4.
நன்மைசெய்தால் நலம் பெறுவர் தன்மமது
செயல்வேண்டும்; தண்டலைநீள் நெறியாரே தயவு செய்வார்! வன்மவினை செயல்வேண்டாம்;
பொய்வேண்டாம் பிறரையொன்றும் வருத்தல் வேண்டாம்; கன்மநெறி வரல்வேண்டாம்
: வேண்டுவது பலர்க்கும்உப காரம் ஆகும் : நன்மைசெய்தார் நலம்பெறுவர்! தீமைசெய்தார்
தீமைபெற்று நலிவர் தாமே. |
(தொ-ரை.)
நன்மை செய்தார் நலம் பெறுவர் - (பிறருக்கு) நலம்
புரிந்தவர் (தாமும்) நலம் அடைவர், தீமை செய்தார் தீமை பெற்று நலிவர்
- (பிறருக்குத்) தீமை செய்தவர் (தாமும்) தீமை அடைந்து வருந்துவர்,
(ஆகையால்) வன்மவினை செயல் வேண்டாம் - (உள்ளத்திலே) வஞ்சம்
வைத்திருந்து (பிறருக்குத்) தீங்கு செய்தல் கூடாது, பொய் வேண்டாம் -
பொய் பேசுதல் கூடாது, பிறரை ஒன்றும் வருத்தல் வேண்டாம் - மற்றோரைத்
துன்புறுத்தல் கூடாது, கன்மநெறி வரல் வேண்டாம் - தீவினை யீட்டும்
வழியிலே நடத்தல் கூடாது, பலர்க்கும் வேண்டுவது உபகாரம் ஆகும் -
யாவருக்கும் (செய்ய) வேண்டுவது நன்றியே ஆகும். (ஆகையால்) தன்மமது
செயல் வேண்டும் - அறத்தையே புரிதல் வேண்டும், (அவ்வாறு செய்தால்)
தண்டலை நீள் நெறியாரே தடவு செய்வார் - தண்டலை நீள் நெறியில்
எழுந்தருளிய இறைவரே அருள் புரிவார்.
(வி-ரை)
‘தினைவிதைத்தவன் தினையறுப்பான்; வினை
விதைத்தவன் வினையறுப்பான்' என்பது பழமொழி.
‘தண்டலை நீள்நெறி'
என்பது தண்டலை என்னும் திருப்பதியின் பெயராகும். ‘வேண்டா' என்பது
‘வேண்டாம்' என மருவியது.
பிறருக்கு
நலமே செய்தல் வேண்டும் என்பது கருத்து.
|