பக்கம் எண் :

50

     வரலாறு : பழனி என்று இப்பொழுது வழங்குகின்ற வையாபுரி
என்னும் நகரத்தில் பேகன் என்னும் வள்ளல் வாழ்ந்தனன். இவன் வேளிர்
தலைவரில் ஒருவனான ஆவியர் குடியிலுதித்தவனாதலின் வையாவிக்கோப்
பெரும்பேகன் எனவும் வழங்குவர். கடைச் சங்க காலத்திருந்த கடையெழு
வள்ளல்களில் இவனும் ஒருவன். இவன் ஒருநாள் மலை வழியே செல்லும்
பொழுது அங்கு சிறகை விரித்து ஆடிக் கொண்டிருக்கும் மயிலைக் கண்டு,
குளிருக்கு ஆற்றாது வருந்துகிறதெனச் சித்தித்துத் தான் போர்த்திருந்த
போர்வையை அதன்மேற் போர்த்தினான் என்று அவன் கொடை மடத்தைப்
பற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள். கண்ணகி என்ற கற்புடை நங்கையோடு கூடி
இல்லறம் நடத்தும் பொழுது பரத்தையர் வலையுட்சிக்கி
மயக்கமுற்றிருந்தனன். இதனையறிந்த கபிலரும், அரிசில் கிழாரும்,
பெருங்குன்றூர்க்கிழாரும் பேகனைக் கண்டு நாங்கள் பரிசில் பெற
உன்னைப்பாடி வரவில்லை. மனத்துயர் கொண்டு தனித்து வாழும்உன்
மனைக்கிழத்தியாருடன் கூடிவாழ வேண்டுமென்று பாடினோ மென்றார்கள்.
அவ்வாறே கூடிவாழ்ந்தனன். இவன் வாழ்ந்த நாட்டிற்கு வையாபுரி நாடு
என்று பெயர் வழங்கியது போலும்.

                   (மேற்)

உடாஅ போரா ஆகுத லறிந்தும்
படாஅ மஞ்ஞைக் கீத்த எங்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்!

                              (பரணர் - புறம்)

மடத்தகை மாமயில் பனிக்கு மென்றருளிப்
படாஅ மீத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக!

                              (வன்பரணர் - புறம்)

வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்
கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய
அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்
பெருங்கன் னாடன் பேகன்

                              (சிறுபாணாற்றுப்படை)

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத் - தொல்லை
இரவாம லீந்த இறைவர்போ னீயுங்
கரவாம லீகை கடன் - (ஐயனாரிதனார்).