71-80
 
71. மாலைப் பொழுதொடு புலம்பல்
 
   
ஆயிரம் பணாடவி அரவு வாய் அணைத்துக்  
கரு முகில் நிறத்த கண்ணனின் சிறந்து,  
நிறை உடல் அடங்கத் திரு விழி நிறைத்துத்  
தேவர் நின்று இசைக்கும் தேவனின் பெருகி,  
குரு வளர் மரகதப் பறைத் தழை பரப்பி
5
மணி திரை உகைக்கும் கடலினின் கவினி,  
முள் எயிற்று அரவம் முறித்து உயிர் பருகிப்  
புள் எழு வானத்து அசனியின் பொலிந்து,  
பூதம் ஐந்து உடையும் காலக் கடையினும்  
உடல் தழை நிலைத்த மறம் மிகு மயிலோன்;
10
புரந்தரன் புதல்வி, எயினர்தம் பாவை,  
இரு பால் இலங்க, உலகு பெற நிறைந்த  
அருவிஅம் குன்றத்து அணி அணி கூடற்கு  
இறையவன், பிறையவன், கறை கெழு மிடற்றோன்,  
மலர்க் கழல் வழுத்தும் நம் காதலர், பாசறை
15
முனைப்பது நோக்கி, என் முனை அவிழ் அற்றத்து--  
பெரும் பகலிடையே, பொதும்பரில் பிரிந்த  
வளை கட் கூர் உகிர்க் கூக்குரல் மோத்தையை  
கருங் கட் கொடியினம் கண் அறச் சூழ்ந்து,  
புகை உடல் புடைத்த விடன் வினைபோல--
20
மனம் கடந்து ஏறா மதில் வளைத்து, எங்கும்  
கரு நெருப்பு எடுத்த மறன் மருள் மாலை!  
நின் வரற்கு ஏவர் நல்கினர்? நின் வரல்  
கண்டு உடல் இடைந்தோர்க் காட்டுதும்; காண்மதி:  
மண் உடல் பசந்து கறுத்தது; விண்ணமும்
25
ஆற்றாது அழன்று, காற்றின் முகம் மயங்கி,  
உடு எனக் கொப்புள் உடல் நிறை பொடித்தன;  
ஈங்கு இவற்று அடங்கிய இரு திணை உயிர்களும்  
தம்முடன் மயங்கின; ஒடுங்கின; உறங்கின;  
அடங்கின; அவிந்தன; அயர்ந்தன; கிடந்தன;
30
எனப் பெறின்--மாலை! என் உயிர் உளைப்பதும்,  
அவர் திறம் நிற்பதும், ஒருபுடை கிடக்க;  
உள்ளது மொழிமோ, நீயே: விண்ணுழை  
வந்தனை என்னில், வரும் குறி கண்டிலன்;  
மண்ணிடை எனினே, அவ் வழியான;
35
கூடி நின்றனை எனின், குறி தவறாவால்;  
தேம் படர்ந்தனை எனின், திசை குறிக்குநரால்;  
ஆதலின், நின் வரவு எனக்கே  
ஓதல் வேண்டும் புலன் பெறக் குறித்தே.
உரை
   
72. வாய்மை கூறி வருத்தம் தணித்தல்
 
   
திருமலர் இருந்த முதியவன் போல  
நான்முகம் கொண்டு, அறி நன்னர் நெஞ்சு இருந்து,  
வேற்றருள் பிறவி தோற்றுவித்து எடுத்து;  
நிலம் இரண்டு அளந்த நெடுமுகில் மான,  
அரக்கர்தம் கூட்டம் தொலைத்து, நெய் உண்டு;
5
களிற்று உரி புனைந்த கண்ணுதல் கடுப்ப  
அழல் எடுத்து ஒன்னலர்புரம் எரி உட்டி;  
இனைய, எவ் உலகும் தொழுது எழு திரு வேல்,  
சரவணத்து உதித்த அறுமுகப் புதல்வன்--  
பரங்குன்று உடுத்த பயம் கெழு கூடல்
10
பெரு நகர் நிறைந்த சிறு பிறைச் சென்னியன்;  
மால் அயன் தேடி, மறை அறைந்து, அறியாத்  
தன் உரு ஒன்றில் அருள் உரு இருத்திய  
ஆதி நாயகன்; அகல் மலர்க் கழல் இணை  
நண்ணலர் கிளைபோல் தன் மனம் திரிந்து, நம்
15
துறைவன் தணக்க, அறிகிலம் யாமே--  
பிணர் முடத் தாழை விரிமலர் குருகு என,  
நெடுங் கழிக் குறுங் கயல், நெய்தலுள் மறைந்தும்;  
புன்னைஅம் பொதும்பர்க் குழைமுகம் குழைமுகம்  
கருந் திரை சுமந்து எறி வெண் தரளத்தினை
20
அரும்பு என, சுரும்பினம், அலர நின்று இசைத்தும்;  
கலம் சுமந்து இறக்கும் கரி இனம் பொருப்பு என,  
பருகிய முகிற்குலம், படிந்து கண்படுத்தும்;  
பவள நன் கவைக் கொடி வடவையின் கொழுந்து என,  
சுரிவளை குளிக்குநர் கலனிடைச் செறிந்தும்;
25
வெள் இற உண்ண விழைந்து புகு குருகினம்,  
கருங் கழி நெய்தலைக் காவல் செய் கண் என,  
அரவு எயிற்று அணி முட் கைதையுள் அடங்கியும்;  
விண் தொட எழுந்து விழுதிரைக் குழுவினைக்  
கடல் வயிற்று அடங்கிய மலையினம் வரவு என,
30
குழி மணற் கேணியுள் கொம்பினர் படிந்தும்;  
முயங்கிய உள்ளம் போகி,  
மயங்கிய துறையினம் ஒருங்குழி வளர்ந்தே.
உரை
   
73. அயல் அறிவு உரைத்து அவள் அழுக்கம் எய்தல்
 
   
ஆடகச் சயிலத்து ஓர் உடல் பற்றி,  
கலி திரைப் பரவையும், கனன்று எழு வடவையும்,  
அடியினும், முடியினும், அணைந்தன போல,  
பசுந் தழைத் தோகையும், செஞ் சிறைச் சேவலும்,  
தாங்கியும், மலர்க்கரம் தங்கியும், நிலைத்த
5
பேர் ஒளி மேனியன்; பார் உயிர்க்கு ஓர் உயிர்;  
மாவுடைக் கூற்றம்; மலர் மயன் தண்டம்;  
குறுமுனி பெறும் மறை; நெடு மறை பெறா முதல்;  
குஞ்சரத் தோகையும் குறமகட் பேதையும்  
இருந்தன இரு புறத்து எந்தை; என் அமுதம்--
10
பிறந்தருள் குன்றம் ஒருங்குறப் பெற்ற  
மாதவக் கூடல் மதிச் சடைக் காரணன்  
இரு பதம் தேறா இருள் உளம் ஆம் என,  
இவள் உளம் கொட்ப, அயல் உளம் களிப்ப--  
அரும் பொருட் செல்வி எனும் திருமகட்கு,
15
மானிட மகளிர்தாமும், நின்று எதிர்ந்து,  
புல் இதழ்த் தாமரை இல் அளித்தெனவும்;  
உலகு, விண், பனிக்கும் ஒரு சயமகட்கு,  
தேவர்தம் மகளிரும் செருமுகம் நேர்ந்து,  
வீரம் அங்கு ஈந்து பின் விளிவது மானவும்;
20
இருள் உடல் அரக்கியர் கலைமகட் கண்டு,  
தென் தமிழ், வட கலை, சில கொடுத்தெனவும்;  
நீரர மகளிர் பாந்தள்அம் கன்னியர்க்கு,  
ஆர் எரி மணித்திரள் அருளியது எனவும்;  
செம் மலர்க் குழல் இவள் போய் அறிவுறுத்தக்
25
கற்றதும்; கல்லாது உற்ற ஊரனை  
அவள் தர--இவள் பெறும் அரந்தைஅம் பேறினுக்கு  
ஒன்றிய உவமம் இன்று: இவண் உளவால்,  
மற்று-அவள் தர, நெடுங் கற்பே  
உற்று இவள் பெற்றாள் என்பதும் தகுமே.
30
உரை
   
74. பிரிந்தமை கூறல்
 
   
மலரவன் பனிக்கும் கவினும், குலமீன்  
அருகிய கற்பும், கருதி, உள் நடுங்கித்  
திருமகள் மலர் புகும் ஒரு தனி மடந்தை, இன்று,  
இரு கடல் ஓர் உழி மருவியது என்னச்  
செருப் படை வேந்தர் முனைமேல் படர்ந்த நம்
5
காதலர், முனைப் படை கனன்று உடற்று எரியால்,  
(முடம் படு நாஞ்சில் பொன் முகம் கிழித்த  
நெடுங் சால் போகிக் கடுங் கயல் துரக்கும்  
மங்கையர் குழை பெறு வள்ளையில் தடை கொண்டு,  
அவர் கருங் கண் எனக் குவளை பூத்த
10
இருள் அகச் சோலையுள் இரவு எனத் தங்கிய  
மற்று அதன் சேக்கையுள் வதிபெறும் செங் கால்  
வெள் உடல் ஓதிமம் தன்னுடைப் பெடை எனப்  
பறை வரத் தழீஇப் பெற்று, உவை இனக் கம்பலைக்கு  
ஆற்றாது அகன்று, தேக்கு வழி கண்ட
15
கால் வழி இறந்து, பாசடை பூத்த  
கொள்ளம் புகுந்து, வள் உறை வானத்து  
எழில் மதி காட்டி, நிறைவளை சூல் உளைந்து,  
இடங்கரும் ஆமையும் எழு வெயில் கொளுவும்  
மலை முதுகு அன்ன குலை முகடு ஏறி,
20
முழுமதி, உடுக்கணம், காதலின் விழுங்கி  
உமிழ்வன போல, சுரிமுகச் சூல் வளை  
தரளம் சொரியும் பழனக் கூடல்)  
குவளை நின்று அலர்ந்த மறை எழு குரலோன்,  
இமையவர் வேண்ட, ஒரு நகை முகிழ்ப்ப,
25
ஓர் உழிக் கூடாது உம்பரில் புகுந்து  
வான் உடைத்து உண்ணும் மறக் கொலை அரக்கர் முப்  
பெரு மதில் பெற்றன அன்றோ--  
மருவலர் அடைத்த, முன், மறம் கெழு மதிலே?  
உரை
   
75. கலக்கம் கண்டு உரைத்தல்
 
   
'பெருந் துயர் அகற்றி, அறம் குடி நாட்டி,  
உளச் சுருள் விரிக்கும் நலத் தகு கல்வி ஒன்று  
உளது' என, குரிசில் ஒரு மொழி சாற்ற--  
(பேழ்வாய்க் கொய்உளை அரி சுமந்து எடுத்த  
பல் மணி ஆசனத்து இருந்து, செவ் வானின்
5
நெடுஞ் சடைக் குறுஞ் சுடர், நீக்கி, ஐந்து அடுக்கிய  
ஆறு-ஐஞ்ஞூறொடு வேறு நிரை அடுத்த  
பல் மணி மிளிர் முடி பலர் தொழக் கவித்து,  
பல் தலைப் பாந்தட் சுமை திருத் தோளில்  
தரித்து, உலகு அளிக்கும் திருத்தகு நாளில்,
10
நெடு நாள் திருவயிற்று அருளுடன் இருந்த  
நெடுஞ் சடை உக்கிரற் பயந்தருள் நிமலன்,  
மற்று-மவன்தன்னால், வடவையின் கொழுந்து சுட்டு  
ஆற்றாது, உடலமும், இமைக்குறும் முத்தமும்,  
விளர்த்து நின்று அணங்கி, வளைக்குலம் முழங்கும்
15
கருங் கடல் பொரிய, ஒருங்கு வேல் விடுத்து,  
அவற்க அருள் கொடுத்த முதற் பெருநாயகன்)  
வெம்மையும் தண்மையும் வினை உடற்கு ஆற்றும்  
இரு சுடர், ஒரு சுடர், புணர்விழி ஆக்கி, முன்  
விதியவன் தாரா உடலொடு நிலைத்த
20
முத் தமிழ்க் கூடல் முதல்வன் பொற்றாள்  
கனவிலும் காணாக் கண்ணினர் துயரும்,  
பகுத்து உண்டு ஈகுநர் நிலைத் திரு முன்னர்,  
'இல்' எனும் தீச் சொல் இறுத்தனர் தோமும்,  
அனைத்து உயிர் ஒம்பும் அறத்தினர் பாங்கர்,
25
'கோறல்' என்று அயலினர் குறித்தன குற்றமும்,  
நன்று அறி கல்வியர் நாட்டுறு மொழி புக்கு  
அவ் அரண் இழந்தோர்க்கு அரு விடம் ஆயதும்--  
ஒரு கணம் கூடி, ஒருங்கே  
இரு செவி புக்கது ஒத்தன, இவட்கே.
30
உரை
   
76. முன்பனிக்கு நொந்து உரைத்தல்
 
   
கடல்மகள், உள் வைத்து வடவை, மெய் காயவும்,  
மலைமகள் தழல் தரு மேனி ஒன்று அணைக்கவும்,  
மாசு அறு திருமகள் மலர் புகுந்து, ஆயிரம்  
புற இதழ்ப் புதவு அடைத்து, அதன் வெதுப்பு உறைக்கவும்,  
சமயமகள் சீற்றத் தழல் மனம் வைத்துத்
5
திணி புகும் வென்றிச் செரு அழல் கூடவும்,  
ஐயர் பயிற்றிய விதி அழல் ஓம்பவும்,  
அவ் அனற்கு அமரர் அனைத்தும் வந்து அணையவும்,  
(முன் இடைக்காடன் பின் எழ நடந்து,  
நோன்புறு விரதியர் நுகர உள் இருந்து, என்
10
நெஞ்சகம் நின்று, நினைவினுள் மறைந்து,  
புரை அறும் அன்பினர் விழி பெறத் தோற்றி,  
வானவர் நெடு முடி மணித் தொகை திரட்டிப்  
பதுக்கை செய் அம்பலத் திருப் பெரும் பதியினும்,  
பிறவாப் பேர் ஊர்ப் பழ நகரிடத்தும்,
15
மகிழ் நடம் பேய் பெறும் வடவனக் காட்டினும்,  
அரு மறை முடியினும், அடியவர் உளத்தினும்,  
குனித்து அருள் நாயகன்) குல மறை பயந்தோன்  
இருந் தமிழ்க் கூடல், பெருந் தவர் காண,  
வெள்ளி அம்பலத்துள் துள்ளிய ஞான்று,
20
நெருப்பொடு சுழலவும், விருப்பு எடுத்து அவ் அழல்  
கையினில் கொள்ளவும், கரி உரி மூடவும்,  
ஆக்கிய பனிப்பகைக் கூற்று இவை நிற்க--  
அங்கு, அவர் துயர் பெற ஈன்ற என் ஒருத்தி  
புகல் விழும் அன்பு தற்கு இன்றி
25
மகவினைப் பெறலாம் வரம் வேண்டினளே.
உரை
   
77. மறவாமைருணி அன்ன நின் மார்பகம் தோய்ந்த என்  
   
மரு வளர் குவளை மலர்ந்து, முத்து அரும்பி,  
பசுந் தோள்-தோன்றி மலர் நனி மறித்து,  
நெட்டெறி ஊதை நெருப்பொடு கிடந்து,  
மணி புறம் கான்ற புரிவளை விம்மி,  
விதிப்பவன் விதியா ஓவம் நின்றென, என்,
5
உள்ளமும் கண்ணும் நிலையுறத் தழீஇனள்--  
(உவணக் கொடியினன் உந்தி மலர்த் தோன்றிப்  
பார் முதல் படைத்தவன் நடுத் தலை அறுத்து,  
புனிதக் கலன் என உலகு தொழக் கொண்டு--  
வட்டம், முக்கோணம், சதுரம், கார்முகம்,
10
நவத்தலை, தாமரை, வளைவாய்ப் பருந்து, எனக்  
கண்டன--மகம்தொறும் கலிபெறச் சென்று,  
நறவு இரந்தருளிய பெரியவர் பெருமான்;  
கூக்குரல் கொள்ளாக் கொலை தரு நவ்வியும்,  
விதிர் ஒளி காற்றக் கனல் குளிர் மழுவும்,
15
இரு கரம் தரித்த ஒரு விழி நுதலோன்)  
கூடல் ஒப்பு உடையாய்! குல உடுத் தடவும்  
தட மதில் வயிற்றுள் படும் அவர் உயிர்க்கணம்  
தனித்தனி ஒளித்துத் தணக்கினும் அரிது எனப்  
போக்கு அற வளைந்து புணர் இருள் நாளும்,
20
காவல் காட்டிய வழியும்,  
தேவர்க் காட்டும் நம் பாசறையினுமே.
உரை
   
78. ஊடி உரைத்தல்
 
   
மதியம் உடல் குறைத்த வெள்ளாங்குருகினம்,  
பைங் கால் தடவிச் செங் கயல் துரந்து உண்டு,  
கழுக்கடை அன்ன தம் கூர்வாய்ப் பழிப் புலவு,  
எழில் மதி விரித்த வெண் தளை இதழ்த் தாமரை  
மலர்மலர் துவட்டும் வயல் அணி ஊர!
5
கோளகைக் குடிலில் குனிந்து இடைந்து, அப்புறத்து,  
இடைநிலை அற்ற படர் பெரு வெளியகத்து  
உடல் முடக்கு எடுத்த, தொழிற் பெரு வாழ்க்கைக்  
கவைத்தலைப் பிறை எயிற்று இருள் எழில் அரக்கன்--  
அமுதம் உண்டு இமையா அவரும், மங்கையரும்,
10
குறவரும் குறவத் துணையரும் ஆகி,  
நிலம் பெற்று இமைத்து, நெடு வரை இறும்பிடை,  
பறவை உண்டு ஈட்டிய இறால் நறவு அருந்தி,  
அந் நிலத்தவர் என அடிக்கடி வணங்கும்--  
வெள்ளிஅம் குன்றகம் உள்ளுறப் புகுந்து, 'ஒரு
15
தேவனும் அதன் முடி மேவவும் உளன் ஆம்'  
எனப் புயம் கொட்டி நகைத்து, எடுத்து ஆர்க்க,  
பிலம் திறந்தன்ன பெரு வாய் ஒருபதும்,  
மலை நிரைத்து ஒழுங்கிய கரம் இருபத்தும்,  
விண் உடைத்து அரற்றவும், திசை உட்கி முரியவும்,
20
தாமரை அகவயின் சேயிதழ் வாட்டிய  
திருவடிப் பெரு விரல்-தலை நக நுதியால்,  
சிறிது, மலை உறைத்த மதி முடி அந்தணன்,  
பொன் அணி மாடம் பொலி நகர்க்) கூடல்  
ஆவண வீதி அனையவர் அறிவுறில்,
25
ஊருணி அன்ன நின் மார்பகம் தோய்ந்த என்  
இணை முலை நன்னர் இழந்தன-அது போல்,  
மற்று-அவர் கவை மனம் மாழ்கி,  
செற்றம் நிற் புகைவர்; இக் கால் தீண்டலையே.
உரை
   
79. தோழி பொறை உவந்து உரைத்தல்
 
   
உலர் கவட்டு ஓமைப் பொரிசினைக் கூகையும்,  
வீசு கோட்டு ஆந்தையும் சேவலொடு அலமர,  
திரை விழிப் பருந்தினம் வளை உகிர்ப் படையால்  
பார்ப்பு இரை கவரப் பயன் உறும் உலகில்,  
கடன் உறும் யாக்கைக் கவர்கடன் கழித்துத்
5
தழல் உணக் கொடுத்த அதன் உணவிடையே,  
கைவிளக்கு எடுத்துக் கரை இனம் கரைய,  
பிணம் விரித்து உண்ணும் குணங்கினம் கொட்ப,  
சூற் பேய் ஏற்ப, இடாகினி கரப்ப,  
கண்டு உளம் தளிர்க்கும் கருணைஅம் செல்வி,
10
பிறைநுதல் நாட்டி, கடு வளர் கண்டி,  
இறால் நறவு அருவி எழு பரங்குன்றத்து  
உறை சூர்ப் பகையினற் பெறு திருவயிற்றினள்  
ஒரு பால் பொலிந்த உயர்நகர்க் கூடல்  
கடுக்கைஅம் சடையினன் கழல் உளத்து இலர் போல்,
15
பொய் வரும் ஊரன் புகல் அரும் இல் புக,  
என் உளம் சிகைவிட்டு எழும் அனல் புக்க,  
மதுப் பொழி முளரியின் மாழ்கின என்றால்,  
தோளில் துவண்டும், தொங்கலுள் மறைந்தும்,  
கை வரல் ஏற்றும், கனவினுள் தடைந்தும்,
20
திரைக் கடல் தெய்வமுன் தெளி சூள் வாங்கியும்.
பொருட் கான் தடைந்தும், பாசறைப் பொருந்தியும்,  
போக்கு அருங் கடுஞ் சுரம் போக முன் இறந்தும்,  
காவலில் கவன்றும், கல்வியில் கருதியும்,  
வேந்து விடைக்கு அணங்கியும், விளைபொருட்கு உருகியும்,
25
நின்ற இவட்கு இனி என் ஆம்--  
கன்றிய உடலுள் படும் நனி உயிரே?  
உரை
   
80. கலவி கருதிப் புலத்தல்
 
   
நிலை நீர் மொக்குளின் வினையாய்த் தோன்றி,  
வான் தவழ் உடற் கறை மதி எனச் சுருங்கி,  
புல்லர் வாய்ச் சூள் எனப் பொருளுடன் அழியும்  
சீறுணவு இன்பத் திருந்தா வாழக்கை,  
கான்றிடு சொன்றியின் கண்டு, அருவருத்து,
5
புலன் அறத் துடைத்த நலன் உறு கேள்வியர்,  
ஆரா இன்பப் பேர் அமுது அருந்தி,  
துறவு எனும் திருவுடன் உறவு செய் வாழ்க்கையர்,  
வாயினும், கண்ணினும், மனத்தினும், அகலாப்  
பேர் ஒளி நாயகன்; கார் ஒளி மிடற்றோன்;
10
மண் திரு வேட்டுப் பஞ்சவற் பொருத  
கிள்ளியும், கிளையும், கிளர் படை நான்கும்,  
திண்மையும், செருக்கும், தேற்றமும், பொன்றிட,  
எரிவாய் உரகர் இருள் நாட்டு உருவக்  
கொலைக் கொண்டாழி குறியுடன் படைத்து,
15
மறியப் புதைத்த மறம் கெழு பெருமான்;  
நீர் மாக் கொன்ற சேயோன் குன்றமும்,  
கல்வியும், திருவும், காலமும், கொடியும்,  
மாடமும், ஓங்கிய மணி நகர்க் கூடல்  
ஆலவாயினில் அருளுடன் நிறைந்த
20
பவளச் சடையோன்--பதம் தலை சுமந்த  
நல் இயல் ஊர! நின் புல்லம் உள் மங்கையர்  
ஓவிய இல்லம் எம் உறையுள் ஆக,  
கேளாச் சிறு சொல் கிளக்கம் கலதியர்  
இவ்வுழி ஆயத்தினர்களும் ஆக,
25
மௌவல் இதழ் விரிந்து மணம் சூழ் பந்தர் செய்  
முன்றிலும் எம்முடை முன்றில் ஆக,  
மலர்ச் சுமைச் சேக்கை மது மலர் மறுத்த இத்  
திருமனம் கொள்ளாச் சேக்கை-அது ஆக,  
நின் உளம் கண்டு, நிகழ் உணவு உன்னி,
30
நாணா நவப் பொய் பேணி உள் புணர்த்தி,  
யாழொடு முகமன் பாணனும் நீயும்,  
திருப் பெறும் அயலவர் காண  
வரப் பெறு மாதவம் பெரிது உடையேமே.
உரை