13. காட்டுக்கே
யெறித்த நிலா!
மேட்டுக்கே
விதைத்த விதை, வீணருக்கே
செய்த நன்றி, மேயும் பட்டி
மாட்டுக்கே கொடுத்தவிலை, பரத்தையர்க்கே
தேடியிட்ட வண்மை யெல்லாம்
பாட்டுக்கே அருள்புரியும் தண்டலையார்
வீதிதொறும் பரப்பி டாமல்
காட்டுக்கே யெறித்தநிலா, கானலுக்கே
பெய்தமழை கடுக்குந் தானே!
|
(தொ-ரை.)
மேட்டுக்கே விதைத்த விதை - மேட்டிலே தூவிய
விதையும், வீணருக்கே செய்த நன்றி - சோம்பேறி கட்குச் செய்த நன்மையும்,
மேயும் பட்டி மாட்டுக்கே கொடுத்த விலை - (பயிரையெல்லாம்) மேய்கின்ற
கட்டுக் கடங்காத மாட்டுக்குக் கொடுத்த விலையும், பரத்தையர்க்கே
தேடியிட்ட வண்மை - விலைமாதருக்கு உழைத்துக் கொடுத்த கொடையும்
(செல்வமும் எனவும் கூறலாம்), எல்லாம் - ஆகிய இவை, யாவும், காட்டுக்கே
எறித்த நிலா - காட்டிலே (ஒருவருக்கும் பயனின்றிப்) பரப்பிய நிலாவையும்,
கானலுக்கே பெய்த மழை - கடற்கரையிலே பெய்த மழையையும், கடுக்கும்
- ஒக்கும்.
(வி-ரை.)
மேட்டில் விதைத்த
விதை மழை பெய்தாலும் நீர்
பாய்ச்சினாலும் பள்ளத்திலே சென்று விழுந்துவிடும். கட்டுக்கடங்காத
மாட்டைப் பட்டிமாடு என்பது வழக்கம். ‘காட்டுக்கு
எறித்த நிலவும்
கானலுக்குப் பெய்த மழையும்' என்பது பழமொழி.
14.
கங்கையிலே படர்ந்தாலும்....
சங்கையறப் படித்தாலும் கேட்டாலும்
பிறர்க்குறுதி தனைச்சொன் னாலும்
அங்கண்உல கினிற் சிறியோர் தாமடங்கி
நடந்துகதி அடைய மாட்டார்!
|
|