பக்கம் எண் :

48

செய்வார் - ஆசிரியர் என யாவர்க்கும் உபதேசம் (சிலர்) செய்கின்றனர்,
அவர்  கிருபா  மார்க்கம்  எல்லாம் - அவருடைய அருள்நெறி  யாவும்,
குருடனுக்குக் குருடன் கோல்கொடுத்து வழிகாட்டிவரும் கொள்கைதானே!

      (வி-ரை.) ‘குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக் - குருடுங் குருடும்
குழிவீழ்ந்த வாறே' என்றார் திருமூலர் - (திருமந்திரம் : 1680)


42. ‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்'

நேற்றுள்ளார் இன்றிருக்கை நிச்சயமோ?
     ஆதலினால், நினைந்தபோதே
ஊற்றுள்ள பொருளுதவி அறந்தேடி
     வைப்பதறி வுடைமை அன்றோ?
கூற்றுள்ளம் மலையவரும் தண்டலையா
     ரே! சொன்னேன்! குடபால் வீசும்
காற்றுள்ள போதெவரும் தூற்றிக்கொள்
     வதுநல்ல கருமந் தானே?

      (தொ-ரை.) கூற்று  உள்ளம்  மலையவரும்  தண்டலையாரே -
(மார்க்கண்டனுக்காக)  எமனுடைய  மனம்  கலங்க  வந்தருளிய  தண்டலை
இறைவரே!,எவரும் குடபால் வீசும் காற்று உள்ளபோது தூற்றிக்கொள்வது
நல்ல கருமம் தானே? - யாவரும் மேலைக்காற்று வீசும்போது (தூற்றுவதைத்)
தூற்றிக்கொள்வது நல்ல வேலையாகுமன்றோ?  நேற்று  உள்ளார்  இன்று
இருக்கை நிச்சயமோ - நேற்றிருந்தவர்  இன்று  இருப்பது  உறுதியோ?,
ஆதலினால் நினைந்த போதே ஊற்று உள்ள பொருள் உதவி அறம் தேடி
வைப்பது அறிவுடைமை அன்றோ - ஆகையால், உள்ளத்தில் எண்ணம்
உண்டான பொழுதே ஆதரவாக உள்ள பொருளைக் கொடுத்து அறத்தைச்
சேர்த்து வைத்துக் கொள்வது அறிவுடைமையாகும்.