பக்கம் எண் :

12

     5. இல்லறமுந் துறவறமும்

புல்லறிவுக் கெட்டாத தண்டலையார்
     வளந்தழைத்த பொன்னி நாட்டில்,
சொல்லறமா தவம்புரியும் சௌபரியும்
     துறவறத்தைத் துறந்து மீண்டான்!
நல்லறமாம் வள்ளுவர்போற் குடிவாழ்க்கை
     மனைவியுடன் நடத்தி நின்றான்!
இல்லறமே பெரிதாகும்! துறவறமும்
     பழிப்பின்றேல் எழில தாமே!

      (தொ-ரை.) புல்  அறிவுக்கு  எட்டாத  தண்டலையார் வளம்
தழைத்த பொன்னி நாட்டில் - சிற்றறிவுக்குக் கிட்டாத தண்டலையாரின்
வளம்மிகுந்த  காவிரி (பாயும் சோழ)  நாட்டில், சொல்அற மாதவம்
புரியும் சௌபரியும் - பேச்சின்றிப்  பெருந்தவஞ்  செய்த  சௌபரி
என்பவனும்,துறவறத்தைத் துறந்து மீண்டான் - துறவறத்தை விட்டுத்
திரும்பினான், வள்ளுவர் போல  மனைவியுடன்  நல்லறம்  ஆம்
குடிவாழ்க்கை நடத்தி நின்றான் - திருவள்ளுவரைப்போல இல்லாளுடன்
நல்ல அறமாகிய குடிவாழ்க்கையை இனிதே கழித்தான். (ஆகையால்),
இல் அறமே பெரிது ஆகும் - மனையறமே சிறந்தது ஆகும், துறவு
அறமும் பழிப்பு இன்றேல் எழிலது ஆம் -துறவறமும் (பிறராற்) பழிக்கப்
படாமல் இருந்தால் அழகியதாகும்.

      (வி-ரை.) எழிலது : அது : பகுதிப் பொருள் விகுதி. ஏ :
ஈற்றசையிடைச் சொல்.

      ‘அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை; அஃதும்
      பிறன்பழிப்ப(து) இல்லாயின் நன்று'

என்னும் திருக்குறளின் பொருள் இங்கு வந்துள்ளது. ‘இல்லறம் அல்லது
நல்லறம் அன்று' என்பதும் நினக்கத் தக்கது.

      சௌபரி : ஒரு  முனிவர்;  வேதமித்திரரின்  மாணாக்கர்.
இவர் ஒருமுறை யமுனையாற்றில், தம் குஞ்சுகளினோடு உலவிய
மீன்களைக் கண்டு  இல்லறத்தில்  விருப்புற்றுத்  துறவறத்திலிருந்து
திரும்பி இல்லறத்தை அடைந்தார்.