பக்கம் எண் :

38

31. பொய் சொல்லி வாழ்வது இல்லை

கைசொல்லும் பனைகாட்டும் களிற்றுரியார்
     தண்டலையைக் காணார் போலப்
பொய்சொல்லும் வாயினர்க்குப் போசனமும்
     கிடையாது! பொருள்நில் லாது!
மைசொல்லும் கார் அளிசூழ் தாழைமலர்
     பொய்சொல்லி வாழ்ந்த துண்டோ?
மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி
     வாழ்வதில்லை! மெய்ம்மை தானே!

      (தொ-ரை.) சொல்லும்  பனைகாட்டும்  கைகளிற்று  உரியார்
தண்டலையைக்  காணார்போல -  புழப்படும்  பனையைக்  காண்பிக்கும்
துதிக்கையினையுடைய  யானையின்  தோலைப் போர்த்தவரான சிவபிரானின்
தண்டலையைக் காணாதவர்க்கு உணவு கிடையாததைப்போல, பொய்சொல்லும்
வாயினர்க்குப் போசனமும் கிடையாது - பொய் கூறும் வாயார்க்கு உணவும்
அகப்படாது,  பொருள்  நில்லாது - கைப்பொருளும் அழிந்துவிடும்,
மைசொல்லும் கார் அளிசூழ் தாழைமலர் பொய்சொல்லி வாழ்ந்தது உண்டோ
மேகம் சூழ்ந்ததென்று சொல்லுமாறு கரிய வண்டினம் சூழும் தாழைமலர்
பொய்கூறி  வாழ்வு  பெற்றதா? (ஆகையால்)  மெய்சொல்லி  வாழாதான்
பொய்சொல்லி  வாழ்வது  இல்லை - உண்மையுரைத்து  வாழமுடியாதவன்
பொய்யுரைத்தும் வாழப் போவதில்லை, மெய்ம்மைதான் - இஃது உண்மையே
ஆகும்.

      (வி-ரை.) பனைமரத்தைக் கண்டாற்போலக் காணப்படும் துதிக்கை.
‘சிவபிரான் கொண்டருளிய ஒளிமலை வடிவத்தின் அடியைத் திருமாலும்
முடியை  நான்முகனும்  காணச்  சென்ற போது,  தான்  கொண்ட
அன்னவுருவத்தின்  சிறகுகள்  உதிர்ந்தும் சோர்வு பெற்றும் மேலே
பறக்கமுடியாமல் நின்ற பிரமன் சிவபிரான் முடியினின்றும் விழுகின்ற
தாழைமலரைக் கண்டான். அது  சிவபிரான் முடியைப் பிரமன் கண்டதாக
அவன் வேண்டுகோளின்படி சிவபிரானிடம் பொய்ச்சான்று கூறியது. அன்று
முதல் அம் மலர் சிவபிரானுக்கு ஏற்றதன்றாயிற்று' என்பது புராணம்.