பொருட்டுத் தாம் வழிபடு கடவுளையாயினும் நூலிற்கு ஏற்புடைக் கடவுளையாயினும் வணங்குவது மரபு. அம்முறையில் இஃது ஏற்புடைக் கடவுள் வணக்கம் கூறியது என்க. திருமழிசை யாழ்வார் காஞ்சியில், "கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி, மணிவண்ணா நீகிடக்க வேண்டா - துணிவுடைய, செந்நாப் புலவன்யான் செல்கின்றேன் நீயும்உன்றன் பைந்நாகப் பாய்சுருட்டிக்கொள்" என்று பாடிய பாடல் கேட்டு அவர்பின் சென்றவர் திருமால் ஆதலால் அவர் தமிழ்மொழி விருப்பமுடையவர் என்பதுதோன்ற "தெள்ளு தமிழ் அழகர்" என்றார். குமரகுருபரரும் "பணிகொண்ட துத்திப் படப்பாய்ச் சுருட்டுப் பணைத்தோ ளெருத்தலைப்பப், பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப்பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டலே" என்று திருமாலைத் துதிப்பதும் காண்க. சீபதி வாழ்வார் ஆகிய அழகர் எனக் கூட்டுக. பிள்ளைக்குருகு - பறவைக்குஞ்சுகள், அவைகள் பறக்க முடியாமல் ஊர்ந்து திரியும். அவற்றைக் கண்டு சங்குகள் பயந்து கமுக மரங்களில் ஏறி மறையும் என நீர்வளம் கூறினர். ஏரி, குளம், கால்வாய்களில் நீர்பெருகியிருப்பதால் மீன்கள் மிகுந்து திரியும் என்றும், அவற்றை இரையாகக் கவர்ந்துண்ணப் பறவைக் குஞ்சுகளும் வரும் என்றும், சங்குகளும் நீரில் ஊர்ந்து திரியும் என்றும், குஞ்சுகள் ஊர்ந்துவருவது கண்டு அஞ்சி அண்மையில் வளர்ந்து நிற்கும் கமுகில் ஏறி ஒளிந்துகொள்ளும் என்றும் குருகூரின் நீர் வளந்தோன்றுதல் காண்க. அத்தன் என்பது அத்தான் என நீண்டு நின்றது செய்யுள் நோக்கி. அத்தன்- தலைவன். இஃது, அண்மை விளியாய் மாறனை யுணர்த்திற்று. நேசம் - அன்பு. அன்பின் குழவியாகிய அருளை யீண்டுணர்த்தியது. அருள்கூர் என்பது பொருள். இடையூறின்றி இனிது முடிவதற்குத் திருவருள் புரிக என்பது கருத்து. | | |
|
|