பக்கம் எண் :

36

  29. உருத்திராக்கப் பூனை!

காதிலே திருவேடம்! கையிலே
   செபமாலை! கழுத்தின் மார்பின்
மீதிலே தாழ்வடங்கள்! மனத்திலே
   கரவடம்ஆம் வேடம் ஆமோ?
வாதிலே அயன்தேடும் தண்டலைநீள்
   நெறியாரே! மனிதர் காணும்
போதிலே மௌனம்! இராப் போதிலே
   ருத்திராக்கப் பூனை தானே!

      (தொ-ரை.) வாதிலே அயன்  தேடும்  தண்டலைநீள் நெறியாரே -
(திருமாலுக்கும் தனக்கும் நேர்ந்த) போட்டியிலே நான்முகன் தேடிய தண்டலை
நீள்நெறியிறைவரே!, காதிலே திருவேடம் - காதில் உருத்திராக்கம் அணிந்த
திருக்கோலமும், கையிலே செபமாலை - கையில் செபமாலையும், கழுத்தில்
மார்பின்  மீதில்  தாழ்வடங்கள் - கழுத்திலும் மார்பிலும்  உருத்திராக்கத்
தாழ்வடங்களும் (உடையராய்), மனத்திலே  கரவடம்ஆம் வேடம்  ஆமோ -
உள்ளத்திலே வஞ்சகம் ஆகிய தோற்றம் தகுமோ? (அவ்வாறிருத்தல்), மனிதர்
காணும்போதிலே மௌனம் இராப்போதிலே உருத்திராக்க்  பூனைதான் -
மக்கள்  பார்க்கும்போது  கண்மூடிப்  பேசாதிருந்து,  இரவிலே  திருடும்
உருத்திராக்கப் பூனையின் செயல் போன்றதாகும்.

      (வி-ரை.) "திருமாலும் நான்முகனும் தாமே பெரியவரெனத் தனித்தனிச்
செருக்கியபோது  சிவபெருமான்  இடையிலே  தீமலையாகத் தோன்றினர்.
அதனைக் கண்ட இருவரும் திகைத்துத் தம்மில் எவர் அதன் அடியையேனும்
முடியையேனும் காண்கின்றனரோ அவரே பெரியர் என முடிவு செய்து
திருமால் பன்றியாகி அடியையும் நான்முகன் அன்னமாகி முடியையும் தேடிக்
கண்டு பிடிக்க முடியாமல் திரும்பினர்", என்பது  புராணம்.  கரவடம் -
வஞ்சகம். உள்ளொன்றும் புறமொன்றுமாகத் திரிவோரை
‘உருத்திராக்கப்
பூனை'
என்பது மரபு.