பக்கம் எண் :

36

வேடமாகக் கொங்கு நாட்டிற் புகுந்து ஊர் ஊராய்த் திரிந்து வாழ்ந்தான்.
உறையூரில் சோழசிங்காதனமேறத் தக்காரைத் தேடி வரும்படி, அக்கால
வழக்குப்படி பட்டத்து யானையை விடுக்கத் தீர்மானித்தார்கள்.
கழுமலத்திலிருந்த யானையைக் கட்டவிழ்த்து விட்டார்கள். அது கருவூர்ச்
சென்று அங்கு நின்ற இளைஞனான கரிகாலனைத் தன் பிடரி மீது
தூக்கிவைத்துக் கொண்டுவந்து அரசியற்கு உரிமையாக்கியது. தாயத்தார்
இவனைச் சிறைக்குள்ளாக்கினர். அச் சிறைக்கூடத்திற் தீயிட்டார்கள்.
அந்நெருப்பையும் மதிலையும் பொருட்படுத்தாது கடந்து வெளிப்போந்தனன்.
தன் மாமன் இருப்பிடர்த் தலையாரின் அருந்துணைபெற்று பகைவென்று
அரசுரிமை பெற்றனன்.

     சிறைக் கூடத்து நெருப்புற்றபொழுது அந்நெருப்பாற் கருகிய
காலைப்பெற்ற வனாதலின் * கரிகாலன் எனப் பெயர் பெற்றான் என்பர்.

                  (மேற்)

கழுமலத்தில் யாத்த களிறுங் கருவூர்
விழுமியோன் மேற்சென் றதனால்

                          (பழமொழி)

சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும்
பிடர்த்தலைப் பேரானைப் பெற்று - கடைக்கால்
செயிரறு செங்கோல் செலீஇனான் இல்லை
உயிருடையா ரெய்தா வினை

                          (பழமொழி)

முச்சக் கரமு மளப்பதற்கு நீட்டியகால்
இச்சகக் கரமே அளந்தால் - செச்செய்
அரிகான் மேற்றென் றெடுக்கு மாய்புன னீர்நாடன்
கரிகாலன் கானெருப் புற்று,

                          (பொருநராற்றுப்படை)

விண்ணுளார் மறைகள் வேதம் விரித் தோதுவார்
கண்ணுளார் கழலின் வெல்வார் கரிகாலனை
நண்ணுவார் எழில்கொள் கச்சிநக ரேகம்பத்
தண்ணலா ராடுகின்ற வலங்காரமே.
                     (திருஞான - தே - திருக்கச்சியேகம்பம்)



  * இக்காரிகாலன் கிறிஸ்துவுக்குமுன் முதல் நூற்றாண்டிலிருந்தவன்
    அதாவது இன்றைக்கு 2000 ஆண்டிற்குமுன்னவன் என்று
    ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.