பக்கம் எண் :

10

      இறைவன்  நமக்குச்  செய்த  நன்மைக்கு அதனை  நினைந்து
வணங்குவதன்றிக் கைம்மாறு செய்ய நம்மால் இயலாது என்பது கருத்து.

         3. இட்டபடியே

அட்டதிசை எங்கணும்போய் அலைந்தாலும்      பாதாளம் அதிற்சென் றாலும்
பட்டம்என வானூடு பறந்தாலும்
     என்ன? அதிற் பயன்உண் டாமோ?
பிட்டுவர மண்சுமந்த தண்டலையா
     ரே! முன்னாள் பெரியோர் கையில்
இட்டபடி யேயொழிய வேறாசைப்
     படின்வருவ தில்லை தானே.

      (தொ-ரை.) பிட்டுவர மண்சுமந்த தண்டலையாரே - பிட்டை விரும்பி
மண்ணைச்  சுமந்த  தண்டலையிறைவரே!,  முன்நாள்  பெரியோர் கையில்
இட்டபடியே ஒழிய வேறு ஆசைப்படின் வருவது இல்லை - முற்காலத்திற்
பெரியோர்களின்  கையிலே  கொடுத்தவாறே தவிர  மற்றொருவகையாக
ஆசைப்பட்டால் ஒன்றும் வராது. (ஆகையால்), அட்டதிசை எங்கணும்போய்
அலைந்தாலும் - எட்டுத் திக்கினும் எங்கும் சென்று திரிந்து உழைத்தாலும்.
பாதாளம் அதில் சென்றாலும் - பாதாளத்திலே சென்று தேடினாலும், வானூடு
பட்டம் எனப் பறந்தாலும் - வானத்திலே காற்றாடி போலப் பறந்து
திரிந்தாலும், என்ன அதில் பயன்தான் உண்டோ - என்ன கிடைக்கும்?
அவ்வாறு அலைவதனாற் பயனுண்டாகாது.

      (வி-ரை.) தான், ஏ : அரைச்  சொற்கள்.  உண்டாமோ? : ஓ :
எதிர்மறையிடைச்  சொல். இட்டபடியே : ஏ : பிரிநிலை  இடைச்சொல்.

‘ஐங்காதம் போனாலும் தன்பாவம்  தன்னோடு'
 என்பது  பழமொழி.
பிட்டுக்கு மண் சுமந்தது மதுரையில், வந்தியான ஒரு பிட்டு வாணிச்சிக்காக,
சோமசுந்தரக் கடவுள் கூலியாள் போல் வந்து உதிரும் பிட்டைக் கூலியாக
விரும்பிப் பெற்று மண் சுமந்தார் என்று திருவிளையாடல் கூறும்.

      பேராசைகொண்டு அலைவதாற் பயனில்லை என்பது கருத்து.