பக்கம் எண் :

கட
19. வரைவுமலிவு
230

 
    வரைவுமலிவு   என்பது,  வரைவு  தொடங்கி   நடக்கும்  முயற்சி  மிகுதல்.

  1`வரைவுமுயல் வுணர்த்தல் வரைவெதிர் வுணர்ததல்
வரைவறிந்து மகிழ்தல் பராவல்கண் டுவத்தலென்
றொருநால் வகைத்தே வரைவு மலிதல்`
     என்னுஞ்      சூத்திரவிதியால்,     வரைவுமலிதல்     நால்வகைப்படும்.
காதலன் முலைவிலைவிடுத்தமை
பாங்கி காதலிக்குரைத்தல்:
  தொலைவிலை யாகிய பல்பொருள் காதலர் சூதமர்நின்
முலையிலை யாக முகந்தளித் தார்முனை வேந்தர்தம்மைத்
தலைவிலை யாகத் திறைகொண்ட வாணன் தமிழ்த்தஞ்சைநீ
உலைவிலை யாகுக பொன்வண்ண மாறுக ஒண்ணுதலே.

     (இ-ள்.) ஒள்ளிய நுதலை யுடையாய்! காதலர் எடுக்க எடுக்கத்  தொலையாத
பலவாகிய பொருள்களைச் சூதுபோற் பொருந்தும் நின் முலைவிலையாக  அம்பண
அளவையான்   முகந்தளித்தார்;   பகைவேந்தர்  தம்மை  அவர்த்  தலைவியைக்
கொள்ளாது  விடுதற்கு  அவர்கள்  கொடுக்கும்  பொன்னை  விலையாகத்  திறை
கொண்ட  வாணன்  தமிழ்த்  தஞ்சையி  லிருக்கின்ற  நீ   வருத்தமில்லையாகுக,
பசலை நிறத்தையொழிப்பாயாக என்றவாறு.

     சூது   முலை: உவமைத்தொகை.              அமர்தல் - பொருந்துதல்.
முலைவிலை - கோடற்குரியார்  கொடுத்தற்குரியார்க்குக்   கொடுக்கும்   பொருள்.
முனை - பகை.  திறை - கப்பம்.  உலைவு - வருத்தம். பொன்வண்ணம் - பசலை.
அம்பணம் - மரக்கால்.
(281)    
காதலி நற்றாயுள்ள மகிழ்ச்சி யுள்ளல்:
     காதலி  நற்றாய்  உள்ளமகிழ்ச்சி  உள்ளல்  என்பது,  தலைவன்   விடுத்த
முலைவிலைப்  பொருள்களைக்  கண்டு,  மகட்கு,  மணக் காலம்  என்று, நற்றாய்
மகிழும் உள்ளத்து மகிழ்ச்சியைத் தலைவி நினைத்தல்.
  கயமா மலரெனுங் கண்ணியை வண்டெனுங் காளைபல்புள்
இயமா மணம்புண ரீர்ந்துறை நாட ரெதிர்ந்தவர்மேல்
வயமா நடத்திய வாணன்தென் மாறை வருகுவரேல்
நயமா மணவணி கண்டியாயு மின்புறு நம்மினுமே.

1. அகப்பொருள் விளக்கம், வரைவியல் - 3.