பக்கம் எண் :

முன்னுரை9


புராணங்களும் நின் படைகள் என்று சக்கரவர்த்திக்குத் தக்கவாறு வகுத்துக்
காட்டிய வன்மை கண்டு கண்டு புலவர்கள் களிகூரும் பான்மைத்தாம் (36 -
46). எழுத்து வருத்தனம், சக்கரக்கவி, தேர்க்கவி, சுழிகுளம், கூடசதுக்கம்,
மாலைமாற்று, சதுரங்கபந்தம், முரசபந்த முதலிய சித்திரப் பாவின் பெயர்
வெளியே தோன்றப் பொருள் வேறமைத்து வரசங்கமீது இருந்தாய் என்று
சங்கப் பலகையின் மேல் தமிழ் இருந்த காட்சியை எடுத்து விளக்கியது
எவர்க்கும் இறும்பூது விளைக்கு மன்றோ (46 - 49)! மூவர் பதிகங்களும்,
வாதவூராளி திருவாசகமும் திருக்கோவையாரும் காரைக்காலம்மையார் பாடிய
இரட்டை மணிமாலையும், இலக்கண நூற்பாவும், பஞ்சகாப்பியமும்,
பெருங்காப்பியமும், பொன் வண்ணத்தந்தாதியும், மும்மணிமாலையும்,
பட்டினத்தார் பாடிய மும்மணிக் கோவையும், பத்துப்பாட்டும்,
எட்டுத்தொகையும், பதினெண்கீழ்க்கணக்கும், இரட்டையர் பாடிய கலம்பகமும்,
கலிங்கத்துப்பரணியும், ஒவ்வொரு கண்ணிக்கும் ஒவ்வோர் ஆயிரம் பொன்
பரிசளிக்கப்பெற்ற சோழன் உலாவும், பிள்ளைத்தமிழும் ஆகிய நூல்களை
யடுக்கடுக்காகக் கூறித் தமிழரசற்கு மெய்காப்பாளராக அமைத்தவிதம்
தமிழ்நூலில் அவர் வைத்திருந்த ஆர்வத்தைப் புலப்படுத்துகின்றது (50 - 60).
“அரியாசன முனக்கே யானாலுனக்குச், சரியாருமுண்டோ தமிழே” என்ற
கருத்து ஆராயத்தக்கது. டாக்டர் உ.வே.,சா அவர்கள் “அரியாசனம் -
சிங்காதனம்; அரிந்தபனையேடாகிய ஆசனமாம். இக்கண்ணி
‘அரியாசனத்திலரசரோடென்னைச் சரியா சனம்வைத்த தாய்’ (தனிப்) என்றதை
உட்கொண்டு இயற்றப்பட்டது போலும்” , எனக் குறிப்பு வரைந்துள்ளார். இது
ஆங்கிலமொழியரசு வந்த காலத்தெழுந்த நூலோ என்னும் ஐயத்தை
எழுப்புகின்றது. தமிழ்மொழியாகிய நீ யரியணையேறி யமர்ந்தால் உனக்குச்
சரியான மொழி யொன்றுமின்றாம். உன் ஆட்சியில்லாக் குறையொன்றே யுளது
எனச் சுட்டியதுபோலத் தோன்றுகின்றது. அறிஞர் ஆய்க.