|
|
அஃதாவது, பொருளீட்டுதல் காரணமாகப் பிரியும் பிரிவு; எனின், முன் பொருளிலனாமாகவே, `எள்ளுநர்ப் பணித்தலும் இரந்தோர்க்கீதலும், நள்ளுநர்நாட்டலும் நயவாரொறுத்தலும்` என்னும் இவையெல்லாம் பொருட் குறைபாடுடையார்க்கு நிகழாமையின், இக் குறைபாடெல்லாம் உடையனாம்; அவை யுடையானது பொருவிறப்பு என்னையோவெனின், பொருளிலனாய்ப் பிரியுமென்பதன்று; தன்முதுகுரவரால் படைக்கப்பட்ட பல்வேறு வகைப்பட்ட பொருள்களெல்லாங் கிடந்ததுமன், தான் அதுகொண்டு துய்ப்பது ஆண்மைத்தன்மை யன்றெனத்தனது தாளாற்றலாற் படைத்த பொருள்கொண்டு வழங்கிவாழ்தற்குப் பிரியும் என்பது. அல்லதூஉம் தேவகாரியமும் பிதிர்க்காரியமும் தனது தாளாற்றலாற் படைத்த பொருளாற் செயத் தனக்குப் பயன்படுவன. என்னை? தாயப்பொருளாற் செய்தது தேவரும்பிதிரரும் இன்புறாராகலான், அவர்களையும் இன்புறுத்தற்குப் பிரியுமெனக் கொள்க.
|
தோழி தலைமகட் குணர்த்தல்: |
| மஞ்சைப் புனைமதில் மாறை வரோதயன் வாணர்பிரான் தஞ்சைப் பதியண்ண லெண்ணலர் போற்றளி நாமிருக்குக நெஞ்சைப் பொருள்வயின் வைத்துநங் கேள்வர்நன் னீண்மதியின் பிஞ்சைப் புரைநுத லாய்பிரி வாளின்று பேசினரே.
|
(இ-ள்.) நல்ல நிண்ட பிறைபோலும் நுதலையுடையாய்! முகிலையணிந்த மதில்சூழ்ந்து மாறைநாட்டில் வரத்தினால் உதயஞ் செய்த வாணர்குலத்திற்கு அதிபனாகிய தஞ்சைப்பதியில் வேந்தனை யெண்ணாதவர்போலத் தனியாய் நாமிருக்கத் தன்னெஞ்சைப் பொருளிடத்து வைத்து நம் கணவர் பிரியும் பொருட்டாக இன்று சொல்லினர் என்றவாறு. |
மஞ்சு - முகில். வரோதயன்; முற்றுவினையெச்சம். அண்ணல் - வேந்தன். எண்ணலர் - பகைவர். மதியின்பிஞ்சு - பிறை. பிரிவான் : வினையெச்சம். |
(420) |
தலைவி இளவேனிற் பருவங்கண்டு புலம்பல் : |
| நங்க ணிரங்க அரும்பொருள் தேட நடந்தவன்பர் செங்க ணிருங்குயி லார்ப்பது கேட்கிலர் செந்தமிழோர் தங்க ணிடும்பை தவிர்த்தருள் வாணன்தென் தஞ்சைவஞ்சி திங்கள் நிவந்தது போற்கவி னார்முகத் தேமொழியே. |