பக்கம் எண் :

24 செய்தக்காதி நொண்டி நாடகம்

    111. திரள்மணிக்கடிவாளம் வாயினிற்
           செறித்தேன் வெள்ளநுரை தெறித்திடவே
        குரலுக்கு மேலான தளைவிட்டுக்
           குறிப்பாகக் கழுத்துறு தெறிப்பும்விட்டேன்

     112. முறுக்கிட்ட பாளா சுதனைவிட்டு
           முறுக்குப்போட்டுச்சுறு சுறுக்குடனே
        சறுக்காமல் முழிப்போடு குசைக்கச்சை
           தாங்கி வெளியின் மெள்ள வாங்கினேனே

     113. வெளிவந்த குதிரையின் மேலடியேன்
           மேற்கொள்ளவேண்டுமென் றாக்ரமித்தேன்
        கழிக்கம்புச் சோணங்கிநாய் விழித்தென்னைக்
           கலைத்திடமிகுசத்தங் குலைத்திடவே

     114. சடுதில் நாய் குலைத்ததென்றே யுறங்கிய
            சாணிப்பயல்களும் *பட்டாணிகளுந்
        திடுதிடென்றோடிவந்து குதிரையைத்
           தேடினார் சுற்றும்பிற்று மோடினாரே

     115. தக்காது குதிரையென்றே விட்டொளிக்கத்
           தலமற்று நடக்கவும் பலமற்றுப்போய்ப்
        *பக்காழிப் பொதியடக்குந் துருத்திக்குட்
           பதுங்கிக் கொண்டொருபுற மொதுங்கினனே

     116. பறிபட்டுத்தேடினவர் முறுக்கிட்டுப்
            பாயும்புரவிநின்ற சாயல்கண்டு
        தெறிபட்ட கள்ளனையே பதனமாத்
           தேடும்வழிக்குக்காவற் போடுமென்றார்