(தொ-ரை.)
ஆரியக்கூத்து ஆடுகினும்
காரியம்மேல் கண் ஆவது அறிவு
- ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தின் மேற் கண்ணாக இருப்பது அறிவுடைமை,
(ஆகையால்) பேர் இசைக்கும் சுற்றமுடன் மைந்தரும் மாதரும் சூழ -
புகழ்ந்தோதும் உறவினருடன் மக்களும் பெண்டிரும் சூழ்ந்திருக்குமாறு,
பிரபஞ்சத்தே பாரியை உற்று இருந்தாலும் - உலகத்திலே மனைவியுடன்
வாழ்ந்தாலும், திருநீற்றில் கழல்காய் போல் பற்று இல்லாமல் - திருநீற்றில் உள்ள
கழற்காய் (திருநீற்றில் படாது இருப்பது) போல ஆசையின்றி, சீர் இசைக்கும்
தண்டலையார் அஞ்சு எழுத்தை நினைக்கின் முத்தி சேரலாகும் - சிறப்புப்
பொருந்திய தண்டலையாரின் (சிவாயநம எனும்) ஐந்தெழுத்தினையும் நினைத்தால்
வீடு பெறலாகும்.
(வி-ரை.)
‘பாரியை' எனப் பின்னர்
வருவதால் முன்னர் ‘மாதரும்' என்பது
மனைவியரல்லாத காதற் கிழத்தியரைக் குறிக்கும். ‘பாரியைபு' என்று கூறுவது
(உலகத் தொடர்பு) பொருத்தமாக இருக்கும். ஆரியக்கூத்து : ஆரியர்களால்
ஆடப்படும் ஒரு வகைக் கூத்து; கழைக் கூத்தென்றுங் கூறுவர். ஆரியக்
கூத்தாடினாலும் காரியத்தின்மேற் கண்ணாயிரு' என்பது
பழமொழி. அறிவு
தானே : தான், ஏ : ஈற்றசைகள்.
37.
மரம் வைத்தவர் தண்ணீர் வார்ப்பார்.
இரந்தனையித் தனைநாளும் பரந்தனைநான்
என்றலைந்தாய்! இனிமே லேனும்
கரந்தைமதி சடையணியும் தண்டலைநீள்
நெறியாரே காப்பார் என்னும்
உரந்தனைவைத் திருந்தபடி இருந்தனையேல்1
உள்ளவெலாம் உண்டாம்! உண்மை!
மரந்தனைவைத் தவர்நாளும் வாடாமல்
தண்ணீரும் வார்ப்பர் தாமே.
|
_________________________________________________________
1. ‘இருந்தவருக்கு' என்றும் பாடம். |