பக்கம் எண் :

பாங்கற் கூட்டம்
75

 
`கார்க்குயிலே   மொழி`  எனவும்,  `முகையே தனம்`  எனவும் மாறுக. `இங்ஙனே`
என்புழி  ஏகாரமும்  `பூங்கொடியே` என்புழி ஏகாரமும் ஈற்றசை: ஏனைய தேற்றம்.

`தனி நெஞ்சம்` என்றது வேட்கைப் பாரத்தைச் சுமந்து நைந்ததனால் அந்நெஞ்சம்,
முலைப்பாரத்தைச்  சுமந்து   நைந்த  இடைக்கு  உவமமாயிற்று. வரை  கண்களை யுடைமையின்   ஆகுபெயரான்  மூங்கிற்குப் பெயராயிற்று.  வரை மலையாகாதோ
எனின்,  ஆகாது.   என்னை,   மேற்கூறும்   பாங்கன்  இறைவனைத்  தேற்றுஞ்
செய்யுட்கண்,   `கழைவளர் சாரல்`   என்றமையான்.  இவ்விடத்து மூங்கிலென்றே
பொருள்கூற வேண்டுவதாயிற்று;
 1`மால்வரை நிவந்த சேணுயர் வெற்பின்`

எனக் கூறியதனால் உணர்க.
(49)    
பாங்கன் இறைவனைத் தேற்றல்:
பாங்கன் இறைவனைத் தேற்றல் என்பது, இவ்வாறு நீ வருந்தாதொழிக, நீ சொன்ன
குறியிடத்துச் சென்று தலைவியைக் கண்டு யான் வருகின்றேன் என்று தேற்றுதல்.

மழைவளர் மாளிகை மாறை வரோதயன் வாணன் வெற்பின்
இழைவளர் வார்முலை யேரிளந் தோகையை யிக்கணம்போய்க்
கழைவளர் சாரலிற் கண்டுனை யான்வந்து காண்பளவும்
தழைவளர் தாரண்ண லேதணி வாய்நின் தகவின்மையே.

      (இ-ள்.) மலரோடுந்   தழைகலந்து  நீண்ட மாலையையுடைய  இறைவனே!
முகில்  துஞ்சும்  மாளிகை  நெருங்கிய மாறைநாட்டு  வரோதயனாகிய  வாணனது
வெற்பில்,   அணிக்கியலுங்  கச்சுப்  பொருந்திய முலையழகுடைய  இளந்தோகை
போல்வாளை   நீ  கூறிய குறியிடமாகிய  மூங்கில் வேலியாய் வளர்ந்த புனத்தில்,
இக்கணம்போய்க்  கண்டு உனை யான் மீண்டுவந்து காணுமளவும் நினது  வருத்தம்
ஒழிவாய் என்றவாறு.

மழை - முகில்.   இழை - ஆபரணம்.   வார் - கச்சு.  ஏர் - அழகு.  தோகை :
ஆகுபெயர். சாரல்: ஆகுபெயர்; என்னை, தலைவன் குறி கூறியது, `புனமே யிடம்`
என்றதனால்    என்று  உணர்க.   இங்ஙனம்  மூங்கில்  வேலிப்புனம்    என்று
அதிகாரப்படக் கூறிய வாறென்னையெனின், இக்கிளவிக் கடுத்த கிளவி  `குறிவயிற் சேறல்`  என்றலின்   தலைவி   யிருக்குமிடமுங்   குறியென்றலின்,   அக்குறியிற் குறியிடமெல்லாம் ஒன்றாய் வருதல் விதியாதலான்,


1. திருமுரு - 12.