பக்கம் எண் :

100

1பிற பாடல்கள்

     1. வம்பருக்குத் தலைமை

வம்பரெல்லாம் ஆதிக்கம் மிகுந்திருந்தால்
     என்ன? அதுமாறி ஓய்ந்த
பம்பரமாய் மூலையினிற் கிடந்திட்டால்
     என்ன? அதிற் பலன்உண் டாமோ?
கம்புலவும் தண்டலையார் வளநாட்டில்
     வருந்துபல கழுதை தாமும்
அம்புவியிற் கிடந்தென்ன? பாதாளந்
     தனிற்கிடந்தென் ஆகுந் தானே?

      (தொ-ரை.) கம்பு உலவும் தண்டலையார் வளநாட்டில் - சங்குகள்
உலவும் நீர்வளம் பொருந்திய தண்டலையாரின் நாட்டிலே, வருந்து பல
கழுதை தாமும் அம்புவியிற் கிடந்து என்ன - (திறனற்று) வருந்துகின்ற பல
கழுதைகள் உலகிலே இருப்பதால் என்ன பயன்?, பாதாளந்தனில் கிடந்து என்
ஆகும் - பாதாளத்திலே கிடந்தால் மட்டும் என்ன கெட்டுவிடும்? (ஆகையால்),
வம்பர் எல்லாம் ஆதிக்கம் மிகுந்திருந்தால் என்ன - வம்பர்களுக்கு எல்லா
வகையினும்  செல்வாக்கு  மிகுந்திருந்தால் என்ன? அது மாறி, ஓய்ந்த
பம்பரமாய் மூலையினிற் கிடந்திட்டால் என்ன - (அவை) ஆதிக்கங் கெட்டு
ஆடி யோய்ந்த பம்பரம்போல மூலையில்  முடங்கிக்  கிடந்தால் என்ன?,
அதின் பலன் உண்டாமோ - அதனால் ஏதாவது நலம் உண்டாமா?

      (வி-ரை) வம்பர் - வீணர். ‘ஆடியோய்ந்த பம்பரம்' மரபுத்
தொடர்மொழி.
__________________________________________________
     1 சில படிகளிலே மேலும் காணப்படும் தண்டலையார் சதகப்
பாடல்கள்.