பக்கம் எண் :

279
25. உடன்போக்கு இடையீடு

 
அஃதாவது, நம்  மனையில்  வரைந்துகொள்ளாது தன் ஊரில் வரைந்தான்  என்று
தலைவி  சுற்றத்தார்  வெறுப்படைதலால் தலைவியை உடன்கொண்டு போம்போது
தலைவி சுற்றத்தார் இடையீடு பட்டு மீண்டு தலைவி வருதல்.
(304)    
 1`போக்கறி வுறுத்தல் வரவறி வுறுத்த
னீக்க மிரக்க்மொடு மீட்சி யென்றாங்
குடன்போக் கிடையீ டொருநால் வகைத்தே`
     என்னுஞ் சூத்திர விதியால் உடன்போக்கிடையீடு ஒரு நால்வகைப்படும்.
நீங்குங்கிழத்தி பாங்கியர் தமக்குத்
தன்செலவுணர்த்தி விடுத்தல்:
நீங்குங்  கிழத்தி  பாங்கியர்  தமக்குத் தன் செலவு உணர்த்தி விடுத்தல்  என்பது,
ஐம்பத்தைந்தா  நாள், தன் ஊரைவிட்டு நீங்குங் கிழத்தி எதிர்வரவோர் தம்மொடு
தலைவனுடன் செல்லுந் தன் செலவைப் பாங்கியர்க்கு உணர்த்திவிடுத்தல்.

 வளவேய் மிடைந்த வழிப்படர் வீர்செங்கை வாணன்தஞ்சைத்
தளவேய் நகையென் துணைவியர்பாற்சென்று சாற்றுமின்போர்க்
களவே ளனையவோர் காளைபின் போனினள் கான்பனிநீத்
திளவேனில் வல்லிபெற் றாங்கெவ்வ நீத்தெழி லெய்தியென்றே.

(இ-ள்.) வளம்    பொருந்திய   மூங்கில்   மிடைந்த   வழியில்    செல்கின்றீர்!
பனிக்காலத்தை   நீத்து    இளவேனிற்   காலத்தை   வல்லி    பெற்றாற்போல்,
துன்பமெல்லாம்   ஒழித்து  அழகைப்பொருந்திக்  காட்டிடத்தில், போர்க்களத்தின்
முருகவேளையொத்த  ஒரு  காளைபின் போயினள் என்று சிவந்த  கையையுடைய
வாணன்  தஞ்சையிலிருக்கும்  தளவையொத்த நகையையுடைய என் பாங்கியர்பாற்
சென்ற சொல்லுமின் என்றவாறு.
மிடைதல் - நெருங்குதல். படர்தல் - செல்லுதல். தளவு - மல்லை.  கான் - காடு.
எவ்வம் - துன்பம். எழில் - அழகு. சுற்றத்தார் செய்த வெறுப்பை, `எவ்வம் நீத்து`
எனக் குறிப்பாற் கூறியவாறு உணர்க.
(360)    

1. அகப்பொருள் விளக்கம், வரைவியல் - 27.