பக்கம் எண் :

40

33. கோடரிக் காம்பு?

கோடாமற் பெரியவர்பால் நடப்பதன்றிக்
    குற்றமுடன் குறைசெய் தோர்கள்
ஆடாகிக் கிடந்தஇடத் ததன்மயிரும்
    கிடவாமல் அழிந்து போவார்!
வீடாநற் கதியுதவும் தண்டலையா
    ரே! சொன்னேன் மெய்யோ? பொய்யோ?
கோடாலிக் காம்பேதன் குலத்தினுக்குக்
    கோடான கொள்கை தானே!

      (தொ-ரை.) வீடா நற்கதி உதவும் தண்டலையாரே - கெடாத  நல்ல
நிலையை  அருளும்  தண்டலை  யிறைவரே!, கோடாலிக்  காம்பே  தன்
குலத்தினுக்குக் கேடான கொள்கை மெய்யோ பொய்யோ - கோடரிக்குக்
காம்பு தன் குலத்துக்குக் கேடு என்று கூறும் வழக்கம் மெய்யோ! பொய்யோ?
(ஆகையால்), பெரியவர்பால் கோடாமல் நடப்பது அன்றிக் குற்றமுடன் குறை
செய்தோர்கள் - சான்றோரிடம் ஒழுங்காக நடந்து கொள்ளாமற் குற்றமும்
குறையும் செய்தவர்கள், ஆடுஆகிக் கிடந்த இடத்து அதன் மயிரும்
கிடவாமல் அழிந்தே போவார் - ஆடு வளர்ச்சியற்றுக் கிடந்த இடத்திலே
அதன் மயிரும் கிடக்காமல் அழிந்துவிடுவார்.

      (வி-ரை.) வீடாநற்கதி : பேரின்பம். வீடுதல் - கெடுதல். கோடு
அரிவது : கோடரி. அது கோடாலி என மருவியது. கோடரியின் காம்பு
மரத்தால் ஆனது. அந்தக் காம்பு சேரா விட்டாற் கோடரி மரத்தை வெட்டாது.
அவ்வாறே பெரியோரைப் பழிப்போர் அப் பெரியோரால் தம் குலத்துக்குக்
கேடு விளைவித்து அடியோடு அழிவர் என்பது தோன்ற ‘ஆடாகிக் கிடந்த
இடத்து அதன் மயிருங் கிடவாமல் அழிந்தே போவார்' எனக் கூறினார்.

‘ஆடு கிடந்த இடத்து அதன் மயிரும் கிடவாது' ‘கோடரிக் காம்பு
குலத்துக் கீனம்'
என்பவை பழமொழிகள்.