பக்கம் எண் :

82

     ஒடுவங்க நாட்டின் 16 ஊர்களுள் ஒன்று சத்தியமங்கலம். அது ஒரு
தாலூகாவாக இருந்து இப்பொழுது கோபிசெட்டி பாளையம் தாலூகாவைச்
சேர்ந்துள்ளது. அன்றி காவேரி தீரத்துள்ள சத்தியகால் என நினைப்பாரு
முளர்.

                    இளங்கோவடிகள்

61.உளங்கோ துறாம லொழுகுசெங் குட்டுவற் கோர்துணையாம்
இளங்கோ வடிக ளியற்றிய காப்பியத் தேவமுதங்
கொளுங்கோன் மதுவெனக் கூறுசெங் கோட்டுவேற் குமரனமர்
வளங்கோ னிடாதசெங்கோடு வளர்கொங்கு மண்டலமே.

     (க-ரை) மனச்சான்றுக்கு வழுவிலாது நடக்கும் சேரன் செங்
குட்டுவனது ஒப்பற்ற துணைவனான இளங்கோவடிகள் இயற்றிய,
சிலப்பதிகாரமென்னும் காப்பியத்துள், சொல்லியருளிய செங்கோட்டு
வேலன் வீற்றிருந்தருளுந் திருச்செங்கோடு என்னுந் திருப்பதியுங்
கொங்கு மண்டலம் என்பதாம்.

     விவரம் :- சேரநாட்டில் வஞ்சி நகரத்தையாண்ட நெடுஞ்
சேரலாதன் புத்திரனும் கண்ணகிக்கு வெண்சிலை கொணர்ந்து
பிரதிட்டித்துப் பூசித்தவனும், கொங்கர் செங்களம் வேட்டானுமான
சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோ. முடிசூடி நாடாளு முன்னோர்
உளனாதலின், இவன் இளவரச னெனப்பட்டான். துறவு அடைந்தபின்
இவருக்கு இளங்கோவடிகள் எனப்பெயர் வந்தது. கூலவாணிபன் சாத்தன்
அல்லது சீத்தலைச் சாத்தனார் கேட்ப சிலப்பதிகார நூலியற்றினர். அந்தச்
சிலப்பதிகாரங் குன்றக் குரவையில் செங்கோட்டு வேலரைக் குறித்துப்
போற்றிப் புகழ்ந்துள்ளார். இவர் காலம் ஏறக்குறைய 1760-க்கு
மேலிருக்கலாம் எனக் கணிக்கிறார்கள்.

        சிலப்பதிகாரம் - குன்றக்குரவை - பாட்டுமடை.

                      (மேற்)

சீர்கெழு செந்திலுஞ் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா விறைவன் கைவேலன்றே
பாரிரும் பௌவத்தி னுள்புக்குப் பண்டொருநாட்
சூர்மா தடிந்த சுடரி லைய வெள்வேலே.