பக்கம் எண் :

தஞ்சைவாணன் கோவை
80

 
தலைவன் றனக்குத் தலைவிநிலை கூறல்:
தலைவன் றனக்குத் தலைவிநிலை கூறல் என்பது, பாங்கன் தலைவி   குறியிடத்துத்
தனித்து நிற்கின்ற நிலையைக் கண்டுவந்து தலைவற்குக் கூறல்.

 வளங்கனி மாறை வரோதயன் வாணன் மலயவெற்பா
உளங்கனி காத லுடனின்ற தானின் னுடலமெல்லாம்
களங்கனி போலக் கரகிவெண் கோட்டுக் களிறுண்டதோர்
விளங்கனி போல்வறி தாநிறை வாங்கிய மென்கொடியே.

(இ-ள்.) வளம் பழுத்த மாறைநாட்டு வரோதயனாகிய வாணனது மலையவெற்பனே!
நின்னுடலமெல்லாங் களம்பழம் போலக் கருக, வெண்ணிறக்  கோடுடைய  யானை
யுண்டதொரு விளங்கனிபோல்  இல்லாமையுடைய  தாகி   நின்று,    நிறையாகிய
குணத்தைக்   கொண்ட   மெல்லிய   கொடியானது,  நீ   சொன்ன  குறியிடத்து
உளங்கனிந்த   காதலுடன்   நின்றதாதலால்,  நீ  ஆக்குறியிடத்துச்  செல்வாயாக
என்றவாறு.

கனிதல் - பழுத்தல். கருக என்பது கருகியெனத் திரிந்து நின்றது. என்னை,

 1`செயிர்த்தவள் சிவந்து நோக்கிச் சீறடி சென்னி சேர்த்தி
அயிர்ப்பதென் பணிசெய் வேனுக் கரளிற்றுப் பொருளதென்ன
உயிர்ப்பது மோம்பி யொன்று முரையலை யாகிமற்றிப்
பயிர்ப்பில்பூம் பள்ளி வைகு பகட்டெழின் மார்ப என்றாள்`

என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளில்,  `நோக்க` என்பது `நோக்கி`   எனத்   திரிந்து
நின்றதுபோற் கொள்க. `மின்கொடியே` என்று பாடம் ஓதுவாரும் உளர்.  வறிதா -
இல்லாமையையுடையதாக.   வெற்பின்  என்று  பாடமோதி,  `இறைவா`   என்பது
முன்னிலை யெச்சமென்று பொருள் கூறுவாருமுளர்.
(56)    
தலைவன் சேறல்:
தலைவன் சேறல் என்பது,   பாங்கன்  சொற்படி தலைவன் குறியிடத்துப் போதல்.

 புறங்கூ ரிருட்கங்குல் போன்றக நண்பகல் போன்றபொங்கர்
நிறங்கூர் படைக்கண்ணி நின்றன ளேநிழ லைச்சுளித்து
மறங்கூர் களிற்றண்ணல் வாணன்தென் மாறையில் வாணுதலான்
அறங்கூர் மனத்தரு ளாநின்ற தாமென தாருயிரே.


1. சிந்தா. விமலை - 101.