பக்கம் எண் :

84

     (க-ரை) பருவகாலத்து இடியோடு கூடிய மழைபெய்வதால் நெல்லுங்
கரும்புஞ் செழித்து வளருகின்ற வளத்ததான சித்தன் வாழ்வு* என்னும்
திருவாவினன் குடிப்பதியில், வீடுகள் தோறும் மூன்று அக்கினி** மாறாது
இருக்கிறது என ஒளவை கூறியதுங் கொங்கு மண்டலமென்பதாம்.

     வரலாறு :- ஒளவைப் பிராட்டியாரைத் தமிழ் நாட்டில் கேளாதார்
ஒருவருமிரார். இவர் சோழமண்டலம் உறையூரில் ஆதி - பகவன்
என்னுமிருவர்களைத் தாய் தந்தையாகக் கொண்டு வந்தவர். கபிலர் -
அதிகமான் - வள்ளியம்மை உறுவை - வள்ளுவர் - உப்பை என்னும்
ஆறு சகோதரர்களை உடையவன். கிழவுருவத்துடன் வாழ்ந்தவராதலின்
ஒளவையாரெனப் பெயர் பெற்றனர். பாண வமிசத்தாரால்
வளர்க்கப்பட்டவராம். தமிழ் நாட்டு மூவேந்தர்களிடத்தன்றி அக்காலத்துள்ள
வள்ளல்களிடத்துஞ் சென்று பாடி மகிழ்வித்தவர். கல்விச்செருக்கற்றவர்.
தாராள மனமுற்றவர். நீண்ட ஆயுளைத் தரவல்ல அருநெல்லிக்கனியை
அதிகமான் உதவ உண்டு வாழ்ந்தவர். சேரமான் பெருமாளுடன் கைலை
சென்றவரென்பர். ஒரு நாள் பாண்டியன், ஒளவையாரை நோக்கி அம்மே!
நம் தமிழ் வழங்கு நாட்டில் அங்கங்கு என்ன பெருமை இருக்கிறது
எனக்கேட்ட பொழுது,

நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன்வாழ்
வில்லந் தொறுமூன் றெரியுடைத்து - நல்லரவப்
பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின்
நாட்டுடைத்து நல்ல தமிழ்.

எனக் கூறினர் என்பர்.

     தஞ்சாவூர் ஜில்லாவில் வளவனாற்றின் கீழ்க்கரையில்
திருவிடம்பாவனம் என்ற ஊருக்குக் கீழ்த்திசையில் துளசியார்பட்டி என்ற
ஊரில் ஒளவையார் கோயிலிருக்கிறது. அதில் உடல் திரைந்த விருத்த
வடிவான ஒளவையார் விக்கிரகமிருக்கிறது. அதனை உப்பை யென்கிறார்கள்.


   * சித்தன் வாழ்வு = பழனி. சித்தன் என்பது முருகக் கடவுளின் ஆயிரம்
     நாமத்துள் ஒன்று என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். ** முன்று
     அக்கினி - ஆகவேனீயம், காருகபத்யம், தக்கினாக்கிநேயம்.