பக்கம் எண் :

192நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

(க - து.) தமயந்தியின் சுயம்வர மணமாலை பெறாது திரும்பிச் செல்கின்ற இந்திரன் முதலிய தேவர்கள், உலக மக்களைத் தீயவழிகளிற் செல்லவிட்டு அலைக்கின்ற கலியென்பானை எதிரில் கண்டார்கள் என்பதாம்.

(வி - ரை.) வேலை - கடல் : போவதும் வருவதுமாகிய வேலையையுடையதாதலால், அதற்கு வேலையென்பது காரணப் பெயர். வேலை பெறு அமுதம் - கடலில் தேவர்களால் கடையப்பட்டு எடுத்த அமிழ்தம். அதை உண்டார்க்கு நரை திரை மூப்புப் பிணி சாவு நீக்கி என்றும் இன்பந்தருவது; அதைப் போன்று இவளை அடையும் பேறுபெற்றாற்கு அவை யெல்லாம் நீங்கப் பெற்று அவள் தன் ஒவ்வோர் உறுப்பும் பேரின்பம் தந்து நிற்றலின், ‘அமுதம்’ என்றார். அவ்வமிழ்தம் கடலில் தோன்றியது ; இவ்வமிழ்தம் அதில் தோன்றாதது ; அது, பேருழைப்பின் பயனாகக் கிட்டியது ; இஃது அவ்வாறின்றி எளிதிற்கிட்டியது. அது தேவர்கள் எல்லார்க்கும் உரியது; இது, மண்ணுலக மன்னன் ஒருவற்கே உரியது ; அஃது, அஃறிணை ; இஃது உயர்திணை ; அஃது அறிவில்லது ; இஃது அஃதுளது என்பனபோன்ற வேறுபாடுகள் உளதாகலான், அவ்வேறுபாடு குறித்தற்கு, ‘வேலைபெறா’ என்ற அடை கொடுத்தார். இவ்வாறே,

1‘மலையிடைப் பிறவா மணியே என்கோ
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ
யாழிடைப் பிறவா இசையே என்கோ
தாழிருங் கூந்தல் தையால்’

எனக், கோவலன் கண்ணகியாரைப் பாராட்டிக் கூறியதாக இளங்கோ சிலம்பிற் கூறுவனவும் இக்கருத்தோ டொப்பவைத்து மகிழற்பாலன. இதனால் தமயந்தியின் அழகு நலத்தைக் கூறியவாறாம். அமிழ்தம் உயிர்க்கு இன்பூட்டு மென்பதனை,

2‘உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்
கமழ்தின் இயன்றன தோள்’

எனத் திருவள்ளுவர் தந்த காதலன் கூறுவதும் தெளிக.

3‘தாயிற் சிறந்தாரைச் சாரும் புயங்கேசன்
வாயிற் பெறாதஇள மாணிக்கம் - நாயனார்

1. சிலப்பதி, 2 : 77-80. 2. திருக்குறள் : 1106.

3. திருக்காளத்தி நாதருலா.