பக்கம் எண் :

பிரிவுழிக் கலங்கல்
61

 

`மருளுற்றுரைத்தல்`   `நெருளுற்றுரைத்தல்`   என்று   இரு வகையாற் கூறப்படும்
என்னும்  இலக்கணம்   சூத்திரத்துட்  கூறலான்,   `தெருளுற்றுரைத்தல்` என்னும்
இலக்கணத்தாற் கூறப்பட்டது.
(30)    
பண்பு பாராட்டல்
பண்பு  பாராட்டல் என்பது, தலைவியது அழகைப் பரிந்து கொண்டாடல்.   பண்பு
என்று அழகிற்குப்    பெயரோவெனின்,  அழகும் பண்பு, பலவற்றினுள்ளும்  ஒரு
பண்பாதலான் அழகு பண்பெனப்பட்டது.

 மயலார் களிற்றண்ணல் வாணன்தென் மாறையில் வாய்த்தவர்கண்
கயலா மெனிற்புயல் கள்ளங்கொள் ளாகருத் தாழளகம்
புயலா மெனிற்புயல் போதுகொள் ளாதிப் புனையிழையார்
இயலாம் அனைத்தையும் வேறென்ன பேரிட் டியம்புவதே.


(இ-ள்.)  நெஞ்சமே,  மயக்கமார்ந்த  யானைப்   பெருமையையுடைய   வாணனது
தென்மாறை    நாட்டில்  நமக்கு  நல்வினைப்  பயத்தால்  வாய்த்த   மடவாரின்
கண்களைக்  கண்களல்ல,  கயலேயாம்  எனச்  சொல்லின், அக்கயல்கள்  கள்ளப்
பார்வை கொள்ளா; கரிதாய்த் தாழ்ந்த அளகத்தை அளகம் அன்று, புயலாமெனில்,
அப்புயல்  அலங்காரமாகப் போதுகளைப்  புனையாது; இவ்விரண்டு   உறுப்பிற்கும்
அழகின்    பெருக்கத்தான்   உவமப்    பொருள்களைப்    பெயரிட்டுக்   கூற
இயையாமையாற் புனையிழையாரது இலக்கணமாகிய  அனைத்துறுப்பையும் உவமப் பெயர்களில் வேறாக என்ன பெயரிட்டு இயம்புவது என்றவாறு.

எனவே,  அழகின்  பெருக்கத்தான்  அவ்வுறுப்புகள்  தமக்குத்  தாமே   உவமை
கூறவேண்டுவ தல்லது, வேறு பொருள்கள் ஒப்புக் கூறப்படாவாயின.

மயல் - மயக்கம். வாய்த்தல் - முயற்சியான்   எய்தற்கு அரிதாகிய பொருள்  ஒரு
காலத்து ஓரிடத்து நல்வினைப் பயத்தான் தானே வந்து எய்துதல். அளகம் -குழல்.
இயல் - இலக்கணம். இயம்புவது - சொல்லுவது. நெஞ்சம்: முன்னிலையெச்சம்.
(31)    
பயந்தோர் பழிச்சல்:
பயந்தோர்ப் பழிச்சல் என்பது,  தலைவியைப்  பெற்றாரைத் தலைவன் வாழ்த்தல்.

 அணியுஞ் சுடர்விரி சங்குபங் கேருக மாடகமும்
மணியுந் தரமன்னி வாழிய ரோதஞ்சை வாணன்வெற்பில்
தணியுந் தொழிலொழித் தின்பமுந் துன்பமுந் தன்பதமே
பணியும் பணியெனக் குப்பயந் தாளைப் பயந்தவரே.