பக்கம் எண் :

17

      கணமங்கையில் வாழ்ந்த அரிவாள்தாய நாயனார் தண்டலை
இறைவர்க்குச்  செங்கீரையும் மாவடுவும் (தாம் உணவின்றி யிளைத்தபோது
கூட) படைத்துப் பரன் அருள்பெற்றார்.

      நல்ல பொருளை இறைவனுக்கு அளிப்பர் என்பது கருத்து.

 

 9. விருந்தில்லாது உண்ணும் சோறு மருந்து

திருவிருந்த தண்டலையார் வளநாட்டில்
     இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர்
ஒருவிருந்தா யினுமின்றி உண்டபகல்
     பகலாமோ? உறவாய் வந்த
பெருவிருந்துக் குபசாரம் செய்தனுப்பி
     இன்னுமெங்கே பெரியோர் என்று
வருவிருந்தோ டுண்பதல்லால் விருந்தில்லா
     துணுஞ்சோறு மருந்து தானே.

      (தொ-ரை.) திரு இருந்த தண்டலையார் வளநாட்டில் இல்வாழ்க்கை
செலுத்தும் நல்லோர் - செல்வம் தங்கிய தண்டலைத் திருநகர் உள்ள செழித்த
நாட்டினில் இல்லறம் நடத்தும் பெரியோர்கள், ஒரு விருந்து ஆயினும் இன்றி
உண்ட பகல் பகலாமோ - ஒரு விருந்தினரேனும் இல்லாமல் உணவு கொண்ட
நாள் (ஒரு) நாளாகுமோ, உறவாய் வந்த பெரு விருந்துக்கு உபசாரம் செய்து
அனுப்பி - நட்புடன் வந்த பெரிய விருந்தினருக்கு முதலில் உணவளித்துக்
களைப்பாற்றிப் பேசி விடுத்த பின்னர், இன்னும் பெரியோர் எங்கே  என்று -
மேலும் வரக்கூடிய சான்றோர்கள் எங்கே என்று, வருவிருந்தோடு உண்பது
அல்லாமல் - வரும்  விருந்தினருடன்  உண்பது  அன்றி,  விருந்து இல்லாது
உணும் சோறு மருந்து  தானே - விருந்தினர்  இல்லாமல்  உண்பது மருந்து
போலத்தான் (கசப்பாக) இருக்கும்
.

      (வி-ரை.) ‘செல்விருந்(து)  ஓம்பி  வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு' - என்பது திருக்குறள். ‘மருந்தே யாயினும்
விருந்தோ டுண்'
என்றும் பெரியோர் கூறுவர்.

      ‘விருந் தில்லாத சோறு மருந்து' என்பது கருத்து.