பக்கம் எண் :

20

12. தினையளவு பனையளவாகும்!

துப்பிட்ட ஆலம்விதை சிறிதெனினும்
     பெரிதாகும் தோற்றம் போலச்
செப்பிட்ட தினையளவு செய்த நன்றி
     பனையளவாய்ச் சிறந்து தோன்றும்!
கொப்பிட்ட உமைபாகர் தண்டலையார்
     வளநாட்டிற் கொஞ்ச மேனும்
உப்பிட்ட பேர்கள்தமை உளவரையும்
     நினைக்கும் இந்த உலகந் தானே!

      (தொ-ரை) கொப்பு இட்ட உமைபாகர் தண்டலையார் வளநாட்டில்
- கொப்பு எனும் காதணியை அணிந்த  உமையம்மையை  இடப்பாகத்திற்
கொண்ட தண்டலை யிறைவரின் வளம் பொருந்திய நாட்டில், துப்பிட்ட
ஆலம்வித்து சிறிது எனினும் பெரிது ஆகும் தோற்றம் போல - துப்பிவிட்ட
ஆலம்வித்து  சிறியதாயினும்  பெரிய  மரம்  ஆகும்  காட்சியைப்  போல,
செப்பிட்ட தினை அளவு செய்த நன்றி பனை அளவாய்ச் சிறந்து தோன்றும்
- கூறப்பட்ட தினையின் அளவாகச் செய்த நன்மை (ஏற்கும் இடத்தால்)
பனையின் அளவாகச் சிறப்புடன் காணப்படும், இந்த உலகம் கொஞ்சமேனும்
உப்பிட்ட  பேர்கள்தமை  உளவரையும்  நினைக்கும் - இந்த  உலகம்
சிறிதளவாக  உப்பு  இட்டவரையும்  உயிருள்ள  வரையும்  நினைத்துப்
பார்க்கும்.

      (வி-ரை.) கொப்பு - ஒரு காதணி. ‘துப்பிவிட்ட' என்பது ‘துப்பிட்ட'
என  வந்தது;  செய்யுள் (தொகுத்தல்)  விகாரம்.  செப்பு : சொல்;
(தொல்காப்பியத்தில்)  விடை  என்னும்  பொருளில்  வந்துள்ளதால்  இது
தெலுங்கன்று. உலகம் : இடவாகு பெயர்.

     ‘தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
     கொள்வர் பயன்தெரி வார்.'

என்பது திருக்குறள். ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்பது
பழமொழி.