பக்கம் எண் :

25

பறித்துரிய பொருள்முழுதும் கவர்ந்தாலும்
     அடித்தாலும் பழிசெய் தாலும்
பொறுத்தவரே அரசாள்வார்! பொங்கினவர்
     காடாளப் போவார் தாமே.

      (தொ-ரை.) கறுத்த விடம் உண்டு அருளும் தண்டலையார்
வளநாட்டில் - கரிய நஞ்சினையுண்டு உலகினுக்கருளிய தண்டலை யிறைவர்
செழித்த நாட்டிலே, மனையாள் அரையில் துகில் கடிய தீயோர் குறித்து
உரிந்தும் - தங்கள் மனைவியான துரௌபதியின் இடையிலிருந்த ஆடையை
மிகவும் கொடியரான கவுரவர் (இழிவு செய்ய) நினைத்து அவிழ்த்த
காலத்திலும், ஐவர் மனம் கோபித்தாரோ - பாண்டவர்கள் மனத்திலே சீற்றங்
கொண்டனரோ? (ஆகையால்),உரிய பொருள் முழுதும் பறித்துக் கவர்ந்தாலும்
அடித்தாலும் பழி செய்தாலும் - (தமக்கு) உரிமையான எல்லாப் பொருளையும்
வலிதில் எடுத்துக் கொண்டாலும் அடித்தாலும் இழிவு செய்தாலும்,
பொறுத்தவரே அரசு ஆள்வர் பொங்கினவர் காடு ஆளப் போவர் -
பொறுத்துக் கொண்டவரே உலகு காப்பர் : மனம் பொறாதவர் காட்டைக்
காக்கச் செல்வர்.

      (வி-ரை.) ‘பொறுத்தவர் பூமியாள்வார்; பொங்கினவர் காடாள்வார்'
என்பது பழமொழி. தாம் ஏ : ஈற்றசைகள். ‘காடுறைந்து' என்றும் பாடம்.
 

 

      18. பிள்ளை பெற்றார்தமைப் பார்த்து...

அள்ளித்தெண் ணீறணியும் தண்டலையார்
      வளநாட்டில் ஆண்மை யுள்ளோர்,
விள்ளுற்ற கல்வியுள்ளோர், செல்வமுள்ளோர்,
      அழகுடையோர் மேன்மை நோக்கி
உள்ளத்தில் அழன்றழன்று நமக்கில்லை
      எனவுரைத்திங் குழல்வார் எல்லாம்
பிள்ளைபெற் றவர்தமைப் பார்த் திருந்துபெரு
      மூச்செறியும் பெற்றி யாரே.