வரிகள் 694 - 714 : பரிபுரக்காலும் .............தோன்றினாள் சொற்பொருள் : பாணன் கூறியவுடனே அப் பேரிளம்பெண் தனது சிலம்பணிந்த காலிலும், அல்குலிலும், கையிலும், சிறந்த கழுத்திலும், அணிந்துள்ள அணிவகைகள் எல்லாம் மேல்வருஞ் சூரியனுடைய பச்சைக் குதிரைகளின் உருவ வொளியை மறைக்கும்படி மரகதமணி யொளியைப் பரப்பவும், இரு புருவத்திற்கும் நடுவே மூக்காகிய குமிழம்பூ தாழ்ந்து இருப்பவும் அதன் அருகில் இருவிழியாகிய கருவிளைமலர் பூத்திருப்பவும், இடையில் வாயிதழ் ஆகிய ஒரு முருக்கமலர் பூத்திருப்பவும், கழுத்தாகிய இளம் பாளையையுடைய கமுகு வந்து நிறைந்திருப்பவும், போகந் தருவனவாகிய கொங்கைகளாகிய பெரிய பெரிய தென்னையிளநீர் இரண்டு சாய்ந்துவிளங்கவும், தோள்களாகிய பெரிய பெரிய மூங்கில் பருத்துத் தோன்றவும், விரும்பத்தக்க நல்ல பூங்கொத்தும் மாந்தளிரும் புனைந்த கூந்தல் நீண்டு செறியவும், சிறிய வளையலணிந்த இரு கைகளாகிய காந்தட்பூக் குலைகாட்டவும், நெருங்கியிளைத்துத் தனியாகி இடையாகிய இளவஞ்சிக் கொடி தளரவும், துடையாகிய வாழை தழைத்து அழகுசெய்யவும், ஒலிகாட்டிச் சகோரப்புள்ளும் அன்னப்பறவையும் மானும் செருக்கிய மயிற்கூட்டமும் கூவும் புறாவும் கூடத் தொடர்ந்து வரவும், அவைமட்டுமே பிறவும் இனமாக விரும்பி வரவும் ஆகீய இத் தோற்றத்தால் மீனக்கொடி கட்டிய மன்மதனுக்குரிய இளவேனிற்காலத்திற் புகுந்து மறைவதற்குரிய ஒரு பசிய அழகிய பூஞ்சோலையென்று சொல்லும்படி வந்து சோழனுக்கு முன் தோன்றினாள். விளக்கம் : அப் பேரிளம்பெண் பாணன் கூறக் கேட்டவுடன் சோழனைக் காணத் தெருவில் வந்து எதிர் நின்றாள். அவள் வந்து நின்ற காட்சி ஒரு பசிய பூங்சோலை வந்து நின்றது போற் பொலிவுற்றுத் தோன்றியது. அவள் அணிந்திருந்த அணிகலன்கள் யாவும் மரகதம் பதித்தவை, ஆதலால் சூரியன் பச்சைக் குதிரைகளின் ஒளி இவ் வொளிக்குள் மறைந்து, அவ்வொளி பசிய பூஞ்சோலைபோலப் காட்சியளித்தது. அவள் பொன்போன்ற மேனி யொளிமறைந்து பச்சையொளிமயமாய்ப் பரவி யெங்கும் விளங்கியது. அவள் சோலையாய்த் தோன்றினாள். அவள் மூக்குக் குமிழம்பூவாகத் தோன்றியது. இருவிழிகளும் கருவிளைமலராகத் தோன்றின. சிவந்த வாயிதழ் முருக்க மலராகத் தோன்றியது. கழுத்துக் கமுகாகக் காட்சியளித்தது. கொங்கைகள் தெங்கிளநீராகத் தெரிந்தன. தோளிணை மூங்கில் போல் தோன்றின. கூந்தலிற் புனைந்த பூங்கொத்தும் மாந்தளிரும் சோலையிலுள்ளவைபோலத் தோன்றின. சிவந்த கைகளிரண்டும் செங்காந்தள் மலராகத் தெரிந்தன. இடை வஞ்சிக் கொம்பாக வயங்கியது. துடைகளிரண்டும் வாழைமரம்போலத் துலங்கின. சகோரம், அன்னம், மான், மயில், புறவு இவையெல்லாம் சோலையில் உறையச்செல்வனபோல் அவளைத் தொடர்ந்து சூழ்ந்து நின்றன. ஆதலால் அவளைக் கண்டோர் பூஞ்சோலை (எனவந்து தோன்றினாள் என்க.) என - என்றுகூற. நிதம்பம் - அல்குல். மதாணி - பதக்கம். இஃது ஒரு வகையணி; குரகதம் - குதிரை. மேலோன் - சூரியன், மேலிடத்திருப்பவன் ஆதலின். சோதி - ஒளி. ஏகம் - ஒன்று. பூகம் - கமுகு. மிடறு - கழுத்து காம்பு - மூங்கில். துணர் - பூங்கொத்து. தொடி - வளையல். குலைப்ப - குலையாகத்தோன்ற. கைவிரல்கள் தோன்றுவன காந்தட்குலைபோலத் தோன்றின எனக் கொள்க. மயூரம் - மயில் - கணம் - கூட்டம். விளிக்கும் - கூவுகின்ற. சுறவு - மீன்கொடி. சுறவுயர்த்தோன் என்றது, காமனை, மன்மதனுக்குரிய வேனிற்காலத்தில் காதலுடையவர் வந்து மறைவதற்குரிய சோலை இஃது என்று சொல்லும்படியிருந்தது அவள் தோற்றம் என்க. காமனுக்குரிய காலம் இளவேனில். அக் காலம் காதலை மிகத் தோற்றுவிக்கும். அதுவே காமவெப்பம். அது தணிப்பதற்குச் சோலைவனஞ் சென்றால் அது பாலைவனமாகக் காதல்வெப்பத்தை மிகுவிக்கும். அவ் வெப்பத்தைத் தணிப்பது மங்கையராம் பூஞ்சோலையேயாம். மங்கையருடன் கூடினாலன்றிக் காமவெப்பம் நீங்காது. ஆதலால் இவளை இளவேனிற்காலத்திற் புகுந்து மறைந்துகொள்ளத் தகுந்த பூஞ்சோலையெனக் குறித்தார் எனக் கருத்துட்கொள்க. |