர் இலை நெடுவேல் அறுமுகக் குளவன்-குருதிக்கறை படிந்த நெடிய வேற்படையினையும் ஆறு முகங்களையுமுடைய முருகப்பெருமானுடைய; தகரம் கமழும் நெடுவரைக்கு- மயிர்ச்சந்தனங் கமழாநின்ற நெடிய திருப்பரங்குன்றத்தினது; ஆட்சி உற்றனள் ஆதல் வேண்டும்- ஆட்சியாகிய இடத்தின்கண் அகப்பட்டவள் ஆதல் ஒருடலை ஐயமின்று; என்க.

     (வி-ம்.) அதிருவர்: அன்மொழித்தொகை; கடல் என்க.கொக்கு-மாமரம். மாமரமாகி நின்ற சூரபதுமன் என்க. களவு- வஞ்சகம்; மாயமுமாம். புகர்-புள்ளி. ஈண்டுக் குருதிக்கறையாகிய புள்ளி. தகரம்-ஒருவகைச் சாந்து. தகரமரமுமாம். நெடுவரை-ஈண்டுத் திருப்பரங்குன்றம். வரைக்கு: உருபு மயக்கம். ஆட்சியுறுதல்- தெய்வத்தின் ஆட்சியுட்பட்ட இடத்திற் சேர்ந்து அதனாற் றீண்டப்படுதல். வேண்டும் என்பது, ஈண்டு ஒருதலை என்னும் பொருள்மேனின்றது. ஐயமில்லை என்பது குறிப்பெச்சம்.

     இனி இதனை, சிறுநகை முன்னையள் அல்லள்; கடவுள் கூடல் கூடாக் குணத்தினர்போல வேறுபட்டிருக்கின்றாள். அவள் பார்வையும் வேறுவேறாயின: ஐம்புலமும் ஒருவாய்ப் புக்கன. ஆதலால் அத் தேமொழி வரைக்கு ஆட்சியுற்றனள் ஆதல் வேண்டும்; ஐயமின்று என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.