பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

93

    முகலிங்கப் பெருமானுடைய திருநடனம் செய்த திருவடிகளையும், விளங்குகின்ற அழகிய புன்னகையையும், வியர்வை யரும்பும் திருமுகத்தையும், மேலேறும் திருப்புருவங்களையும், அருள் கனியும் திருக்கண்களையும், குளிர்ந்த இளஞ்சந்திரனைச் சூடிய சடாபாரத்தையும், மழுவையும் மானையும் ஏந்திய செவ்விய திருக்கரங்களையும் (ஞானக்கண்ணால்) தரிசிப்பவர் இந் நிலவுலகத்தில் (மீண்டும்) பிறவார்.

    ‘வேர்வு பொடித்த முகமும்’ எனவும், ‘ தண்பிறை முடித்த வேணி ’ எனவும் இயைத்துப் பொருள் கொள்க.

    நகை-விளங்குதல்; நகு-பகுதி, ஐ-புடைபெயர்ச்சி விகுதி, உகரக்கேடு சந்தி : நகை முறுவல்-விளங்குதல் உடைய முறுவல் என்க.  மணி-அழகு.  முறுவல்-புன்னகை.  பொடித்த-அரும்பிய.  விலோசனம்-கண்.

    ‘முகமும் பொடித்த வேர்வெழும் புருவமும்’ என்னும் சொற்றொடர்க்கு ஆற்றொழுக்காகப் பொருள்கொண்டு ‘ திருமுகமும் அரும்பிய வியர்வை எழும் திருப்புருவங்களும் ’ என்று உரை கூறுவாரும் உளர்.  முகத்தில் வியர்வரும்பியது என்பதன்றிப் புருவத்தில் வியர்வரும்பியது என்பது மரபாகாமையானும், கூறும் உறுப்பு ஒவ்வொன்றினுக்கும் அடை கொடுத்துக் கூறிய ஆசிரியர் உறுப்புக்களிற் சிறந்த முகத்திற்கு அடைகொடாது செல்லாராதலானும், ‘ திருவளர் பூங்குமிழ் கோங்கு பைங்காந்தள் ’ என வரும் திருக்கோவையாரில் சிறந்த உறுப்புக்கு உவமையாதல் பற்றிக் கோங்கு அடைபெறாது நின்றாற்போல ஈண்டுங் கொள்ளலா மாயினும் அங்ஙனம் கொண்டவிடத்து, எழும் என்னும் பெயரெச்சவினை புருவத்திற்குரிய தாகாது வியர்வைக் குரியதாகி நடிக்குங் காலைப் புருவத்தில் நிகழுதற்குரிய மெய்ப்பாட்டைக் காட்டாது பொருட் சிறப்பை அழிக்குமாதலானும் மேற்கூறியதே உரையாதல் கண்டு கொள்க.

    புருவம்-ப்ரூ என்னும் வடமொழிச் சிதைவென்பர்.