பக்கம் எண் :

3

                          பதிப்புரை

      நம் செந்தமிழ் மொழிக்கண் விளங்கும் தொண்ணூற்றாறுவகை நூல்
தொகுதிகளுள், சதக  வகையும் ஒன்றாம். இது கடவுளர்களையோ தாம்
குறிக்கோளாகக் கொண்ட ஏனையரையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு
பாடப் பெறுவதாகும். இம்முறையில் கடவுளரைத் தலைவராகக் கொண்ட சதக
வகைகளே வழக்கில் இருப்பனவாகும். அவை கடவுளரை வாழ்த்துவதாக
மட்டும் அமையாது மக்கள் உலகில் நன்னெறியறிந் தொழுகுதற்காம்
அறமுறைகளையும் நீதி நூல்கள் போல் உணர்த்துவனவாம்.

      இக் குறிக்கோளுடன் அமைந்தனவே குமரேச சதகம், அறப்பளீசுர
சதகம் போன்றவையும் இத்
தண்டலையார் சதக'மும் ஆகும். இதில்
பண்டுதொட்டு மக்கள் வாழ்வில் நிகழும் நிகழ்ச்சிகளை மக்கள் அறிவறிந்து
நடந்து நலம்பெற எளிய முறையில் வழங்கும் பழமொழிகளிற் சிலவற்றை
எடுத்து அதற்கொத்த அறமுறைகளை ஆசிரியர் கோத்துத் திறம்பட இனிய
எளிய மெல்லிய சொற்களால் அழகிய சதகமாக ஆக்கித் தந்துள்ளார்.

      இவ்வரிய நூலுக்குப் புலவர் திரு. அரசு அவர்களைக் கொண்டு
நல்லுரை எழுதுவித்து அழகிய முறையில் பதிப்பித்து வெளியிட்டுள்ளோம்.

      தமிழ் மாணவரும், கணக்காயரும், ஏனையரும், கற்றும் கற்பித்தும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து பெருந்திருவின ராவார்களென
நம்புகின்றோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.