பக்கம் எண் :

78

      (க-ரை) கீழ்ப்படிதலில்லாத கம்பணனென்பவனைப் போர் முகத்தில்
வென்ற வலியோனைச் சோழ வேந்தன் பார்த்து, சுரிகை யென்னும் ஆயுத
வித்தையில் வல்ல அகளங்கச் சோழன் என்னும் பட்டப் பெயர் கொடுக்கப்
பெற்ற ராசிபுரத் தலைவனுங் கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு : இராசிபுரத்தில் கொங்கு வேளாளர்களில் விழிய குலத்தில்
தித்தன் எனப்பெயர் கொண்ட ஒரு வாலிபன் வீரத்தைப் பெற்றவனாக
இருந்தான். போர் வீரனாக எண்ணிச் சோழனிடத்துச் சேர்ந்தான்.
அப்பொழுது காஞ்சிபுரப் பிரதேசத்துக்குக் கதிபதியாகக் கம்பணன் என்பவன்
ஆண்டு வந்தான். அவன் சேனாபலமுள்ளவன். சோழனுக்கு அடங்காது மீறி
வருவதானான். அரசன் சேனைத் தலைவர்களைப் பார்த்துக் கம்பணனை
முதுகிடச் செய்ய வல்லாரிங்கிருக்கிறார்களா? எனவே, சாமானிய வீரனாகிய
தித்தன் எளியேன் அது செய்ய வல்லேன் எனத் தைரியமாகச் சொன்னான்.
சேனாபதிப் பதவி கொடுத்து வேண்டும் படைகளும் உதவினன். வெற்றி
கொண்டு வந்தான். இதனால் அகளங்கச் சோழன் என்றும் சுரிகை ஆயுதப்
போரில் வல்லனாதலின் சுரிகை முனைவல்லான் என்றும் விருதுப் பெயரும்
புலிக் கொடியும், ஆத்திமாலையும் ராசிபுர நாட்டதிகாரத்தையுங்
கொடுத்தனுப்பினன் பின்பு எதிர்த்த வேட்டுவரையும் வென்று கீர்த்திமானாக
வாழ்ந்தான். இச்சரித விரிவு இராசிபுரத்தார் மெய்க்கீர்த்தி நூலிலுங்
இராசிபுரக் குறவஞ்சியிலுங் காணலாம்.

     மேற்கூறிய கம்பணன் (கம்பண உடையாரானவன்) காஞ்சிபுர ராஜ
சிம்மேசுர சுவாமி கோவிலுள்ள சாசனத்திற் குறிக்கப்பட்டிருக்கிறான்.

     "ஸ்ரீ கம்பண உடையார் பிரதிவிராச்சிய பரிபாலனம் பண்ணியருளா
நின்ற சகாப்தம் ஆயிரத்து இருநூற்று எண்பத்து ஆறின் மேற் செல்லா
நின்ற விசுவாவசு வருஷம்" எனக்கண்டிருக்கிறது. இவர் விஜய நகர
அரசரால் அனுப்பப்பட்டுத் தென்னாட்டைச் சயித்து பிரதிநிதியாக
ஆண்டவர் கி.பி. 1372. இல் மதுரை நோக்கிப் படையெடுத்துத்
துலுக்கர்களை வென்றவர் என மதுரை நாடு பாகம் 3 பக்கம் 82-ல்
மிஸ்டர் நெல்ஸன் எழுதியிருக்கிறார்.

     அகளங்கப் பட்டன் எனுங்குடிப் பெயரொடு இராசிபுரம் நாட்டுப்
புலவர்கள் இருக்கிறார்கள்.