பக்கம் எண் :

35

      (வி-ரை.) ஆகமம் : மறைவழிப்படும் நூல். ‘தன் உயிரைப் போல
மன் உயிரை நினை'
என்பது பழமொழி.
 

 

    28. குளிர்காய நேரம் இல்லை!

உருவெடுத்த நாள்முதலா ஒருசாணும்
   வளர்க்கஉடல் உழல்வ தல்லால்
மருவிருக்கும் நின்பாத மலர்தேடித்
   தினம்பணிய மாட்டேன்! அந்தோ!
1திருவிருக்கும் மணிமாடத் தண்டலைநீள்
   நெறியே! என் செய்தி யெல்லாம்
சருகரிக்க நேரமன்றிக் குளிர்காய
   நேரம்இல்லாத் தன்மை தானே!

      (தொ-ரை.) திரு  இருக்கும்  மணிமாடம்  தண்டலைநீள் நெறியே -
செல்வம்  நிலைத்த  மணிமாடங்கள்  நிறைந்த தண்டலையில் எழுந்தருளிய
நீள்நெறியாரே!, உரு எடுத்த நாள்  முதல்ஆ  ஒருசாணும்  வளர்க்க உடல்
உழல்வது அல்லால் - இவ் வுருவைத்  தாங்கிய  நாள்முதலாக  ஒருசாண்
வயிற்றைக்  காக்கவே  இவ்வுடம்பு  உழைப்பதன்றி,  மரு  இருக்கும்  நின்

பாதமலர்  தேடித்  தினம்  பணிய மாட்டேன் அந்தோ - மணங்கமழும்
தங்களுடைய திருவடி மலரை நாடி ஒவ்வொருநாளும் வணங்காமல் விட்டு
விட்டேன்! (என் செயலை என்னென்பேன்!) ஐயோ!, என் செய்தி எல்லாம் -
என் செய்கை யாவும், சருகு அரிக்க நேரம் அன்றிக் குளிர்காய நேரம்
இல்லாத் தன்மை தானே - (குளிரைப் போக்க எண்ணியவனுக்கு) சருகு
அரிக்க நேரமே யொழியக் குளிர்காய்வதற்கு நேரம் இல்லாத இயல்பு
போலும்!

      (வி-ரை.) ஒருசாண் : ஒருசாண் அளவுடைய வயிற்றைக் குறிப்பதால்
அளவையாகு பெயர். அந்தோ : இரக்கப் பொருளைக் குறிக்கும் இடைச்சொல்.

‘சருகு அரிக்க நேரமே ஒழியக் குளிர் காய நேரம் இல்லை'
என்பது
பழமொழி.
______________________________________________
1. ‘திருவிளக்கும்' என்றும் பாடம்.