பக்கம் எண் :

மூலமும் உரையும்5

மால் நரசிங்க அவதாரங்கொண்டு தூணிலிருந்து வெளித்தோன்றிப் பிரகலாதன் தந்தை இரணியனை அழித்தானென்பதும் கதை. வேழம்-யானை. கசேந்திரனென்னும் யானையை முதலை நீரிலிருந்து பிடித்திழுக்க, அது, அஞ்சி ‘ஆதிமூலமே’ என அழைக்க, அதைக்காக்க முன்வந்து நின்றான் என்பதும் அக்கதை. இவ்வளவு அரும் பெருஞ் செயலை மேற்கொண்டு பெருமானே, எமக்கு நலம்செய்ய முன்னின்றருள்வான் என்னும் குறிப்பினால், ‘எங்கட்கு இறை’ என்றார். வேதவிழுப்பொருளாய், வேதத்தில் முதன்மையாகக் குறிக்கக்கூடியவனாய் உள்ளவன் என்பது மறைகளின் முடிபு. ஆதலால் ‘வேதத்தின் முன் நின்றான்’ என்றார்.

ஆனான், தோன்றினான், நின்றான், என்றான் என்பன இறந்தகால வினையாலணையும் பெயர்கள். இவை, எழுவாயாய் வந்த இறையென்னும் பெயர்ப்பயனிலை கொண்டு முடிந்தன. அன்றி ஒரு பெயர்க்குப் பல பயனிலையாக வந்ததெனலுமாம்.

இந்நூலாசிரியர் ஆன்றோர்கொண்ட முறைப்படி முதலில் பிள்ளையாருக்கு இந்நூற்குத் தடையுண்டாகாமற் காக்குமாறு வணக்கங்கூறிப், பின்னர்க் காத்தற்கடவுள் திருமாலாதலால் அவரை வழிபட்டு வாழ்த்துமுன் ‘தொண்டர்தம் பெருமை சொல்லவும் எளிதோ?’ என்பவாகலின் நம்மாழ்வார் வணக்கமும் கூறினார். (3)

சிவபெருமான்

4. கலாப 1மயிலிருந்த பாகத்தார் கங்கை
உலாவு சடைமேல் உறையும் - நிலாவை
வழியவார்த் தாலன்ன மாநீற்றார் நாகம்
கழியவார்த் தார்நமக்கோர் காப்பு.

(இ - ள்.) கலாபம் மயில் இருந்த பாகத்தார் - தோகையுடைய மயிலையொத்த சாயலுள்ள உமையம்மை அமர்ந்திருக்கின்ற இடப்பாகத்தையுடையாரும், கங்கை உலாவு சடைமேல் - கங்கைநீர் பாய்கின்ற சடைமுடிமீது, உறையும் நிலாவை - இருக்கின்ற நிலவின் ஒளிக்கதிரை, வழிய வார்த்தால் அன்ன மா நீற்றார் - பரந்து தம் உடல் எங்கும் வழியுமாறு தெளித்தாற்போன்ற திருவெண்ணீறணிந்தவரும், நாகம் கழிய ஆர்த்தார் நமக்கு ஓர் காப்பு - நாகப்பாம்புகளை மிகுதியாக அணிந்தவருமாகிய சிவபெருமான் நமக்கு ஒப்பில்லாத காவற்கடவுளாவர்.

--------------------------------------
(பாடம்) 1. மயிலுகந்த.