உரைத் தற்சிறப்புப் பாயிரம் |
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
| பொய்யா மொழியா ரெனும்பெரியோர் புகலும் வாணன் கோவையுரை மையார் சோலைக் குன்றத்தூர் வளரட் டாவ தானிசொக்கன் கையார் கனிபோல் அகப்பொருளிற் காணுஞ் சங்கை யெலாந்தீர மெய்யாந் தொல்காப் பியநூலின் விதியால் எழுதி விளக்கினனே. |
இது, மன்னு புகழ் பெற்ற வாணன் தன்மேல் பன்னிய கோவையுரை பகர்ந்தான் இவன் என்பது. |
(இதன் பொருள்) திரிபுபடாத சொல்லினை யுடையாரென்று யாவராலும் புகழப்படும் பெருமையுடையராற் சொல்லப்படும், வாணன் என்னும் இயற்பெயருடையோனது கோவை யென்னும் பாட்டிற்கு நால்வகைத்தாகிய உரையை, மேகங்களைப் பொருந்தாநின்ற சோலை சூழ்ந்த குன்றத்தூர் என்னும் நகர் வளர்தற்கேதுவாகிய அட்டவதானத்தை உடையனாகிய சொக்கன் என்னும் இயற்பெயரையுடைய நாவலர்பிரான், அங்கையிற் பொருந்திய நெல்லிக்கனிபோலத் தன்னால் ஐயந்திரிபறக் காணப்படும் அகப்பொருளிடத்துப் பிறர்க்குத் தோன்றுங் கடா விடையெல்லாந் தீரும்படி, உண்மையாமென்று அதங்கோட்டாசிரியர் முதலானோராற் கொள்ளப்படும், தொல்காப்பியன் என்னும் முனிவனாற் செய்யப்பட்டதாய் நிரம்பிய இலக்கணத்ததாய அந்நூலினியல்பால் எழுதுதலைச் செய்து, யாவரும் அறியும் பொருட்டுத் தெரிவித்தான் என்க. |
திரிபாவது ஒன்றையொன்றாகக் காண்டல். 1`பொய்யாமொழியார்` எனவே, அதனை முதற்காரணமாகவுடைய பாவினையும் உடையார் என்பது பெற்றாம். சொல்லினையும் பாவினையும் திரிபின்றியுணரவே, அவ்வுணர்ச்சிக்குப் பயனாகிய ஒழுக்கமும் உடையார் என்பதாம். இவ்வகையாய வேதுணர்வுடையராற் புகழப்பட்டான் எனவே, அவனது பெருமை கூறவேண்டா |
|
1. அது பொய்யிலாமொழியார் எனவே, அதனை முதற்காரணமாகவுடைய பாவினையும் உடையார் என்பது இதனானே பெற்றாம். |