|
|
(இ-ள்.) மந்தார தருப்போன்ற கையையுடைய வாணன் தென்மாறைநாட்டு மயில் போன்றவளே, குழலுக்கு நாணுங் கங்குலானது கொத்தார்ந்த மாலையணிந்த நின் செங்கனிவாயொடுங் கொங்கையொடுஞ் சேதாம்பலையும் பைந்தாமரையையும் பகைக்கச் செய்ததாதலால், கேடில்லாத சோலையிடத்திருக்கும் பொய்கையிற் போய், நான் அப்போதுகளைக் கொய்வேன், கொய்து வருமளவும் இவ்விடத்து நிற்பாயாக என்றவாறு. |
மந்தாரம் - பஞ்ச தருவில் ஒரு தரு. நந்தா - கெடா. வனம் - சோலை. கொந்து - கொத்து. தெரியல் - மாலை. சேதாம்பல் - அரக்காம்பல்.
|
இவ்வாறு இரவுக்குறிக்கண் தலைவியைத் தமியளாய் நிறுத்திப் பாங்கி நீங்கில் இடையிருளில் அச்சமின்றித் தலைவி நிற்பளோ எனின், தான் பயின்ற இடமும் தன் ஆயத்தோடு ஒக்கு மாதலானும், தலைவன் ஒருபுடை அருகு நிற்றலானும், பாங்கியும் அப்பால் பொய்கையில் நிற்றலானும் அச்சமின்றி நிற்பளென்று உணர்க. |
(176) |
வண்டுறை தாரோன் வந்தெதிர்ப் படுதல்: |
| முதிரா முலையிப் பனியந்த கார முனியவல்ல கதிரா யிரமில்லை யேழ்பரித் தேரில்லைக் காவல்வெய்யோற் கெதிராதல் சோமற் கியல்வதன் றேநும்மில் யார்திறந்தார் மதுரா புரித்தமிழ் தேர்வாணன் மாறை வனத்துவந்தே.
|
(இ-ள்.) எஞ்ஞான்றும் முதிர்ந்து சாயாத முலையை யுடையாய்! இந்தப் பனி பொருந்திய அந்தகாரமாகிய பூட்டைத் திறப்பதற்குத் திறவுகோலாகிய கதிராயிரமில்லை, திறப்பவனைக் கொண்டுவரும் ஏழ் பரியையுடைய தேரில்லை, திறக்குங் காவலையுடைய வெய்யோனுக்கு எதிராய்வந்து திறத்தல் சோமற்குப் பொருந்துவதன்றே யாதலான் நும் இல்லாகிய தாமரைமாளிகையை மதுராபுரித் தமிழை யாராய்ந்த வாணன் மாறை நாட்டிலிருக்கும் பொய்கை நீரில் வந்து திறந்தவர் யார் என்றவாறு. |
அந்தகாரம் - இருள். பரி - குதிரை. வெய்யோன் - சூரியன். சோமன் - சந்திரன். இயல்வது - பொருந்துவது. வனம் - நீர். `முதிராமுலை` என்றதற்கு `நும்மில்` என்றது ஒருமைப்பன்மை மயக்கம். |
(177) |