பக்கம் எண் :

சீதக்காதிபேரில் தனிப்பாடல்கள்45


      சீதக்காதி இறந்தபோது படிக்காசுப்புலவர் பாடிய கையறம்

    6.மறந்தா கிலுமரைக் காசுங்கொ டாமட மாந்தர்மண்மேல்
      இறந்தாவ தென்ன இருந்தாவ தென்ன இறந்துவிண்போய்ச்
      சிறந்தாளுங் காயற் றுரைசீதக் காதி திரும்பிவந்து
      பிறந்தா லொழியப் புலவோர் தமக்குப் பிழைப்பில்லையே.

    7.விண்ணுக்கு மண்ணுக்கும் பேராய் விளங்குதே வேந்த்ரனெனுங்
      கண்ணுக் கினிய துரைசீதக் காதி கமலநிகர்
      தண்ணுக் கிசைந்த வதனசந்த் ரோதய சாமியிந்த
      மண்ணுக்கு ளேயொளித் தான்புல வோர்முகம் வாடியதே.

    8.தேட்டாளன் காயற் றுரைசீதக் காதி சிறந்தவச்ர
      நாட்டான் புகழ்க்கம்ப நாட்டிவைத் தான்றமிழ் நாவலரை
      ஓட்டாண்டி யாக்கி யவர்கடம் வாயி லொருபிடிமண்
      போட்டான் அவனு மொளித்தான் சமாதிக் குழிபுகுந்தே.

    9.*பூமா திருந்தென் புவிமா திருந்தெனிப் பூதலத்தில்
      நாமா திருந்தென்ன நாமிருந் தென்னநன் னாவலர்க்குக்
      கோமா னழகமர் மால்சீதக் காதி கொடைமிகுந்த
      சீமா னிறந்திட்ட போதே புலமையுஞ் செத்ததுவே.

    
சீதக்காதி வள்ளலை நமச்சிவாயப்புலவர் பாடியவை

    10.மைப்போ தகமும் வளநாடுஞ் செந்தமிழ் வாணர்க்கருள்
       கைப்போ தகமனை யான்சீதக் காதியைக் காத்திருந்த
       அப்போ தறிந்திலம் இப்பாழ்ம் பணத்தின் அருமையெல்லாம்
       இப்போ தறிந்தனம் ஈயாத லோப ரிடத்திற்சென்றே.

    11.தடக்கும்ப கிம்புரிக் கொம்ப சலப்பெருந் தந்திபட
       நடக்குந் துரங்கத் துரைசீதக் காதிநன் னாட்டினல
      வடக்குங் குமக்கொங்கை மின்னே யவனறெரு வாயிலிலே
       கிடக்குங் கலியும் பரராச ரத்ன கிரீடமுமே.
_____________________________________________________
    * இப்பாட்டு நமச்சிவாயப் புலவர் பாடியதென்பர்.