பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

9

கடலை நீந்தி முத்திக்கரை சேர்வதற்கு உனது திருவடிகளை ஒரு பெரிய தெப்பமாகக்கொண்டேன் ; (இவ்வாற்றான்) என் உள்ளக் கருத்தனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டேன். (இனி எனக்கென்ன குறை ? ஒன்றுமில்லை.)

    நடித்தல்-பொய்யாக ஒன்றைச் செய்தல்-போலிச் செய்கை ; ‘நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து’ என்ற திருவாதவூரடிகள் திருவாக்கைக் காண்க. கூடு-உள்ளீடில்லாதது. அவம்-வீண். ‘நன்னாள்’ என்றது இளமைப் பருவத்தை. பண்டை வினையாவது சஞ்சிதவினை ; அநாதியே பறறிய பாசம் எனினும் அமையும்: 'பாசவே ரறுத்த பழம்பொருளே’ என்றார் பிறரும்.

    பாசத்தோடுபட்டு நிற்றலும் பாசமகலப் பதியோடொன்றி நிற்றலு மல்லது தனித்து நிற்கும் ஆற்றலுடையதன்று ஆன்மா ஆதலால், வினைப்பற்றறுத்தவுடனே ‘உனதடியைப் பிடித்தேன்’ என்றார். நெடுங்கடலைப் பெரும்புணை கொண்டன்றிக் கடத்தல் ஆகாதாகலின், பெரும்பிறவிக் கடல்கடக்க நினதடியினும் பெரிய புணை வேறில்லை யென்றறிந்து ‘ பெரிய புணையா உனதடியை ’ என்றும், பெரும்புணையைப் பற்றினார்க்குக் கரை சேர்வது குறித்து ஐயமும் அச்சமும் உளவாகாவாதலால் தாம் விரும்பியவாறு முத்திக்கரை சேர்வதில் துணிவும் அத்துணிவுபற்றி யெழுந்த மகிழ்ச்சியும் தோன்ற ‘முடித்தேன் உள்ளத் தெண்ணமெல்லாம்’ என்றும் கூறினார். சொல்லளவில் ‘ ஆரியக்கூத்தாடினாலும் காரியத்திற் கண்ணுடையேன்’ என்பார் போல ‘நடித்தேன்’ எனத் தொடங்கி முடிவில் என் ‘எண்ணமெல்லா முடித்தேன்’ என்றார். ‘திருநாமம் படிக்கப் பண்டைவினை ஒழிந்தது ; வினையொழியப்  பிறப்பொழிந்தது, பிறப்பொழிய முத்திநிலை கிட்டியது’ எனக் காரண காரியத் தொடர்ச்சி பெறப்படுதலின் காரணமாலை அணி கொள்ளக் கிடக்கும். புணை-தெப்பம்.

    சிவபெருமானை ‘முன்னோன்’ என்றார் ‘முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம்பொருள்’ ஆதல்பற்றி.

(5)