பக்கம் எண் :

153

எழுந்தனன் இளையவன் ஏறினான் நிலம்
கொழுந்துயர்ந் தனையதோர் நெடிய குன்றின்மேல்
செழுந்திரைப் பரவையைச் சிறுமை செய்தஅக்
கழுந்துடை வரிசிலைக் கடலை நோக்கினான்
 

பரதன் இப்படையொடு பார்கொண் டாள்மறம்
கருதிஉட் கிடந்ததோர் கறுவு காந்தலால்
விரதம்உற் றிருந்தவன் மேல்வந்தான் இது
சரதம் மற்றிலது எனத்தழங்கு சீற்றத்தான்
 

கட்டினன் சுரிகையும் கழலும் பல்கணைப்
புட்டிலும் பொறுத்தனன் கவசம் பூண்டமைத்து
இட்டனன் எடுத்தனன் வரிவில், ஏந்தலைத்
தொட்டடி வணங்கிநின்று இனைய சொல்லினான்
 

இருமையும் இகழ்ந்தஅப் பரதன் ஏந்துதோள்
பருமையும் அன்னவன் படைத்த சேனையின்
பெருமையும் நின்னொரு பின்புவந்த என்
ஒருமையும் கண்டுஇனி உவத்தி உள்ளம்நீ
 

படர்எலாம் படப்படும் பரும யானையின்
திடல்எலாம் உருட்டின தேரும் ஈர்த்தன
குடல்எலாம் திரைத்தன குருதிஆறுகள்
கடர்எலாம் மடுப்பன பலவும் காண்டியால்
 

கருவியும் கைகளும் கவச மார்பமும்
உருவின உயிரினோடு உதிரம் தோய்வில
திரிவன சுடர்க்கணை திசைக்கை யானைகள்
வெருவரச் செய்வன காண்டி வீரநீ
 

பண்முதிர் களிற்றொடு பரந்த சேனையின்
எண்முதல் அறுத்துநான் இமைப்பின் நீக்கலால்
விண்முதுகு உளுக்கவும் வேலை ஆடையின்
மண்முது காற்றவும் காண்டி வள்ளல்நீ
 

நிவந்த வான்குருதியின் நீத்தம் நீந்திமெய்
சிவந்த சாதகரொடு சிறுகண் கூளியும்
கவந்தமும் உலகம்நின் கையதாயது என்று
உவந்தன குனிப்பன காண்டி உம்பர்போல்