21-30
 
21. தன்னுள் கையாறு எய்திடு கிளவி
 
 
நீர் நிலை நின்று, கால் கறுத்து எழுந்து,  
திக்கு நிலை படர்ந்த முகில்-பாசடையும்;  
இடை இடை உகளும் மீன் ஆம் மீனும்;  
செம் முகில் பழ நுரை, வெண் முகில் புது நுரை,  
எங்கும் சிதறிப் பொங்கி எழு வனப்பும்;
5
பல தலை வைத்து முடியாது பாயும்,  
எங்கும், முகம் வைத்த கங்கைக் காலும்;  
கொண்டு குளிர் பரந்த மங்குல்-வாவிக்குள்--  
முயல் எனும் வண்டு உண அமுத நறவு ஒழுக்கி,  
தேவர்-மங்கையர் மலர் முகம் பழித்து,
10
குறையாப் பாண்டில் வெண்மையின் மலர்ந்த  
மதித் தாமரையே! மயங்கிய ஒருவேன்,  
நின்பால் கேட்கும் அளி மொழி ஒன்று உள:  
மீன் பாய்ந்து மறிக்கத் திரையிடை மயங்கி,  
சூல் வயிறு உளைந்து, வளை கிடந்து முரலும்
15
புன்னைஅம் பொதும்பரில்--தம்முடை நெஞ்சமும்;  
மீன் உணவு உள்ளி இருந்த வெண் குருகு எனச்  
சோறு நறை கான்ற கைதைய மலரும்;  
பல தலை அரக்கர் பேர் அணிபோல,  
மருங்கு கூண்டு எழுந்து, கருங் காய் நெருங்கி,
20
விளை கள் சுமந்த தலை விரி பெண்ணையும்;  
இன்னும் காணாக் காட்சி கொண்டு இருந்த  
அன்னத் திரளும்; பெருங் கரியாக,  
சொல்லா இன்பமும் உயிருறத் தந்து,  
நாள் இழைத்திருக்கும் செயிர் கொள் அற்றத்து--
25
மெய்யுறத் தணந்த பொய்யினர், இன்று,  
(நெடு மலை பெற்ற ஒரு மகள் காண,  
நான்முக-விதியே தாளம் தாக்க,  
அந்த நான்முகனை உந்தி பூத்தோன்  
விசித்து மிறை பாசத்து இடக்கை விசிப்ப,
30
மூன்று புரத்து ஒன்றில் அரசுடை வாணன்  
மேருக் கிளைத்த தோள் ஆயிரத்தொடும்,  
எழு கடல் கிளர்ந்த திரள் கலி அடங்க,  
முகம் வேறு இசைக்கும் குடமுழவு இரட்ட;  
புட் கால் தும்புரு, மணக் கந்திருவர்,
35
நான்மறைப் பயன் ஆம் ஏழ் இசை அமைத்து,  
சருக்கரைக் குன்றில் தேன்மழை நான்றென;  
ஏழு முனிவர்கள் தாழும் மாதவர்,  
அன்பினர் உள்ளமொடு என்பு கரைந்து உருக;  
விரல் நான்கு அமைத்த அணி குரல் வீங்காது,
40
நான் மறை துள்ளும் வாய் பிளவாது,  
காட்டி உள் உணர்த்தும் நோக்கம் ஆடாது,  
பிதிர் கனல் மணி சூழ் முடி நடுக்காது,  
வயிறு குழி வாங்கி, அழு முகம் காட்டாது;  
நாசி, காகுளி, வெடிகுரல், வெள்ளை,
45
பேசாக் கீழ்-இசை, ஒருபுறம் ஒட்டல்,  
நெட்டுயிர்ப்பு எறிதல், எறிந்து நின்று இரட்டல்,  
ஓசை இழைத்தல், கழி போக்கு, என்னப்  
பேசுறு குற்றம் ஆசொடும் மாற்றி;  
வண்டின் தாரியும், கஞ்ச நாதமும்,
50
சிரல் வான்நிலையும், கழை இலை வீழ்வதும்,  
அருவி ஓசையும், முழவின் முழக்கமும்,  
வலம்புரிச் சத்தமும், வெருகின் புணர்ச்சியும்,  
இன்னும் என்று இசைப்பப் பன்னிய விதியொடு;  
மந்தரம், மத்திமம், தாரம், இவை மூன்றில்,
55
துள்ளல், தூங்கல், தெள்ளிதின் மெலிதல்,  
கூடிய கானம் அன்பொடு பரவ,  
பூதம் துள்ள, பேய் கைமறிப்ப,  
எங்கு உள உயிரும் இன்பம் நிறைந்து ஆட,  
நாடக-விதியொடு ஆடிய பெருமான்,
60
மதுரை மாநகர்ப் பூழியன் ஆகி,  
கதிர் முடி கவித்த இறைவன் மா மணிக்  
கால் தலைக் கொள்ளாக் கையினர் போல)  
நீங்கினர்; போக்கும், ஈங்குழி வருவதும்,  
கண்டது கூறுதி ஆயின்;
65
எண்தகப் போற்றி, நின் கால் வணங்குதுமே.
உரை
   
        22. வேறுபடுத்துக் கூறல்  
 
கண்ட காட்சி, சேணின், குறியோ?  
என்னுழி நிலையா உள்ளத்தின் மதியோ?  
சூர்ப்பகை-உலகில் தோன்றினர்க்கு அழகு  
விதிக்கும் அடங்கா என்பன விதியோ?  
என்னுடைக் கண்ணும் உயிரும் ஆகி,
5
உள் நிகழ் இன்பம் உள்ளாள் ஒருத்தி--  
மலைக்குஞ் சரத்தின் கடக் குழி ஆகி,  
நெடு மலை விழித்த கண்ணே ஆகி,  
அம் மலைத் திருநுதற்கு அழியாது அமைத்த  
வெள்ளைகொள் சிந்துர நல் அணி ஆகி,
10
தூர நடந்த தாள் எய்ப்பு ஆறி  
அமுதொடு கிடக்கும் நிறைமதிப் பக்கம்  
ஒருபால் கிடந்த துணை மதி ஆகி,  
அருவி வீசப் பறவை குடிபோகி  
விண்டு நறவு ஒழுக்கும் பாண்டில் இறால் ஆய்,
15
இளமை நீங்காது காவல் கொள் அமுதம்  
வரையர மாதர் குழுவுடன் அருந்த  
ஆக்கியிடப் பதித்த வள்ளமும் ஆகி,  
இடை வளி போகாது நெருங்கு முலைக் கொடிச்சியர்  
சிறு முகம் காணும் ஆடி ஆகி,
20
சிறந்தன, ஒரு சுனை, இம் மலை--ஆட,  
அளவாக் காதல் கைம்மிக்கு அணைந்தனள்:  
அவளே நீயாய், என் கண் குறித்த  
தெருமரல் தந்த அறிவு நிலை கிடக்க;  
சிறிது, நின் குறு வெயர் பெறும் அணங்கு ஆறி,
25
ஒரு கணன் நிலைக்க மருவுதி ஆயின்,  
இந் நிலை பெயர உன்னும் அக் கணத்தில்,  
தூண்டா விளக்கின், ஈண்டு, அவள் உதவும்:  
அவ்வுழி, உறவு மெய் பெறக் கலந்து, இன்று,  
ஒரு கடல் இரண்டு திருப் பயந்தாங்கு,
30
வளைத்த நெடுங் கார்ப் புனத்து, இருவீரும்--  
மணி நிற ஊசல் அணி பெற உகைத்தும்;  
கருங் கால் கவணிடைச் செம்மணி வைத்து,  
பெருந்தேன் இறாலொடு குறி விழ எறிந்தும்;  
வெண் துகில் நுடங்கி, பொன் கொழித்து, இழியும்
35
அருவி ஏற்றும்; முழை மலை கூஉயும்;  
பெருஞ் சுனை விழித்த நீலம் கொய்தும்;  
கொடுமரம் பற்றி, நெட்டிதண் பொலிந்து,  
தினைக் குரல் அறையும் கிளிக் கணம் கடிதிர்:  
(வெள்ளி, இரும்பு, பொன், எனப் பெற்ற
40
மூன்று புரம் வேவ, திருநகை விளையாட்டு,  
ஒரு நாள், கண்ட பெருமான், இறைவன்,  
மாதுடன் ஒன்றி, என் மனம் புகுந்து,  
பேணா உள்ளம் காணாது நடந்து,  
கொலை களவு என்னும் பழுமரம் பிடுங்கி,
45
பவர் சுவர் இடித்துப் புதுக்கக் கட்டி,  
அன்புகொடு மேய்ந்த நெஞ்சமண்டபத்து,  
பாங்குடன் காணத் தோன்றி, உள் நின்று,  
பொன் மலர்ச் சோலை விம்மிய பெரு மலர்  
இமையோர் புரத்தை நிறை மணம் காட்டும்
50
கூடல்அம் பதியகம் பீடுபெற இருந்தோன்  
இரு தாள் பெற்றவர் பெருந் திருப் போல)  
மருவிய பண்ணை இன்பமொடு விளைநலம்  
சொல்லுடன் அமராது ஈங்கு--  
வில்லுடன் பகைத்த செந் திரு நுதலே!
55
உரை
   
        23. காமம் மிக்க கழிபடர் கிளவி  
 
வானவர்க்கு இறைவன், நிலம் கிடை கொண்டு,  
திரு உடல் நிறை விழி ஆயிரத் திரளும்  
இமையாது விழித்த தோற்றம் போல,  
கஞ்சக் கொள்ளை இடையற மலர்ந்து,  
மணம் சூழ் கிடந்த நீள் கருங் கழியே!
5
கருங் கழி கொடுக்கும் வெள் இறவு அருந்தக்  
கை பார்த்திருக்கும் மடப் பெடைக் குருகே!  
பெடைக் குருகு அணங்கின் விடுத்த வெண் சினையொடு  
காவல் அடைகிடக்கும் கைதைஅம் பொழிலே!  
வெம்மையொடு கூடியும், தண்மையொடு பொருந்தியும்,
10
உலக இருள் துரக்கும் செஞ்சுடர், வெண்சுடர்,  
காலம் கோடா முறைமுறை தோற்ற  
மணி நிரை குயிற்றிய மண்டபம் ஆகி;  
பொறை மாண்டு உயிர்க்கும் தாயாம் மண்மகள்  
களையாது உடுக்கும் பைந் துகில் ஆகி;
15
வேனிற் கிழவன் பேர் அணி மகிழ,  
முழக்காது தழங்கும் வார் முரசு ஆகி;  
நெடியோன் துயிலா அறிவொடு துயில,  
பாயற்கு அமைந்த பள்ளியறை ஆகி;  
சலபதி ஆய்ந்து, சேமநிலை, வைத்த
20
முத்து மணி கிடக்கும் சேற்று இருள் அரங்காய்;  
புலவு உடற் பரதவர் தம் குடி ஓம்ப,  
நாளும் விளைக்கும் பெரு வயல் ஆகி;  
கலம் எனும் நெடுந் தேர் தொலையாது ஓட,  
அளப்பு அறப் பரந்த வீதி ஆகி;
25
சுறவ வேந்து நெடும் படை செய்ய  
முழக்கமொடு வளைத்த அமர்க்களம் ஆகி;  
மகரத் தெய்வம் நாள் நிறைந்து உறைய,  
மணி விளக்கு நிறைந்த ஆலயம் ஆகி;  
நீர் நெய் வார்த்துச் சகரர் அமைத்த
30
தீ வளர் வட்டக் குண்டம் ஆகி;  
எண் திகழ் பகுவாய் இன மணிப் பாந்தள்-  
தண்டில் நின்று எரியும் தகளி ஆகி;  
பஞ்சவன் நிறைந்த அன்புடன் வேண்ட,  
மாறிக் குனித்த நீறு அணி பெருமாற்கு
35
அமுத-போனகம் கதுமென உதவும்  
அடும் தீ மாறா மடைப்பள்ளி ஆகி;  
இன்னும் பலவாய் மன்னும் கடலே!  
நுங்கள் இன்பம் பெருந் துணை என்றால்,  
தண்ணம் துறைவற்கு இன்று இவள் ஒருத்தி,
40
நெருப்பு உறு மெழுகின் உள்ளம் வாடியும்,  
அருவி தூங்கக் கண்ணீர் கொண்டும்,  
அரவின் வாய் அரியின் பலவும் நினைந்தும்,  
நிலையாச் சூளின் நிலையா நெஞ்சம்  
கொண்டனள் என் என, என் முகம் நாடி,
45
உற்ற வாய்மை சற்றும் தருகிலீர்  
அன்று எனின், நும்மின் ஒன்று பட்டு, ஒருகால்,  
'இவளோ துயரம் பெறுவது என்?' என்று  
வினவாது இருக்கும் கேண்மை,  
மனனால் நாடின், கொலையினும் கொடிதே!
50
உரை
   
      24. இடம் அணித்துக்கூறி வற்புறுத்தல்  
   
பொருப்பு வளன் வேண்டி, மழைக்கண் திறப்ப,  
குருகு பெயர்க் குன்றத்து உடல் பக எறிந்த  
நெடு வேற் கடவுள் மயில், கொடி, முன்றில்  
பெருங்கிளை கூண்டு, வெட்சி மலர் பரப்பி,  
இறால் நறவு அளாய செந் தினை வெள் இடி,
5
தேக்கு இலை விரித்து, நால் திசை வைத்து,  
மனவு அணி முதியோள், வரை அணங்கு அயர்ந்து,  
மூன்று காலமும் தோன்றக் கூற,  
வேலன் சுழன்று குறு மறி அறுப்ப,  
கருவி நுதிகொள் நெறி இலை ஈந்தின்
10
முற்றிய பெரு நறவு எண்ணுடன் குடித்து,  
நெட்டிலை அரம்பைக் குறுங் காய் மானும்  
உளியம் தணித்த கணை கொள் வாய்த் திரிகல்  
ஒப்பு உடைத்தாய வட்ட வாய்த் தொண்டகம்,  
கோல் தலை பனிப்ப, வான்விடு பெருங் குரல்
15
வீயாது துவைக்கும் கடன் மலை நாடர்  
வருந்தி ஏற்று எடுத்த செந்திரு மட மகள்!  
ஒருவுக, உளத்துப் பெருகிய நடுக்கம்:  
எம் ஊர்ச் சேணும், நும் ஊர்க் குன்றமும்,  
பெருந் தவர் குழுவும், அருங் கதி இருப்பும்;
20
பொதியமும், களிப்ப விரிதரு தென்றலும்;  
கனைகடல் குடித்த முனிவனும், தமிழும்;  
மேருவும், மூவர்க்கு ஓதிய புரமும்;  
உலகம் ஈன்று அளித்த உமையும், மா அறனும்;  
தேவர்க்கு அரசனும், காவல் தருவும்;
25
வழுவா விதியும், எழுதா மறையும்;  
செங்கோல் வேந்தும், தங்கிய குடியும்;  
தவம் சூழ் இமயமும், கமஞ் சூல் மழையும்:  
எல்லையில் ஈங்கு இவை சொல்லிய அன்றி,  
கண்ணன் கரமும் வெண்ணெயும் போலப்
30
பாசடை புதைத்த நெட்டாற்று எரியுள்,  
பூத்து அலர் விரித்த சேப் படு தாமரை-  
உள் வளை உறங்கும் வள்ள வாய்க் கூடல்  
நிறைந்து உறை முக் கண் பெருந் திறல் அடிகள்,  
அடியவர்க்கு எவ்வளவு" அது ஆம்--
35
கொடி புரை நுசுப்பின் பெரு முலையோளே!  
உரை
   
25. நின் குறை நீயே சென்று உரை என்றல்
 
 
வேற்றுப் பிடி புணர்ந்த தீராப் புலவி  
சுற்றமொடு தீர்க்க உய்த்த காதலின்,  
கருங் கை வெண் கோட்டுச் சிறு கட் பெருங் களிறு,  
உளத்து நின்று அளிக்கும் திருத்தகும் அரு நூல்  
பள்ளிக் கணக்கர் பால் பட்டாங்கு,
5
குறிஞ்சிப் பெருந் தேன் இறாலொடு சிதைத்து,  
மென் நடைப் பிடிக்குக் கைபிடித்து உதவி,  
அடிக்கடி வணங்கும் சாரல் நாட!  
(அந்தணர் இருக்கை அகல்வோர் சூழ்ந்தென,  
நல் நயம் கிடந்த பொன்னகர் மூடிப்
10
புலை செய்து, உடன்று, நிலைநிலை தேய்க்கும்  
தள்ளா மொய்ம்பின், உள் உடைந்து, ஒருகால்,  
வேதியன் முதலா அமரரும் அரசனும்  
போது தூய் இரப்ப, புணரா மயக்கம்  
நாரணன் நடித்த பெரு வாய்த் தருக்கத்து
15
அறிவு நிலை போகி, அருச்சனை விடுத்த  
வெள்ள முரண் அரக்கர் கள்ள மதில் மூன்றும்,  
அடுக்கு நிலை சுமந்த வலித் தடப் பொன்மலை  
கடு முரண் குடிக்கும் நெடு வில் கூட்டி,  
ஆயிரம் தீ வாய் அரவு நாண் கொளீஇ,
20
மாதவன், அங்கி, வளி, குதை, எழு நுனி,  
செஞ்சரம்; பேர் உருள், அருக்கன், மதி ஆக;  
தேர் வரை வையம் ஆகத் திருத்தி,  
சென்னி மலை ஈன்ற கன்னி விற் பிடிப்ப;  
ஒரு கால் முன் வைத்து, இரு கால் வளைப்ப,
25
வளைத்த வில் வட்டம் கிடைத்தது கண்டு,  
சிற நகை கொண்ட ஒரு பெருந் தீயின்,  
ஏழ் உயர்வானம் பூழிபடக் கருக்கி;  
அருச்சனை விடாது, அங்கு, ஒருப்படும் மூவரில்  
இருவரைக் காவல் மருவுதல் ஈந்து,
30
மற்று ஒருவற்கு வைத்த நடம் அறிந்து  
குடமுழவு இசைப்பப் பெறும் அருள் நல்கி,  
ஒரு நாள் அருச்சனை புரிந்திடா அவர்க்கும்  
அரும்பெறல் உளது ஆம் பெரும் பதம் காட்டி,  
எரியிடை மாய்ந்த கனல்விழி அரக்கர்க்கு
35
உலவாப் பொன்னுலகு அடைதர வைத்த  
சுந்தரக் கடவுள், கந்தரக் கறையோன்,  
மாமி ஆடப் புணரி அழைத்த  
காமர் கூடற்கு இறைவன் கழல் இணை,  
களிப்புடை அடியர்க்கு வெளிப்பட்டு என்ன)
40
ஒரு நீ தானே மருவுதல் கிடைத்து,  
கள்ளமும் வெளியும் உள்ள முறை அனைத்தும்  
விரித்துக் கூறி, பொருத்தமும் காண்டி--  
ஈயா மாந்தர் பொருள் தேய்ந்தென்ன  
நுண் இடை சுமந்து ஆற்றாது
45
கண்ணிய சுணங்கின் பெரு முலையோட்கே!  
உரை
   
       26. இரவுக் குறி வேண்டல்  
 
வள்ளியோர் ஈதல் வரையாது போல,  
எண் திசை கரு இருந்து, இன மழை கான்றது;  
வெண் நகைக் கருங் குழல் செந் தளிர்ச் சீறடி  
மங்கையர் உளம் என, கங்குலும் பரந்தது;  
தெய்வம் கருதாப் பொய்யினர்க்கு உரைத்த
5
நல் வழி மான, புல் வழி புரண்டது;  
காலம் முடிய, கணக்கின் படியே,  
மறலி விடுக்க வந்த தூதுவர்  
உயிர்தொறும் வளைந்தென, உயிர் சுமந்து உழலும்  
புகர்மலை இயங்காவகை அரி சூழ்ந்தன;
10
(வெள் உடற் பேழ்வாய்த் தழல் விழி மடங்கல்-  
உரிவை மூடி, கரித் தோல் விரித்து,  
புள்ளி பரந்த வள் உகிர்த் தரக்கின்  
அதள் பியற்கு இட்டு, குதி பாய் நவ்வியின்  
சருமம் உடுத்து, கரும் பாம்பு கட்டி,
15
முன்பு உகுவிதிகள் என்பு குரல் பூண்டு,  
கருமா எயிறு திரு மார்பு தூக்கி,  
வையகத் துயரின் வழக்கு அறல் கருதி--  
தொய்யில் ஆடும் கடனுடைக் கன்னியர்  
அண்ணாந்த வன முலைச் சுண்ணமும் அளறும்,
20
எழிலி வான் சுழலப் பிளிறு குரற் பகட்டினம்  
துறை நீர் ஆடப் பரந்த கார் மதமும்;  
பொய்கையும், கிடங்கும், செய்யினும் புகுந்து;  
சிஞ்சை இடங்கரை, பைஞ் சிலைச் சேலை,  
உடற் புலவு மாற்றும் படத்திரை வையை
25
நிறைநீர் வளைக்கும் புகழ் நீர்க் கூடல்--  
வெள்ளிஅம் பொதுவில், கள் அவிழ் குழலொடும்  
இன்ப நடம் புரியும் தெய்வ நாயகன்)  
அருவி உடற் கயிறும், சுனை மதக் குழியும்,  
பெருந்தேன் செவியும், கருந் தேன் தொடர்ச்சியும்,
30
ஓவா, பெரு மலைக் குஞ்சரம் மணக்க,  
வளம் தரும் உங்கள் தொல் குடிச் சீறூர்க்கு,  
அண்ணிய விருந்தினன் ஆகி  
நண்ணுவன்--சிறு நுதற் பெரு விழியோளே!  
உரை
   
      27. நகர் அணிமை கூறல்  
 
புயற்கார்ப் பாசடை, எண்படப் படர்ந்த,  
வெள்ளப் பெரு நதி கொள்ளை முகம் வைத்து,  
நீட, நிறை பாயும் வான வாவிக்குள்  
ஒரு செந்தாமரை நடு மலர்ந்தென்ன,  
மூஅடி வழக்கிற்கு ஓர் அடி மண் கொண்டு,
5
ஒரு தாள் விண்ணத்து இருமை பெற நீட்டிய  
கருங் கடல் வண்ணன் செங் கருங் கரத்து  
ஒன்றால் இரு மலை அன்று ஏந்தியதென,  
உந்தி ஒழுக்கு ஏந்திய வன முலையாட்டியும்  
வரை பொரும் மருமத்து ஒரு திறன் நீயும்,
10
முழை வாய் அரக்கர் பாடு கிடந்தொத்த  
நிறை கிடைப் பொற்றை வரை கடந்து இறந்தால்--  
எரி தழற் குஞ்சி, பொறி விழி, பிறழ் எயிற்று,  
இருள் உடல் அந்தகன் மருள் கொள உதைத்த  
மூவாத் திருப் பதத்து ஒரு தனிப் பெருமான்,
15
எண்ணில் பெறாத அண்டப் பெருந் திரள்  
அடைவு ஈன்றளித்த பிறை நுதற் கன்னியொடும்  
அளவாக் கற்பம் அளி வைத்து நிலைஇய--  
பாசடை நெடுங் காடு காணிகொள் நீர்நாய்,  
வானவில் நிறத்த நெட்டுடல் வாளைப்
20
பேழ்வாய் ஒளிப்ப, வேட்டுவப்பெயர் அளி-  
இடை உறழ் நுசுப்பின் குரவை வாய்க் கடைசியர்  
களை கடுந் தொழில் விடுத்து, உழவு செறு மண்ட,  
பண்கால் உழவர் பகடு பிடர் பூண்ட  
முடப் புது நாஞ்சில் அள்ளல் புக நிறுத்தி,
25
சூடு நிலை உயர்த்தும் கடுங் குலை ஏற,  
பைங் குவளை துய்க்கும் செங் கட் கவரி  
நாகொடு வெருண்டு கழைக் கரும்பு உழக்க,  
அமுத வாய் மொழிச்சியர் நச்சுவிழி போல  
நெடுங் குழை கிழிப்பக் கடுங் கயல் பாயும்
30
தண்ணம் பழனம் சூழ்ந்த--  
கண் இவர் கூடல் பெரு வளம் பதியே!  
உரை
   
28. அறியாள் போன்று நினைவு கேட்டல்
 
   
பற்றலர்த் தெறுதலும், உவந்தோர்ப் பரித்தலும்,  
வெஞ் சுடர், தண் மதி, எனப் புகழ் நிறீஇய  
நெட்டிலைக் குறும் புகர்க் குருதி வேலவ!  
(வேதியன் படைக்க, மாலவன் காக்கப்  
பெறாதது ஓர் திரு உருத் தான் பெரிது நிறுத்தி,
5
அமுது அயில் வாழ்க்கைத் தேவர்கோன் இழிச்சிய,  
மதமலை இரு-நான்கு பிடர் சுமந்து ஓங்கிச்  
செம் பொன் மணி குயிற்றிய சிகரக் கோயிலுள்,  
அமையாத் தண்ணளி உமையுடன் நிறைந்த  
ஆலவாய் உறைதரும் மூலக் கொழுஞ் சுடர்)
10
கருவி வானம் அடிக்கடி பொழியும்,  
கூடம் சூழ்ந்த நெடு முடிப் பொதியத்து--  
கண் நுழையாது காட்சிகொடு தோற்றிய  
வெறி வீச் சந்தின் நிரை இடை எறிந்து,  
மற்று அது வேலி கொள வளைத்து, வளர் ஏனல்
15
நெடுங் கால், குற்றுழி, இதணுழை காத்தும்;  
தேவர்கோமான் சிறை அரி புண்ணினுக்கு  
ஆற்றாது, பெரு முழை வாய் விட்டுக் கலுழ்ந்தென,  
கமஞ் சூற் கொண்மூ, முதுகு குடியிருந்து,  
வான் உட்க முரற்றும் மலைச் சுனை குடைந்தும்;
20
பிரசமும், வண்டும், இரவி தெறு மணியும்,  
வயிரமும், பொன்னும், நிரைநிரை கொழித்து,  
துகில் நான்று நுடங்கும் அருவி ஏற்றும்;  
மறு அறு செம்மணி கால் கவண் நிறுத்தி,  
நிறைமதி கிடக்கும் இறால் விழ எறிந்தும்;
25
எதிர் சொல் கேட்பக் கால் புகத் திகைத்த  
நெருக்கு பொழில் புக்கு, நெடு மலை கூயும்;  
நுசுப்பின் பகைக்கு நூபுரம் அரற்றப்  
பைங் காடு நகைத்த வெண் மலர் கொய்தும்;  
மனத்தொடு கண்ணும் அடிக்கடி கொடுபோம்
30
செம் பொன் செய்த வரிப் பந்து துரந்தும்;  
இனைய, பல் நெறிப் பண்ணை இயங்கும்  
அளவாக் கன்னியர்-அவருள்,  
உளம் ஆம் வேட்கையள் 'இன்னள்' என்று உரையே.
உரை
   
        29. சுடரோடு இரத்தல்  
 
ஈன்ற என் உளமும், தோன்றும் மொழி பயின்ற  
வளை வாய்க் கிள்ளையும், வரிப் புனை பந்தும்,  
பூவையும், கோங்கின் பொன் மலர் சூட்டிய  
பாவையும், மானும்--தெருள்பவர் ஊரும்,  
நெடுந் திசை நடக்கும் பொருள் நிறை கலத்தினைப்
5
பெரு வளி மலக்க, செயல் மறுமறந்தாங்கு--  
சேர மறுக, முதுக்குறை உறுத்தி,  
எரி தெறும் கொடுஞ் சுரத்து இறந்தனளாக,  
(நதி மதம், தறுகண், புகர், கொலை, மறுத்த  
கல் இபம்-அதனைக் கரும்பு கொள வைத்த
10
ஆலவாய் அமர்ந்த நீலம் நிறை கண்டன்,  
மறிதிரைப் பரவைப் புடை வயிறு குழம்பத்  
துலக்கு மலை ஒரு நாள் கலக்குவ போல,  
உழுவை உகிர் உழக்கும் ஏந்து கோட்டு உம்பல்,  
உரிவை மூடி ஒளியினை மறைத்து,
15
தரை படு மறுக்கம் தடைந்தன போல)  
விண் உற விரித்த கரு முகிற்படாம் கொடு,  
மண்ணகம் உருகக் கனற்றும் அழல் மேனியை--  
எடுத்து மூடி, எறிதிரைப் பழனத்துப்  
பனிச் சிறுமை கொள்ளா முள் அரை முளரி
20
வண்டொடு மலர்ந்த வண்ணம் போல,  
கண்ணும் மனமும் களிவர மலர்த்துதி--  
மலர்தலை உலகத்து இருள் எறி விளக்கும்,  
மன் உயிர் விழிக்கக் கண்ணிய கண்ணும்,  
மறை உகு நீர்க்குக் கருவும், கரியும்,
25
வடிவம் எட்டனுள் வந்த ஒன்றும்,  
சேண் குளம் மலர்ந்த செந்தாமரையும்,  
சோற்றுக் கடன் கழிக்கப் போற்று உயிர் அழிக்கும்  
ஆசைச் செருநர்க்கு அடைந்து செல் வழியும்,  
அருளும் பொருளும், ஆகித்
30
திரு உலகு அளிக்கும் பருதி வானவனே!  
உரை
   
         30. இன்னல் எய்தல்  
 
வள் உறை கழித்துத் துளக்கு வேல்-மகனும்,  
மனவு மயிற்கழுத்து மாலையாட்டியும்,  
நெல் பிடித்து உரைக்கும் குறியினோளும்,  
நடுங்கு அஞர் உற்ற பழங்கண் அன்னையரும்,  
அயரும் வெறியில் தண்டா அரு நோய்,
5
ஈயாது உண்ணுநர் நெடும் பழி போலப்  
போகாக் காலை புணர்க்குவது என்னோ?  
(நான்கு எயிற்று ஒருத்தல் பிடர்ப் பொலி வரைப்பகை  
அறுகால் குளிக்கும் மதுத் தொடை ஏந்த,  
முள்-தாட் செம்மலர் நான்முகத்து ஒருவன்
10
எண்ணி நெய் இறைத்து மண அழல் ஓம்ப,  
புவி அளந்து உண்ட திரு நெடு மாலோன்  
இரு கரம் அடுக்கிப் பெரு நீர் வார்ப்ப  
ஒற்றை-ஆழியன், முயல் உடல் தண்சுடர்,  
அண்டம் விளர்ப்பப் பெரு விளக்கு எடுப்ப,
15
அளவாப் புலன் கொள, விஞ்சையர் எண்மரும்,  
வள்ளையில் கருவியில் பெரும் புகழ் விளைப்ப,  
முனிவர் செங் கரம் சென்னி ஆக,  
உருப்பசி முதலோர் முன் வாழ்த்து எடுப்ப,  
மும் முலை ஒருத்தியை மணந்து உலகு ஆண்ட)
20
கூடற்கு இறைவன் இரு தாள் இருத்தும்  
கவையா வென்றி நெஞ்சினர் நோக்க,  
பிறவியும் கூற்றமும் பிரிந்தன போலப்  
பீரமும் நோயும் மாறில்,  
வாரித் துறைவற்கு என் ஆதும்மே?
25
உரை