பக்கம் எண் :

19

  11. எறும்பு எண்ணாயிரம்

குறும்பெண்ணா துயர்ந்தநல்லோர் ஆயிரஞ்சொன்
     னாலும்அதைக் குறிக்கொ ளாமல்
வெறும்பெண்ணா சையிற்சுழல்வேன் மெய்ஞ்ஞானம்
     பொருந்தியுனை வேண்டேன்! அந்தோ!
உறும்பெண்ணார் அமுதிடம்சேர் தண்டலைநீள்
     நெறியே! என் உண்மை தேரில்
‘எறும்பெண்ணா யிரம்அப்பா! கழுதையும்கை
     கடந்ததெனும்' எண்ணம் தானே!

      (தொ-ரை.) உறும் பெண்ணாள் அமுது இடம் சேர் தண்டலைநீள்
நெறியே - சிறந்த  பெண்களின்  அமுது  ஆகிய  உமையம்மையார்
இடப்பக்கத்தில் உள்ள தண்டலை நீள்நெறி நாதரே!, உயர்ந்த நல்லோர்
குறும்பு எண்ணாது ஆயிரம் சொன்னாலும் - சிறந்த நற்பண்புடையோர்
குறும்பாக நினையாமல் ஆயிரம் கூறினாலும், அதைக் குறிக்கொளாமல் -
அவர்கள் கூறுவதை மனத்திற் கொள்ளாமல், வெறும் பெண் ஆசையில்
சுழல்வேன் - வீணே  பெண்ணின்  காமத்தால் அலைவேன்,  உனை
மெய்ஞ்ஞானம் பொருந்தி வேண்டேன் - உன்னை  உண்மையறிவுடன்
வழிபடேன், அந்தோ -, என்  உண்மை தேரில் - என்  உண்மையான
நிலைமை  ஆராய்ந்தால், அப்பா! எறும்பு  எண்ணாயிரம்  கழுதையும்
கைகடந்தது  எனும்  எண்ணந்தான் - அப்பா  எறும்பு  எண்ணாயிரம்;
கழுதையும்  போய்விட்டது  என்போனுடை  எண்ணம்  போன்றதே.

      (வி-ரை.) பெண்ணார் அமுது - பெண்களிற் சிறந்தவர்; ‘பெண்ணின்
நல்லாள்'  என்று  குறிப்பதுங்  காண்க. கழுதையைப்  பார்த்துக்
கொண்டிருப்போன் எறும்பை எண்ணிக் கொண்டிருந்து கழுதையை விட்டு
விட்டாற்போலப் பெண்ணாசையிலே உள்ளத்தைச் செலுத்தி இறைவரை
வழிபடுவதைக் கைநெகிழ விட்டதாக வருந்துகிறார். ‘எறும்பெண்ணாயிரம்
அப்பால் கழுதையும் கைகடந்த தென்றோன் எண்ணந்தானே' என்றும் பாடம்.

      எவ்வகையினும் நம் வேலையே குறிக்கோளாகக் கொள்ளுதல்
வேண்டும் என்பது கருத்து.