61-70
 
61. கற்புப் பயப்பு உரைத்தல்
 
   
எழு கடல் வளைந்த பெருங்கடல் நாப்பண்  
பத்துடை நூறு பொற்பு அமர் பரப்பும்  
ஆயிரத்து இரட்டிக் கீழ் மேல் நிலையும்  
யோசனை உடுத்த, மாசு அறு காட்சிப்  
பளிக்குப் பொருப்பில், திடர் கொள் மூதூர்க்
5
களவுடை வாழ்க்கை உள மனக் கொடியோன்  
படர் மலை ஏழும், குருகு அமர் பொருப்பும்,  
மா எனக் கவிழ்ந்த மறிகடல் ஒன்றும்,  
கடுங் கனல் பூழிபடும்படி நோக்கிய  
தாரை எட்டு உறையும் கூர் இலை நெடு வேல்
10
காற்படைக் கொடியினன் கருணையோடு அமர்ந்த  
புண்ணியக் குன்றம் புடை பொலி கூடல்  
பிறைச் சடை முடியினன், பேர் அருள் அடியவர்க்கு  
ஒருகால் தவறா உடைமைத்து என்ன,  
பிரியாக் கற்பு எனும் நிறையுடன் வளர்ந்த
15
நெடுங் கயல் எறி விழிக் குறுந் தொடித் திருவினள்  
தெய்வம் என்று ஒரு கால் தெளியவும் உளத்து இலள்--  
பல உயிர் தழைக்க ஒரு குடை நிழற்றும்  
இரு குல வேந்தர் மறு புலப் பெரும் பகை  
நீர் வடுப் பொருவ நிறுத்திடப் படரினும்,
20
ஏழ் உயர் இரட்டி மதலை நட்டு அமைத்த  
தன் பழங் கூடம் தனிநிலை அன்றி,  
உடு நிலை வானப் பெரு முகடு உயரச்  
செய்யும் ஓர் கூடம் புணர்த்தின்,  
நெய்ம்மிதி உண்ணாது, அவன் கடக் களிறே.
25
உரை
   
62. மருவுதல் உரைத்தல்
 
   
பெண் எனப் பெயரிய பெரு மகள் குலனுள்,  
உணா நிலன் உண்டு பராய அப் பெருந் தவம்  
கண்ணுற உருப்பெறும் காட்சி-அது என்னக்  
கரு உயிர்த்து எடுத்த குடி முதல் அன்னை!  
நின்னையும் கடந்தது அன்னவள் அருங் கற்பு;
5
அரி கடல் மூழ்கிப் பெறும் அருள் பெற்ற  
நிலமகள் கடந்தது, நலனவள் பொறையே;  
இரு வினை நாடி உயிர்தொறும் அமைத்த  
ஊழையும் கடந்தது, வாய்மையின் மதனே;  
கற்பகம் போலும் அற்புதம் பழுத்த
10
நின் இலம் கடந்தது, அன்னவள் இல்லம்;  
பேரா வாய்மை நின் ஊரனைக் கடந்தது,  
மற்று-அவள் ஊரன் கொற்ற வெண்குடையே;  
ஏழ் உளைப் புரவியோடு எழுகதிர் நோக்கிய  
சிற்றிலை நெரிஞ்சில் பொற்பூ என்ன,
15
நின் முகக் கிளையினர் தம்மையும் கடந்தனர்,  
மற்று-அவட் பார்த்த மதிக் கிளையினரே;  
உடல் நிழல் மான உனது அருள் நிற்கும்  
என்னையும் கடந்தனள், பொன்னவட்கு இனியோள்;  
(கொலை மதில் மூன்றும் இகல் அறக் கடந்து,
20
பெரு-நிலவு எறித்த புகர் முகத் துளைக் கை  
பொழி மதக் கறையடி அழிதரக் கடந்து,  
களவில் தொழில் செய் அரிமகன் உடலம்  
திருநுதல் நோக்கத்து எரிபெறக் கடந்து,  
மாறுகொண்டு அறையும் மதிநூற்கடல் கிளர்
25
சமயக் கணக்கர்தம் திறம் கடந்து,  
புலனொடு தியங்கும் பொய்உளம் கடந்த--  
மலருடன் நிறைந்து வான்வழி கடந்த  
பொழில் நிறை கூடல் புது மதிச் சடையோன்  
மன் நிலை கடவா மனத்தவர் போல)
30
ஒன்னலர் இடும் திறைச் செலினும்,  
தன் நிலை கடவாது, அவன் பரித் தேரே.
உரை
   
63. பள்ளியிடத்து ஊடல்
 
   
நீரர மகளிர் நெருக்குபு புகுந்து  
கண் முகம் காட்டிய காட்சித்து என்ன,  
பெருங் குலை மணந்த நிறைநீர்ச் சிறைப் புனல்  
மணி நிறப் படாம் முதுகு இடையறப் பூத்து,  
சுரும்பொடு கிடந்த சொரி இதழ்த் தாமரை
5
கண்ணினும் கொள்ளாது உண்ணவும் பெறாது,  
நிழல் தலைமணந்து புனல் கிடவாது,  
விண் உடைத்து உண்ணும் வினைச் சூர் கவர்ந்த  
வானவர் மங்கையர் மயக்கம் போல,  
பிணர்க் கரு மருப்பின் பிதிர்பட உழக்கி,
10
வெண் கார்க் கழனிக் குருகு எழப் புகுந்து,  
கடுக்கைச் சிறு காய் அமைத்த வாற் கருப்பை  
இணை எயிறு என்ன இடைஇடை முள் பயில்  
குறும் புதல் முண்டகம் கரும்பு எனத் துய்த்து,  
செங் கட் பகடு தங்கு வயல் ஊரர்க்கு,
15
(அரு மறை விதியும், உலகியல் வழக்கும்,  
கருத்து உறை பொருளும், விதிப்பட நினைந்து,  
வடசொல் மயக்கமும் வருவன புணர்த்தி,  
ஐந் திணை வழுவாது அகப்பொருள் அமுதினை,  
குறுமுனி தேறவும், பெறுமுதல் புலவர்கள்
20
ஏழ்-எழு பெயரும் கோது அறப் பருகவும்,  
புலனெறி வழக்கில் புணர் உலகவர்க்கும்,  
முன் தவம் பெருக்கும் முதல் தாபதர்க்கும்,  
நின்று அறிந்து உணர, தமிழ்ப் பெயர் நிறுத்தி,  
எடுத்துப் பரப்பிய இமையவர் நாயகன்
25
மெய்த் தவக் கூடல்) விளைபொருள் மங்கையர்  
முகத்தினும், கண்ணினும், முண்டக முலையினும்,  
சொல்லினும், துவக்கும் புல்லம் போல  
எம் இடத்து இலதால்; என்னை,  
தம் உளம் தவறிப் போந்தது இவ் இடனே?
30
உரை
   
64. வழிப்படுத்து உரைத்தல்
 
   
செங்கோல்-திருவுடன் தெளிந்து அறம் பெருக்கிய  
மறு புல வேந்தன் உறு படை எதிர்ந்த  
கொடுங்கோல்-கொற்றவன் நெடும் படை அனைத்தும்  
சேர இறந்த திருத்தகு நாளில்,  
அவன் பழி நாட்டு நடுங்கு நற் குடிகள்
5
கண்ணொடு கண்ணில் கழறிய போல,  
ஒருவரின் ஒருவர் உள்ளத்து அடக்கித்  
தோன்றா நகையுடன், துண்டமும் சுட்டி,  
அம்பல் தூற்றும் இவ் ஊர் அடக்கி,  
கடல் கிடந்தன்ன நிரைநிரை ஆய-
10
வெள்ளமும், மற்றவர் கள்ளமும் கடந்து,  
தாயவர் மயங்கும் தனித் துயர் நிறுத்தி,  
பறவை மக்களைப் பரியுநர்க் கொடுத்து,  
கிடைப்பல் யானே நும்மை: (தழைத்து எழு  
தாளியும் கொன்றையும் தழைத்தலின் முல்லையும்,
15
பாந்தளும் தரக்கும் பயில்தலின் குறிஞ்சியும்,  
முடைத்தலை, எரி, பொடி, உடைமையின் பாலையும்,  
ஆமையும் சலமும் மேவலின் மருதமும்,  
கடுவும் சங்கும் ஒளிர்தலின் நெய்தலும்,  
ஆகத் தனது பேர் அருள் மேனியில்,)
20
திணை ஐந்து அமைத்த இணைஇலி நாயகன்  
(வரும் தொழில் அனைத்தும் வளர் பெரும் பகலே,  
எரி விரிந்தன்ன இதழ்ப் பல் தாமரை  
அருள் முகத் திருவொடு மலர்முகம் குவிய,  
மரகதப் பாசடை இடை இடை நாப்பண்
25
நீலமும் மணியும் நிரை கிடந்தென்ன  
வண்டொடு குமுதம் மலர்ந்து இதழ் விரிப்ப,  
குருகும் சேவலும் பார்ப்புடன் வெருவிப்  
பாசடைக் குடம்பையூடு கண்படுப்ப,  
துணையுடன் சகோரம் களியுடன் பெயர்ந்து
30
விடும் அமுது அருந்த விண்ணகத்து அணக்க,  
சுரிவளைச் சாத்து நிறைமதி தவழும்)  
எறிதிரைப் பழனக் கூடல்  
செறிக இன்று அம்ம, திருவொடும் பொலிந்தே!  
உரை
   
65. கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல்
 
   
இரு நிலம் தாங்கிய வலி கெழு நோன்மைப்  
பொன்முடிச் சயிலக் கணவற் புணர்ந்து,  
திரு எனும் குழவியும், அமுது எனும் பிள்ளையும்,  
மதி எனும் மகவும், அமர் உலகு அறியக்  
கண்ணொடு முத்தம் கலுழ்ந்து, உடல் கலங்கி,
5
வாய்விட்டு அலறி, வயிறு நொந்து ஈன்ற  
மனன் எழு வருத்தம்-அது உடையைஆதலின்;  
பெரு மயல் எய்தா நிறையினள் ஆக  
என் ஒரு மயிலும் நின் மகளாக் கொண்டு,  
(தோன்றி நின்று அழியாத் துகள் அறு பெருந் தவம்
10
நிதி எனக் கட்டிய குறுமுனிக்கு, அருளுடன்  
தரளமும், சந்தும், எரி கெழு மணியும்,  
முடங்குளை அகழ்ந்த கொடுங் கரிக் கோடும்,  
அகிலும், கனகமும், அருவி கொண்டு இறங்கிப்  
பொருநை அம் கன்னிக்கு அணி அணி பூட்டும்
15
செம்பு உடல் பொதிந்த தெய்வப் பொதியமும்,  
உவட்டாது அணையாது உணர்வு எனும் பசி எடுத்து  
உள்ளமும் செவியும் உருகி நின்று உண்ணும்  
பெருந் தமிழ்-அமுதும் பிரியாது கொடுத்த)  
தோடு அணி கடுக்கைக் கூடல் எம்பெருமான்,
20
எவ் உயிர் இருந்தும் அவ் உயிர் அதற்குத்  
தோன்றாது அடங்கிய தொன்மைத்து என்ன,  
ஆர்த்து எழு பெருங் குரல் அமைந்து நின்று ஒடுங்கி, நின்  
பெருந் தீக் குணனும் ஒழிந்து, உளம் குளிருறும்  
இப் பெரு நன்றி இன்று எற்கு உதவுதி-
25
எனின் பதம் பணிகுவல் அன்றே--நன்கு அமர்  
பவள வாயும், கிளர்பச்சுடம்பும்,  
நெடுங்கயல் விழியும், நிலைமலை முலையும்,  
மாசு அறப் படைத்து, மணி உடல் நிறைத்த,  
பெரு முகில் வயிறு அளவு ஊட்டித்
30
திரு உலகு அளிக்கும், கடல்-மடமகளே!  
உரை
   
66. பிரிவு உணர்த்தல்
 
   
நிலையுடைப் பெருந் திரு நேர்படுகாலைக்  
காலால் தடுத்துக் கனன்று எதிர் கறுத்தும்,  
நனி நிறை செல்வ நாடும் நன் பொருளும்  
எதிர் பெறின் கண் சிவந்து எடுத்து அவை களைந்தும்,  
தாமரை நிதியமும் வால் வளைத் தனமும்
5
இல்லம் புகுதர இருங் கரவு அடைத்தும்,  
அரி அயன் அமரர் மலை வடம் பூட்டிப்  
பெருங் கடல் வயிறு கிடங்கு எழக் கடைந்த  
அமுதம் உட்கையில் உதவுழி ஊற்றியும்,  
மெய் உலகு இரண்டினுள் செய்குநர் உளரேல்,
10
எழு கதிர் விரிக்கும் மணி கெழு திருந்திழை!  
நின் பிரிவு உள்ளும் மனன் உளன் ஆகுக--  
(முழுதுற நிறைந்த பொருள் மனம் நிறுத்தி, முன்  
வேடம் துறவா விதியுடைச் சாக்கியன்,  
அருட்கரை காணா, அன்பு எனும் பெருங் கடல்
15
பல நாள் பெருகி, ஒரு நாள் உடைந்து,  
கரை நிலை இன்றிக் கையகன்றிடலும்,  
எடுத்துடைக் கல் மலர் தொடுத்து, அவை சாத்திய,  
பேர் ஒளி இணையாக் கூடல் மா மணி--  
குல மலைக் கன்னி என்று, அருள் குடியிருக்கும்
20
விதி நெறி தவறா ஒரு பங்கு உடைமையும்,  
பறவை செல்லாது நெடு முகடு உருவிய  
சேகரத்து உறங்கும் திருநதித் துறையும்,  
நெடும் பகல் ஊழி நினைவுடன் நீந்தினும்  
அருங் கரை இறந்த ஆகமக்கடலும்,
25
இளங் கோவினர்கள் இரண்டு அறி பெயரும்,  
அன்னமும் பன்றியும் ஒல்லையின் எடுத்துப்  
பறந்தும் அகழ்ந்தும், படி இது என்னாது  
அறிவு அகன்று உயர்ந்த கழல் மணி முடியும்  
உடைமையன்--பொற்கழல் பேணி
30
அடையலர் போல) மருள் மனம் திரிந்தே!  
உரை
   
67. ஊடல் நீட வாடி உரைத்தல்
 
   
நிரை வளை ஈட்டமும், தரளக் குப்பையும்,  
அன்னக் குழுவும், குருகு அணி இனமும்,  
கருங் கோட்டுப் புன்னை அரும்பு உதிர் கிடையும்,  
முட வெண் தாழை ஊழ்த்த முள் மலரும்,  
அலவன் கவைக் கால் அன்ன வெள் அலகும்,
5
வாலுகப் பரப்பின் வலை வலிது ஒற்றினர்க்கு,  
'ஈது' என அறியாது ஒன்றி, வெள் இடையாம்  
மாதுடைக் கழிக் கரைச் சேரி ஓர் பாங்கர்,  
புள்ளொடு பிணங்கும் புள் கவராது  
வெள் இற உணங்கல் சேவல் ஆக,
10
உலகு உயிர் கவரும் கொலை நிலைக் கூற்றம்  
மகள் எனத் தரித்த நிலை அறிகுவனேல்;  
(விண் குறித்து எழுந்து, மேலவர்ப் புடைத்து,  
நான்முகன்-தாங்கும் தேனுடைத் தாமரை  
இதழும் கொட்டையும் சிதறக் குதர்ந்து,
15
வானவர்க்கு இறைவன் கடவு கார் பிடித்துப்  
பஞ்சு எழப் பிழிந்து தண் புனல் பருகி,  
ஐந்து எனப் பெயரிய நெடு மரம் ஒடித்து,  
கண் உளத்து அளவா எள்ளுணவு உண்டு,  
பொரி எனத் தாரகைக் கணன் உடல் கொத்தி,
20
அடும் திறல் அனைய கொடுந் தொழில் பெருக்கிய  
மாயா வரத்த பெருங் குருகு அடித்து,  
வெண் சிறை முடித்த செஞ் சடைப் பெருமான்)  
கூடற்கு இறையோன், குறி, உரு, கடந்த  
இரு பதம் உளத்தவர் போல,
25
மருவுதல் ஒருவும் மதியா குவனே.
உரை
   
68. பங்கயத்தோடு பரிவுற்று உரைத்தல்
 
   
சிலை நுதல் கணை விழித் தெரிவையர் உளம் என  
ஆழ்ந்து, அகன்று, இருண்ட சிறை நீர்க் கயத்துள்,  
எரி விரிந்தன்ன பல் தளத் தாமரை!  
நெடு மயல் போர்த்த உடல் ஒருவேற்கு,  
குரு மணி கொழிக்கும் புனல் மலைக் கோட்டுழி
5
நின் பதி மறைந்த நெட்டிரவகத்துள்,  
குருகும் புள்ளும் அருகு அணி சூழ,  
தேனொடும் வண்டொடும் திருவொடும் கெழுமி,  
பெருந் துயில் இன்பம் பொருந்துபு நடுநாள்,  
காணும் நின் கனவுள், நம் கவர் மனத்தவரைக்
10
கொய் உளைக் கடு மான் கொளுவிய தேரொடு,  
'பூ உதிர் கானற்புறம் கண்டனன்' என,  
சிறிது ஒரு வாய்மை உதவினை அன்றேல்--  
(சேகரம் கிழித்த நிறைமதி உடலம்  
கலை, கலை சிந்திய காட்சியது என்ன,
15
கடுமான் கீழ்ந்த கடமலைப் பல் மருப்பு  
எடுத்துஎடுத்து உந்தி, மணிக் குலம் சிதறி,  
கிளைஞர்கள் நச்சாப் பொருளினர் போல,  
சாதகம் வெறுப்ப, சரிந்து அகழ்ந்து ஆர்த்து,  
திரள் பளிங்கு உடைத்துச் சிதறுவதென்ன,
20
வழி எதிர் கிடந்த உலமுடன் தாக்கி,  
வேங்கையும் பொன்னும் ஓர் உழித் திரட்டி  
வரையர மகளிர்க்கு அணி அணி கொடுத்து,  
பனைக்கைக் கடமா எருத்துறு பூழி  
வண்டு எழுந்து ஆர்ப்ப, மணி எடுத்து அலம்பி,
25
மயில் சிறை ஆற்ற, வலிமுகம் பனிப்ப,  
எதிர் சுனைக் குவளை மலர்ப் புறம் பறித்து  
வரையுடன் நிறைய மாலை இட்டாங்கு,  
நெடு முடி அருவி அகிலொடு கொழிக்கும்  
கயிலை வீற்றிருந்த கண்ணுதல் விண்ணவன்,
30
நாடகக் கடவுள்) கூடல் நாயகன்  
தாமரை உடைத்த காமர் சேவடி  
நிறை உளம் தரித்தவர் போல,  
குறை உளம் நீங்கி இன்பாகுவனே.
உரை
   
69. பதி பரிசு உரைத்தல்
 
   
எரி தெறக் கருகிய பொடி பொறுத்து இயங்கினை;  
முகில் தலை சுமந்து ஞிமிறு எழுந்து இசைக்கும்  
பொங்கருள் படுத்த மலர் கால் பொருந்துக!  
கடுங் கடத்து, எறிந்த கொடும் புலிக்கு ஒடுங்கினை;  
வரி உடற் செங் கண் வராலினம் எதிர்ப்ப,
5
உழவக் கணத்தர் உடைவது நோக்குக!  
கொலைஞர் பொலிந்த கொடித் தேர்க்கு அணங்கினை;  
வேதியர் நிதி மிக விதிமகம் முற்றி,  
அவபிர தத்துறை ஆடுதல் கெழுமி,  
பொன் உருள் வையம் போவது காண்க!
10
ஆறு அலை எயினர் அமர்க் கலிக்கு அழுங்கினை;  
பணைத்து எழு சாலி நெருக்குபு புகுந்து,  
கழுநீர் களைநர்தம் கம்பலை காண்க!  
தழல் தலைப்படுத்த பரல் முரம்பு அடுத்தனை;  
சுரி முகக் குழு வளை நிலவு எழச் சொரிந்த
15
குளிர் வெண் தரளக் குவால் இவை காண்க!  
அலகை நெட்டிரதம் புனல் எனக் காட்டினை;  
வன்மீன் நெடுங் கயல் பொதி வினையகத்துக்  
கிடங்கு எனப் பெயரிய கருங் கடல் காண்க!  
முனகர்கள் பூசல் துடி ஒலி ஏற்றனை;
20
குடுமிஅம் சென்னியர் கரு முகில் விளர்ப்பக்  
கிடை முறை எடுக்கும் மறை ஒலி கேண்மதி!  
அமரர்கள், முனிக் கணத்தவர், முன் தவறு  
புரிந்து, உடன் உமை கண் புதைப்ப, மற்று, உமையும்  
ஆடகச் சயிலச் சேகரம் தொடர்ந்த
25
ஒற்றைஅம் பசுங் கழை ஒல்கிய போல,  
உலகு உயிர்க்கு உயிர் எனும் திருஉரு அணைந்து,  
வளைக் கரம்கொடு கண் புதைப்ப, அவ்வுழியே  
உலகு இருள் துரக்கும் செஞ்சுடர், வெண்சுடர்,  
பிரமன் உட்பட்ட நில உயிர் அனைத்தும்
30
தமக்கு எனக் காட்டும் ஒளிக் கண் கெடலும்,  
மற்று-அவர் மயக்கம் கண்டு, அவர் கண் பெறத்  
திரு நுதல் கிழித்த தனி விழி நாயகன்  
தாங்கிய கூடல்-பெரு நகர்  
ஈங்கு இது காண்க!--முத்து எழில் நகைக் கொடியே!
35
உரை
   
70. தேறாது புலம்பல்
 
   
புட்பெயர்க் குன்றமும், எழு வகைப் பொருப்பும்,  
மேல் கடல் கவிழ் முகப் பொரி உடல் மாவும்,  
நெடுங் கடல் பரப்பும், அடும் தொழில் அரக்கரும்,  
என் உளத்து இருளும், இடைபுகுந்து உடைத்த  
மந்திரத் திரு வேல் மறம் கெழு மயிலோன்,
5
குஞ்சரக் கொடியொடும் வள்ளிஅம் கொழுந்தொடும்  
கூறாக் கற்பம் குறித்து நிலை செய்த,  
புண்ணியம் குமிழ்த்த குன்றுடைக் கூடல்  
நிறைந்து உறை கறை மிடற்று அறம் கெழு பெருமான்  
பேர் அருள் விளைத்த மாதவர் போல,
10
முன் ஒரு நாளில், உடல் உயிர் நீ என  
உள்ளம் கரிவைத்து, உரை செய்த ஊரர்  
தம் மொழி திரிந்து தவறு நின்றுளவேல்,  
அவர் குறை அன்றால்; ஒருவன் படைத்த  
காலக் குறிகொல்? அன்றியும், முன்னைத்
15
தியங்கு உடல் ஈட்டிய தரும் கடு வினையால்,  
காலக் குறியை, மனம் தடுமாறிப்  
பின் முன் குறித்த நம் பெரு மதி அழகால்,  
நனவிடை நவிற்றிக் கனவிடைக் கண்ட  
உள் எழு கலக்கத்துடன் மயங்கினமால்;
20
குறித்த இவ் இடைநிலை ஒன்றே--  
மறிக் குலத்து உழையின் வழி நோக்கினளே!  
உரை