பக்கம் எண் :

12கலிங்கத்துப்பரணி

பொய்த்துயில் நிலை கூறி விளித்தது

28.இத்துயில் மெய்த்துயிலே என்றுகு றித்திளைஞோர்
     இதுபுல விக்குமருந் தெனமனம் வைத்தடியில்
கைத்தலம் வைத்தலுமே பொய்த்துயில் கூர்நயனக்
    கடைதிற வாமடவீர் கடைதிற மின்திறன்.

    (பொ-நி) இளையோர்   "மெய்த்துயிலே"   என்று  குறித்து,  மனம்
வைத்து,    கைத்தலம்    வைத்தலும்,  நயனக்கடை    திறவா   மடவீர்
திறமின்; (எ-று)

    (வி-ம்.)துயில் - தூக்கம்.  மெய்த்துயில் - உண்மையான  உறக்கம்.
குறித்து-நினைத்து. இது-அடியிற் கைத்தலம் வைத்தல். புலவி-ஊடல். மனம்
வைத்து-எண்ணி. அடி-பாதம். கைத்தலம் வைத்தல்-கைவைத்துப் பிடித்தல்.
பொய்த்துயில்   கூர்  -   பொய்யுறக்கங்  கொள்கின்ற.   நயனம் - கண்.
மெய்த்துயிலே  என்று  கருதிப்  புலவி தீர்க்கப் பாதத்தைக் கையால் வலி
தீர்ப்பான்  போல்  பிடித்தான் என்க. அடியில் என்பதற்கு வேறு பொருள்
கூறுவாரும் உளர். (8)

                 
கனவுநிலை கூறி விளித்தது

29.இகலி ழந்தரசர் தொழவ ருப்பவனி
     இரவு கந்தருளு கனவினில்
பகலி ழந்தநிறை பெறமு யன்றுமொழி
   பதறு வீர்கடைகள் திறமினோ.

     (பொ-நி) பகல் பவனி(யில்) இழந்த நிறைபெற முயன்று, இரவு
கனவினில் மொழி பதறுவீர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.) இகல்-வலி. பவனி-உலாவில். உகந்தருளும்-விரும்பிக்காணும். பகல்-பகற்பொழுதில். பதறுதல்-துடிப்புறுதல்; நிறை-மனத்தை நிலைதிரியாமல் நிறுத்தல்; மொழி பதறுவீர்-புணர்ந்து மொழி பதறுவீர் என்க. பகலில்
நிறையழிந்தும் இரவில் கனவில் புணர்ந்தும் இருந்தனர் என்க. (9)

பற்குறியணி கூறி விளித்தது

30. முத்து வடஞ்சேர் முகிழ்முலைமேல்
     முயங்குங் கொழுநர் மணிச்செவ்வாய்
வைத்த பவள வடம்புனைவீர்
   மணிப்பொற் கபாடம் திறமினோ.