இவரது சோகத்தை ஆற்றுந்தன்மை பெண்தன்மையாகலின், நினக்கு அப்பெண்தன்மை சிலேடை வகையால் தோன்ற நின்றனையென்று கூறினாள் என்பது. அஃதென்னையெனில், நீ சோகமின்மையையெய்தினை; அன்றி, தண்ணளியையுமுடையை; மலர்போலும் வாண்முகத்தையுமுடையை; அன்றியும் மாதவியென்று ஒரு பெண் பெயரினையுமுடையை; ஆதலான், இவர் சோகத்தையாற்றல் வேண்டுமென்பதனான், நீயொரு கருமஞ் செய்ய வேண்டும் என வருவித்து உரைக்கப்பட்டது. மாதவியை நோக்கி நீ செய்கென்று கூறினமையான், தலைவி மறுத்தமை தோன்றிற்று. இங்ஙனங் கூறத் தலைவன் நெருங்கி வருதலால் நாணிக் கண்புதைத்தாள் என்க. இஃது இச்செய்யுளில் இல்லையால், கூறியவாறு என்னை யெனின், மேல் வருங் கவியுள் கண்புதைக்கு வருந்தல் கூறுகின்றாராதலான், இச் செய்யுளிற் கண்புதை கூறவேண்டுவதென்று உணர்க. |