பக்கம் எண் :

24 குசேலோபாக்கியானம்

     கந்தநற் கமல மாலைசூழ் தோளான்
          கலையுணர் சீனிவா சப்பேர்
     இந்திரன் வேண்ட வெழில்திரு மார்பன்
          இணையடிப் பூசனை யியற்றி.

   (சொ - ள்.) சந்ததம் உற்ற விருந்தினை ஓம்பும் தக்க வேங்கட கிருட்டின பேர்
கந்தவேள் பின் வந்து உதித்தவன் - எக்காலமும் தன்பால் வந்த விருந்தினரை விரும்பி
வரவேற்கும் தகுதியுடைய வேங்கட கிருட்டினன் என்னும் பெயரையுடைய
கந்தவேளுக்குப் பின்னே வந்து தோன்றியவனும் ; திருவூர் காவலன் - திருவூருக்குத்
தலைவனும் ; முள்பொதி பசுதாள் கந்தம் நல் மாலை சூழ் தோளான் - முட்கள்
பொருந்திய மணமுள்ள அழகிய தாமரை மலர் மாலையை அணிந்த தோள்களை
உடையவனும் ; கலை உணர் சீனிவாச பேர் இந்திரன் வேண்ட - பலகலைகளையும்
அறிந்துள்ள சீனிவாசன் என்னும் பெயரினையுடை யோனுமாகிய (மேன்மையால்) இந்திரன்
(போல்பவன்) கேட்டுக் கொண்டதற்கிணங்கி ; எழில் திரு மார்பன் இணை அடி பூசனை
இயற்றி - அழகில்மிக்க திருமகள் அமர்ந்திருக்கும் மார்பினனாகிய திருமாலைப் போற்றி.

   (வி - ம்.) இ்க்கவியும் அடுத்த கவியும் மற்றொரு புலவர் பாடினவை எனத்
தெரிகிறது. வேங்கட கிருட்டினப் பேர்க் கந்தவேள் பின் வந்துதித்தவன் எனச்
சீனிவாசனைக் கூறுவதால் வேங்கட கிருட்டிணன் சீனிவாசனுக்குத் தமயன் எனத்
தெரிகிறது. அவன் விருந்தோம்பும் பெருந்தகை எனவும் தோன்றுகிறது. ஆயினும்
இவன் இந்நூல் பாடுவித்தோனல்லன் என்பது நன்கு விளங்கும். கோவிந்த முகில்
சீனிவாசச் செம்மல் இருவரும் பாடியருளுக என முந்திய கவிகளில் வந்திருப்பதால்
அவ்விரு வருமே பாடுவித்தோராவார்; உடன்பிறந்த சிறப்பே இவர்க்குள்ளது எனக்
காண்க. (25)

     இல்லறத் திருந்தும் புளிம்பழம் ஏய்ப்ப
          இயைந்தவுட் டுறவடை குசேலன்
     நல்லதீஞ் சரிதம் நாவல ருள்ளம்
          நனிமகிழ் தரத்தமிழ்ப் பாவாற்
     பல்லவச் சோலை சூழ்வல்லூ ராளி
          பகரருந் தேவரா சப்பேர்
     வல்லவன் புரிந்த திறத்தையிற் றென்ன
          வகுப்பவ ருலகினில் எவரே.