பக்கம் எண் :

180

     (கு - ரை) தேவருக்கும் மற்றுமுள்ளோர்க்கும் பிற புதுமலர்த் தேனும்
குறிஞ்சிப் பூத்தேனும் ஈட்டி வைத்திருப்பது கொல்லி மலையாம்.

     தேனில் கொல்லிமலைத் தேன் சிறந்தது என்பர். 'கொல்லி
மலைத்தேன் சொரியும் கொற்றவா' என்பது கம்பர் வாக்கு. பன்னீராண்டுக்
கொருமுறை மலரும் குறிஞ்சிப் பூத்தேனும் அம்மலையிலுண்டு.

"கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
 பெருந் தேனிழைக்கு நாடனொடு நட்பே"

                              (குறுந்தொகை 3)

     சமைத்த மீன்துள்ளிவிளையாடியது கொல்லிமலை

(53)



அச்சுதன் கொங்கி லறப்பள்ளி நாதரை யாற்றிலுறை
பச்சைநள் மீனைப் பிடித்தறுத் தாக்கப் பசுந்துருக்கர்
கச்சணி கொங்கை யறச்சாலை வல்லை கயல்குதிக்க
மச்சமுந் துள்ளி விளையாடு மேகொங்கு மண்டலமே.

     (கு - ரை) கொங்குநாட்டில் உள்ள கொல்லிமலையில்
அறப்பள்ளி நாதர் என்னும் சிவபெருமான் கோவில் உள்ளது.
அக்கோவிலின் வடபுறத்தில் ஐயாறு என்னும் ஆறு ஓடுகின்றது.
அதில் அழகான பலநிற மீன்கள் உண்டு. அறப்பள்ளிநாதர் மீன்
வடிவாக ஐயாற்றில் விளங்குகிறார் என்பது பழைய ஐதீகம்.
அம்மீன்களுக்குச் சோறு, பழம், தேங்காய், அரிசி முதலியவைகளை
அவ்வாற்றில் விட்ட பின்னரே அறப்பள்ளிநாதருக்குப் பூசை முதலியன
நடைபெறும். யாரும் அம்மீன்களைப் பிடிக்க மாட்டார்கள்.

     முன்பொரு காலத்தில் அறப்பள்ளிநாதர் கோவிலில் கொள்ளை
அடிக்க வந்த முகமதியர் சிலர் ஐயாற்றிலுள்ள மீன்களைப் பிடித்துச்
சமைத்தார்கள். அத்தலத்து அம்பிகையாகிய அறச்சாலை வல்லி என்னுந்
தாயம்மையின் கடைக்கண் பார்வை அம்மீன்களின் மேற்செல்லவும்
சமைத்த மீன்களெல்லாம் உயிர்பெற்றுத் துள்ளிக்குதித்து விளையாடி
ஆற்றினுள் ஓடிவிட்டன.