பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

21

15. வான்எரி அறல்கால் மண்எனப் பகுக்க
        வரும்பெரும் பூதமோர் ஐந்தும்
    ஆனமுக் குணமும் கரணமோர் நான்கும்
        அனைத்துமாய் ஆதிஈ றின்றி
    ஊனுறை உடலுக்(கு) உயிருமாய் உயிருக்(கு)
        உணர்வுமாய் ஒன்றினும் தோயா
    ஞானநா யகனே! கருவையம் பரனே!
        நானறிந்(து) உரைக்குமா(று) எவனோ!

    ஆகாயமெனவும் தீயெனவும் நீரெனவும் காற்றெனவும் மண்ணெனவும் பகுக்கப்பட்டு வராநின்ற பெரிய பூதங்கள் ஐந்தும் அமைந்த முக்குணங்களும் அந்தக் கரணங்கள் நான்கும் இவை முதலிய யாவுமாய், தனக்கொரு முதலும் ஈறு மில்லாமல், தசையால் நிலைபெற்ற உடம்புக்கு ஓருயிருமாய், அவ்வுயிருக்கோர் உணர்ச்சியுமாய், (உடனாய் நின்ற அப்பொருள்கள்) ஒன்றினுந் தோய்வின்றி நின்ற ஞானவடிவாகிய இறைவனே!  திருக்கருவையி லெழுந்தருளிய பெருமானே!  நான் உன்னை உணர்ந்து துதிக்கும் வகை எவ்வாறு? (அறியேன்.)

    வான்-ஆகாயம். எரி-நெருப்பு. அறல்-நீர். கால்-காற்று. கரணம் நான்காவன : மனம், புத்தி, சித்தம், அகங்காரம். ஈறு-முடிவு. ஊன் உறை உடல்-மாமிசம் தங்கிய உடல்.

    உலகம், உடல், உயிர், குணம், உணர்வு முதலிய அனைத்தும் தானேயாகியும் தான் அவற்றிற்கு வேறாகி நிற்கும் இறைவனதியல்பு தோன்ற ‘ அனைத்துமாய் ’ என்றும், ‘ஒன்றினும் தோயா’ என்றும் கூறினார். ‘எல்லாமா யல்லவுமாய்’ என்றார் பிறரும். ஒருபொருள் பிறிதொன்றனோடு ஒன்று கலந்திருக்கும், அன்றேற் பிரிந்திருக்கும். எளிதுணரற் பாலதாகிய இவ்வியல்பின் மாறி, ஒன்றே பிறிதொன்றனோடு கலந்தும் கலவாமலுமிருக்கும் தன்மை உணர்தற்கரிதாகலின் ‘அறிந்து உரைக்குமாறு எவனோ’ என்றார்.

(15)